ராயபுரம் பகுதி திமுக சார்பில் திமுக உயர்நிலை செயல்திட்டக்குழுவின் தீர்மான விளக்க பொதுக்கூட்டம், ராயபுரம் பாலு முதலி தெருவில் 16.07.2011 அன்று இரவு நடைபெற்றது. கூட்டத்துக்கு பகுதிச் செயலாளர் கட்பீஸ் பழனி தலைமை தாங்கினார். முன்னாள் எம்எல்ஏ சேகர்பாபு முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில், திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசியதாவது:
திமுக பெறாத வெற்றியும் அல்ல, பெறாத தோல்வியும் அல்ல. இரண்டையும் ஒன்றாக கருதும் இயக்கம் திமுக. ஒரு சிலரைப்போல் தோற்றுவிட்டால் கோடநாட்டுக்கு ஓய்வு எடுக்க செல்ல மாட்டோம்.
தோற்றாலும் மக்களுக்காக தொடர்ந்து பாடுபடுவோம். ஆட்சி மாற்றம்தான் ஏற்பட்டதே தவிர மக்களுக்கு ஏமாற்றம்தான் கிடைத்துள்ளது. பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்குவதற்குள் ரூ.4 ஆயிரம் கோடிக்கு வரி வரிவிதித்துள்ளார் ஜெயலலிதா.
கடந்த தேர்தலை விட இந்த தேர்தலில் திமுகவுக்கு 2 லட்சத்து 33 ஆயிரம் வாக்குகள்தான் குறைவாக கிடைத்துள்ளது. வாக்கு வித்தியாசம் மாற நாட்கள் வெகுதொலைவில் இல்லை. புதிய தலைமை செயலகம் கட்டியதில் ஊழல் நடந்திருப்பதாவும், அதற்காக விசாரணை கமிஷன் அமைக்கப்போவதாகவும் ஜெயலலிதா கூறுகிறார். எத்தனை விசாரணை கமிஷன் அமைத்தாலும் சந்திப்பதற்கு திமுக தயாராக உள்ளது.
ஜெயலிலதா ஆட்சி பொறுப்பேற்று 60 நாட்கள் ஆகிறது. இந்த 60 நாட்களில் 60 கொலைகள், 120 வழிப்பறி, கொள்ளை சம்பவங்கள், 8 பலாத்கார சம்பவங்கள் நடைபெற்றுள்ளதாக நாளிதழ் ஒன்றில் செய்தி வெளியாகியுள்ளது. இதுதான் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் லட்சணமா? திமுகவினரை பழிவாங்க, நில ஆக்கிரமிப்பு குறித்து விசாரிக்க ஒரு தனித் துறையை உருவாக்கியுள்ளனர். தவறு நடந்து இருந்தால் வழக்கு போடலாம். பழிவாங்கும் எண்ணத்தோடு வழக்கு தொடர்ந்தால், அதற்கு அதிகாரிகளும் துணைபோனால் அதனை சட்டப்படி திமுக சந்திக்கும். நில ஆக்கிரமிப்பு என்று பூச்சாண்டி காட்டும் ஜெயலலிதா சிறுதாவூரில் தலித் மக்களுக்காக ஒதுக்கப்பட்ட இடத்தை பினாமி பெயரில் ஆக்கிரமித்தார். இதுவரை அதனை தலித் மக்களுக்கு வழங்கினாரா?
வருகிற 27ம் தேதி சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூர் நீதிமன்றத்தில் ஆஜராக ஜெயலலிதாவுக்கு சம்மன் வந்துள்ளது. இந்த வழக்கில் பலமுறை வாய்தா வாங்கி வழக்கை சந்திக்க தைரியம் இல்லாத ஜெயலலிதா எங்களை மிரட்டுவதா?
இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.
திமுக துணை பொதுச் செயலாளர் எஸ்.பி.சற்குண பாண்டியன், டி.கே.எஸ்.இளங்கோவன் எம்பி, மேயர் மா.சுப்பிரமணியன், வடசென்னை மாவட்ட பொறுப்பாளர் ஆர்.டி.சேகர், முன்னாள் எம்எல்ஏக்கள் ரங்கநாதன், செங்கை சிவம், மதிவாணன், டன்லப் ரவி, இளைய அருணா, வி.பி.ஆர்.இளம்பரிதி, கிரிராஜன், அருள்அரசன் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment