முதல்வர் கருணாநிதி 21.11.2010 அன்று சென்னை காமராஜர் அரங்கில் நடைபெற்ற மறைந்த நடிகர் ஜெமினிகணேசன் 90வது பிறந்த நாள் விழாவில் ஜெமினிகணேசன் பற்றிய குறுந்தகடு மற்றும் வரலாற்று நூலை வெளியிட்டு சிறப்புரை ஆற்றினார்.
இவ்விழாவில் கவிஞர் வாலி,வைரமுத்து,கே.பாலசந்தர்,ஜெமினிகணேசன் மகள் கமலா செல்வராஜ் ஆகியோர் பங்கேற்றனர்.
முதல்வர் கருணாநிதி பேசுகையில்,
ஜெமினியை எல்லோரும் நேசிக்கக் கூடியவர்கள். அத்தகைய அருமை நண்பர், மறைந்தும் மறையாத மாணிக்கம். விழாவை சிறப்பாக நடத்திய கமலா செல்வராஜ், ஆண்கள் கூடி, ஏன் மகன்கள் இருந்து நடத்தினால் கூட, இவ்வளவு சிறப்பாக இந்த விழாவை நடத்தியிருக்க முடியுமா என்று எண்ணுகின்ற வகையில் இந்த விழாவை நடத்தியிருப்பது பாராட்டத்தக்கது. அவருக்கு ஜெமினி சார்பில் என் வாழ்த்துகள்.
ஜெமினி கணேசன், 17.11.1920 ல் புதுக்கோட்டையில் பிறந்தவர். அவருடைய தாயார் கங்கம்மா. தந்தையார் ராமு. ஜெமினியின் அத்தை டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி. ஜெமினியின் சின்ன தாத்தா நாராயணசாமி. அவருக்கு பிறந்த இரண்டு குழந்தைகளும் இறந்துவிட்டன. எனவே அவர் குழந்தைக்காக இரண்டாம் தாரமாக எங்கள் சமுதாயத்தைச் சேர்ந்த "சந்திரம்மா'' என்ற பெண்ணை மணந்தார். அந்த மணம் கலப்பு திருமணம். இதை ஜெமினி கணேசன் பிறந்த பிராமண சமுதாயம் ஏற்றுக்கொள்ளவில்லை. அவரைச் சாதியிலிருந்தே தள்ளி வைத்தது. ஆகவே, ஜெமினி பிறந்தபோதே ஒரு புரட்சி முழக்கத்தோடு பிறந்திருக்கிறார் என்பதற்கு இது எடுத்துக்காட்டு.
ஜெமினி கணேசன் அவருடைய வாழ்க்கையில் சீர்திருத்தவாதியாக, சாதி, மதம் இவைகளையெல்லாம் மறுப்பவராக, ஒன்றே குலம், ஒருவனே தேவன் என்ற கருத்து கொண்டவராக, எல்லோரையும் நண்பர்களாகப் பெறுகிற அந்த பரந்த மனப்பான்மை உள்ளவராக வாழ்ந்து காட்டினார் அவருடைய வாழ்க்கைப் பாதை, நடந்து பார்த்து, உணர்ந்து பார்த்து, அவர் வழியிலே நாமும் புகழொளியைப் பரப்ப வேண்டும் என்று இந்த நேரத்தில் கேட்டுக்கொள்கிறேன்.
தமிழின்பால் அவருக்குள்ள ஆர்வத்தை நான் பல நேரங்களில் பார்த்திருக்கிறேன். ஒருமுறை நான் கோலாலம்பூரில் தமிழ் மாநாட்டிற்குச் சென்றிருக்கிறேன். அந்த மாநாட்டிலே திரும்பிப் பார்த்தால், வணக்கம் என்ற ஒலி கேட்கிறது. யாரென்று பார்த்தால், ஜெமினி கணேசன். அந்த மாநாட்டிற்கு வந்து எங்களோடு இரண்டொரு நாட்கள் தங்கி பொழுதைப் போக்காமல், தமிழைப் பருகி, கருத்துக்களை ஏற்றுச் சென்றவர் அருமை நண்பர் மறைந்த ஜெமினி கணேசன். அதனால்தான் எடுத்த எடுப்பிலே சொன்னேன் மறைந்தும் மறையாத மாணிக்கம் என்று நான் அவரைச் சொன்னேன். அவர் மறையவில்லை. மறைந்தவர்களை நாம் மறைந்தவர்கள் என்று சொல்லாமல், மறையாதவர்கள் என்று சொன்னால் தான் அவர்களுடைய புகழும், பெருமையும் நம்முடைய நெஞ்சிலே என்றென்றும் பதிந்து நிற்கும் என்பதை எடுத்துக்கூறி இந்த விழாவை மிக அருமையாக ஏற்பாடு செய்த அனைவருக்கும், குறிப்பாக கமலா செல்வராஜ் அவர்களுக்கு என்னுடைய நன்றியை தெரிவித்து விடைபெறுகிறேன்.
No comments:
Post a Comment