மதுரை முன்னாள் துணைமேயரும், மதுரை மாநகர் மாவட்ட தி.மு.க. பொருளாளருமான மிசா.எம்.பாண்டியன்- பாண்டி செல்வி தம்பதியரின் மகள் பா.பாண்டிராணிக்கும், போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கர்- கிரகலெட்சுமி தம்பதியரின் மகன் தங்க அரவிந்த்துக்கும் 03.07.2011 அன்று காலை மதுரை சத்திய சாய் நகரில் உள்ள தயா மகாலில் திருமணம் நடந்தது.
திருமணத்தை மத்திய அமைச்சர் மு.க.அழகிரி நடத்தி வைத்தார்.
விழாவில் அவர் பேசும்போது, ’’தமிழ்நாட்டிலேயே மதுரை மாவட்டத்திற்குதான் கடந்த தி.மு.க. ஆட்சியில் முதியோர் உதவித்தொகை மற்றும் நலத்திட்ட உதவிகள் அதிக அளவில் செய்யப்பட்டு உள்ளது. அப்படி இருந்தும் மதுரை மாவட்டத்தில் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியாமல் போய்விட்டது.
எனது கட்சிக்காரர்களுக்குதான் நிறைய உதவிகள் செய்து இருக்கிறேன். கடந்த தேர்தலில் தோல்வி என்றதும் மாற்றுக்கட்சிகாரர்களை விட நமது கட்சிக்காரர்கள் (தி.மு.க.) குடும்ப அரசியல் செய்வதாக விமர்சனம் செய்கிறார்கள்.
இது எனது மனதுக்கு வேதனை அளிக்கிறது. நமது கட்சிக்காரர்களின் குடும்ப நிகழ்ச்சியில் எனது குடும்பத்தினர் பெயரையோ படத்தையோ இனி போட வேண்டாம். என் குடும்பத்தினரின் படத்தையோ பெயரையோ போடவேண்டாம். அவ்வாறு செய்தால் அண்ணாவின் மீது ஆணையிட்டு சொல்கிறேன் நான் அந்த நிகழ்ச்சிக்கு வரமாட்டேன். கட்சியில் உள்ள அனைவரும் ஒற்றுமையாக இருந்து கட்சி வளர்ச்சிக்கு பாடுபட வேண்டும் என்று கேட்டு கொள்கிறேன்’’என்று பேசினார்.
அப்படி போட நினைத்தால் பேரறிஞர் அண்ணா படம், தலைவர் கருணாநிதி ஆகியோரின் பெயர் படத்தை மட்டும் போட்டால் போதும். மனப்பூர்வமாக என் படத்தையோ என் பெயரையோ போட நினைத்தால் மட்டும் போடுங்கள்.
No comments:
Post a Comment