‘தமிழகத்தில் உள்ள அனைத்து பேரூராட்சிகளிலும், “கலைஞர் வீடு வழங்கும் திட்டம்’’ விரிவுப்படுத்தப்படும்’ என்று முதல்வர் கருணாநிதி தலைமையில் 23.11.2010 அன்று மாலை நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள் ளது.
இது குறித்து தமிழக அரசு 23.11.2010 அன்று வெளியிட்டுள்ள அறிக்கை:
முதல்வர் கருணாநிதி தலைமையில், துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், ‘‘கலைஞர் வீடு வழங்கும் திட்டம்’’ சம்மந்தமான ஆய்வு கூட்டம் 23.11.2010 அன்று மாலை கோட்டையில் நடந்தது.
இந்தத் திட்டத்தின்கீழ், இதுவரை 4 ஆயிரத்து 63 வீடுகள் நிறைவு பெற்றிருப்பது அறிந்து முதல்வர் கருணாநிதி தொடர்புடைய அதிகாரிகளுக்கும், பயனாளிகளுக்கும் பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்தார். இந்த ஓர் ஆண்டிலேயே&கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், திண்டுக்கல், தேனி, மதுரை, கரூர், திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரி& ஆகிய 13 மாவட்டங்களில் கணக்கெடுக்கப்பட்ட குடிசைகள் அனைத்தும் ‘‘கான்கிரீட்’’ வீடுகளாக மாற்றப்பட்டு வருகின்றன.
மேலும், அனைத்து ஊராட்சிப் பகுதிகளிலும் தற்போது தொடங்கப்பட்டு நடைபெற்றுவரும் ‘‘கலைஞர் வீடுவழங்கும் திட்டத்தை, தமிழகத்தில் உள்ள அனைத்துப் பேரூராட்சிப் பகுதிகளுக்கும் விரிவுபடுத்துவது என்றும், பேரூராட்சிகளில் உள்ள குடிசைகளைக் கணக்கெடுத்து, அடையாள அட்டைகள் வழங்குவதென்றும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
உதகமண்டலம், கொடைக்கானல் போன்ற மலைப் பிரதேசங்கள், குளிர்ப் பிரதேசங்கள் என்பதால், அந்தப் பகுதிகளில் வாழும் ஏழை எளியோர் ஓலைக் குடிசைகளுக்குப் பதிலாக, தகரத்தாலும், பிளாஸ்டிக்காலும் வேயப்பட்ட சிறு வீடுகளில் வாழ்ந்து வருகிறார்கள். சிறப்பு தேர்வாக, மலைப் பிரதேசங்களில் ஏழை எளியோர் வாழ்ந்துவரும் இத்தகைய வீடுகளையும் கணக்கெடுத்து, அடையாள அட்டைகள் வழங்குவதென்றும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
‘‘கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தின்கீழ், தமிழகத்தில் குடிசை வீடுகளே இல்லை எனும் புதிய வரலாற்றைப் படைப்பதற்காக, தமிழகத்தின் ஊராட்சிப் பகுதிகளில் உள்ள 21 லட்சம் குடிசை வீடுகளை, தமிழ்நாடு அரசின் முழு நிதி உதவியுடன் 6 ஆண்டுகளில் ‘‘கான்கிரீட்’’ வீடுகளாக மாற்றித் தருவது என்றும்; முதல் கட்டமாக இந்த ஆண்டில் (2010&2011), 3 லட்சம் குடிசைகளுக்குப் பதில், புதிய ‘‘கான்கிரீட்’’ வீடுகளைக் கட்டுவதற்காக ஒவ்வொரு வீட்டிற்கும் 75 ஆயிரம் வீதம் மானியமாக வழங்கிட ஏற்கனவே முடிவு செய்து, அதன்படி 3 லட்சம் ‘‘கான்கிரீட்’’ வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. வீடுகள் அனைத்தும் 2011, ஜனவரி மாதத்திற்குள் நிறைவுறும்.
அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, கே.என்.நேரு, தலைமை செயலாளர் மாலதி, நிதித்துறை முதன்மைச் செயலாளர் சண்முகம், ஊரக வளர்ச் சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை முதன்மைச் செயலாளர் அலாவூதீன், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மைச் செயலாளர் அசோக்வர்தன் ஷெட்டி, ஊரக வளர்ச்சித் துறை இயக்குநர் உதயசந்திரன் மற்றும் பேரூராட்சி இயக்குநர் பங்கேற்றனர். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
561 பேரூராட்சி
தமிழகத்தில் மொத்தம் 12,620 ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிகளில் உள்ள குடிசை வீடுகள் கணக்கெடுக்கப்பட்டு கான்கிரீட் வீடுகளாக மாற்றப்பட்டு வருகின்றன. அது போலவே 561 பேரூராட்சிகளிலும் குடிசை வீடுகள் கணக்கெடுக்கப்பட்டு கான்கிரீட் வீடுகளாக மாற்றப்பட உள்ளது
No comments:
Post a Comment