அதிமுக அரசின் பழி வாங்கும் போக்கை தடுத்து நிறுத்த வேண்டும் என்று கவர்னர் பர்னாலாவிடம் திமுக நிர்வாகிகள் புகார் மனு தந்தனர்.
திமுகவினர் மீது நில அபகரிப்பு என்ற பெயரில் அதிமுக அரசு தொடர்ந்து வழக்குகள் போட்டு வருகிறது. இந்தப் போக்கை தடுத்து நிறுத்த வேண்டும் என்று கோரி தமிழக உள்துறை செயலாளர் ரமேஷ்ராம் மிஸ்ராவிடம் டிகேஎஸ் இளங்கோவன் எம்.பி., பொன் முத்துராமலிங்கம், ஆர்.எஸ்.பாரதி தலைமையில் திமுக வக்கீல்கள் கோரிக்கை மனு தந்தனர்.
இந்நிலையில், 22.07.2011 அன்று பகல் 12 மணிக்கு திமுக நிர்வாகிகள் டிகேஎஸ் இளங்கோவன் எம்.பி., பெ.வீ. கல்யாணசுந்தரம், கே.எஸ்.ராதாகிருஷ்ணன், கிரிராஜன் உள்ளிட்டோர் கவர்னர் மாளிகைக்கு சென்றனர். கவர்னர் பர்னாலாவிடம் புகார் மனு தந்தனர். மனுவில் கூறியிருப்பதாவது:
திமுக தொண்டர்கள் மீது அதிமுக அரசு, நில அபகரிப்பு என்ற பெயரில் பொய் வழக்குகள் போட்டு பழி வாங்கி வருகிறது. அதே நேரத்தில் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி மீது அதிமுக நிர்வாகி மூர்த்தி தந்த நில அபகரிப்பு புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதிமுக அரசின் பழி வாங்கும் போக்கை கண்டித்து வரும் ஆகஸ்டு 1&ம் தேதி தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்த திமுக முடிவு செய்துள்ளது. இந்த பிரச்னையில் நீங்கள் உடனடியாக தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
பின்னர் டிகேஎஸ் இளங்கோவன் கூறும்போது, “மனு மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக கவர்னர் உறுதி அளித்துள்ளார். திமுக ஆட்சி காலத்தில் மட்டும் நில அபகரிப்பு நடந்ததாக கூறி பழி வாங்கும் போக்கை அதிமுக அரசு கையாள்கிறது. அதிமுக எம்எல்ஏக்கள் கருப்பையா, தங்க தமிழ்செல்வன், மந்திரி அக்ரி கிருஷ்ணமூர்த்தி போன்றவர்கள் மீது புகார் தரப்பட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதையும் சுட்டிக் காட்டினோம்” என்றார்.
No comments:
Post a Comment