கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Thursday, July 28, 2011

சமச்சீர்க் கல்வி தரம் இல்லை என நிரூபிக்கத் தயாரா? - சவால்விடும் தங்கம் தென்னரசு


மச்சீர்க் கல்வி விவகாரத்தில், கல்வித் தரம் பற்றித்தான் அதிக​மான விமர்சனங்கள். இந்தக் கல்வித் திட்டத்தைக் கொண்டுவந்ததில், முக்கியப் பங்கு வகித்த பள்ளிக் கல்வித் துறையின் முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசுவை சந்தித்தோம்.

''கருணாநிதியைத் துதிபாடியும் கனிமொழி தொடர்பாகவும் பாடங்கள் இருந்ததால்தான் சமச்சீர்க் கல்வித் திட்டத்தை நிறுத்தியதாகச் சொல்கிறார்கள். இந்த நிலை வராமல் அப்போ​தைய தி.மு.க. அரசே தடுத்து இருக்கலாமே?''

''செம்மொழிபற்றி தலைவர் கலைஞர் எழுதி இருந்த பாடலில் அவரைப் பற்றி ஒரு வார்த்தையும் இல்லை. பழந்தமிழ்ச் சான்றோர் பெயர்கள்தான் இருக்கின்றன. கலைஞர் எழுதி இருக்கிறாரே என்பதால், சிலருக்கு ஆற்றாமை, எரிச்சல். கோவை செம்மொழி மாநாட்டின் அடுத்த கட்டச் செயல்பாடுகள் குறித்து விவாதித்த புலமையாளர் குழுதான், மாநாட்டின் மையநோக்குப் பாடலை, பாடப் புத்தகங்களில் இடம்பெறச் செய்வது என்று முடிவு செய்தனர். அதை, பாடத் திட்டக் குழு உறுப்பினர்களும் ஏற்றுக்கொண்டனர். 6-வது வகுப்பு சமூக அறிவியல் பாடத்தில், நாட்டுப்புறக் கலைகள் பற்றிய பாடத்தில், 'சங்கமம் நிகழ்ச்சியில் எங்களைப் பார்த்து இருக்கிறீர்களா’ என்று ஒருவர் கேட்பதாக, ஒரே ஒரு வாசகம் மட்டுமே இடம்பெற்று உள்ளது. மற்றபடி, கலைஞரைப் புகழ்ந்தோ... கனிமொழியைப் புகழ்ந்தோ... எந்த வார்த்தைகளும் அதில் இல்லை.''

''அவசர அவசரமாக முடிவெடுத்து, தரம் இல்லாத சமச்சீர்க் கல்வித் திட்டத்​தை உருவாக்கி​விட்டீர்கள் என்று சொல்லப்​படுகிறதே?''

''நினைத்த நேரத்தில் இதைக் கொண்டுவந்து​விடவில்லை. மற்ற மாநிலங்களுக்குச் சென்று ஆய்வு செய்து, தமிழகம் முழுவதும் கருத்துகளைக் கேட்ட பிறகே, சமச்சீர்க் கல்வித் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. பாடத் திட்டத்தைப் பொறுத்த வரை, கிராமம், நகரம், அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் என்ற வேறுபாடு இல்லாமல், எல்லாருக்கும் பொதுவானதாக இருக்க வேண்டும் என்பதுதான் எங்களது நோக்கம். இப்படி ஒரு திட்டத்தை அவ்வளவு எளிதில் கொண்டுவரவிடுவார்களா? உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றத்தில் அடுத்தடுத்து வழக்குகள் போட்டார்கள். சமச்சீர்க் கல்வித் திட்டத்தை நடைமுறைப்படுத்தலாம் என, உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்த பிறகு, முதல் கட்டமாக 1 மற்றும் 6-வது வகுப்புகளில் நடைமுறைப்படுத்தினோம். இதில், அவசரம் என்பதற்கோ தரம் இல்லை என்ற பேச்சுக்கோ, இடமே இல்லை!''

''சமச்சீர் முறையில், உயர்நிலை வகுப்புப் பாடத்தை, மெட்ரிக் மாணவர்கள் தொடக்கப் பள்ளியிலேயே படித்துவிட்டார்கள் என்றும், மெட்ரிக்கின் முந்தைய தரத்தையும் கெடுத்து​விட்டார்கள் என்றும் கடும் விமர்சனங்கள் எழுந்து உள்ளதே?''

''மாநிலக் கல்வித் திட்டத்தை அப்படியே தூக்கிவைத்து, இதுதான் சமச்சீர்க் கல்வித் திட்டம் என அறிவித்துவிடவில்லை. சி.பி.எஸ்.இ. பாடத் திட்டத்தை எந்த அடிப்படையில் தயாரிக்கிறார்களோ, அதே தேசியக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன தேசியக் கலைத் திட்டத்தின்படிதான் சமச்சீர் பாடங்களும் உருவாக்கப்பட்டு உள்ளன. ஐ.ஐ.டி. பேராசிரியர்கள், பல்கலைக்கழக, கல்லூரி ஆசிரியர்கள், கல்வியாளர்கள் எனத் திறமை, தகுதி வாய்ந்தவர்கள்தான் இந்தப் பாடத் திட்டத்தை உருவாக்கித் தந்தார்கள். தரத்தில் எந்த சமரசமும் செய்யப்படவில்லை. 'ஒவ்வொரு வகுப்பு மாணவர்களின் புரிந்துகொள்ளும் திறனுக்கு ஏற்பப் பாடங்கள் உருவாக்கப்பட வேண்டும்’ எனும் குழந்தை மன நல நிபுணர்களின் கருத்தையும் விட்டுவிடவில்லை. மாணவர்கள் படிப்படியாக, சீரான வளர்ச்சிப்போக்கில் பள்ளிப் படிப்பை நிறைவு செய்யும் வகையில், புதிய முறையை உருவாக்கினோம். இதனால், அந்தந்த வயதுக்கு மீறிய பாடச் சுமை இல்லாமல் தடுக்கப்பட்டு உள்ளது. அகில இந்திய நுழைவுத் தேர்வுகளை எளிதாக எதிர்கொள்ளக்கூடிய வகையில், புதிய மதிப்பீட்டு முறை சமச்சீர்க் கல்வித் திட்டத்தில் சேர்க்கப்பட்டு உள்ளது. அதாவது, ஒவ்வொரு பாடத்தின் முடிவிலும், கேள்விகளுக்குப் பதில் எழுதும் முறையை மாற்றி, படித்த பாடத்தில் உள்ளவற்றைப் பகுப்பாய்வு செய்து, தீர்வுகளைச் சொல்லக்கூடிய முறை சேர்க்கப்பட்டு உள்ளது. ஒவ்வொரு மாணவனின் ஆளுமைத் திறனையும் வளர்க்கக்கூடிய முறை இது. சமச்சீர்க் கல்வியைத் தரம் இல்லை என்று சொல்பவர்கள், இதை மறைத்து விடுகிறார்கள். சமச்சீர்க் கல்வியின் தரத்தைக் குறை கூறுபவர்கள், 2004-ம் ஆண்டு மெட்ரிக் பாடத் திட்டத்தையே மீண்டும் அமல்படுத்தக் கடும் முயற்சி செய்கிறார்கள். சமச்சீர் பாடத் திட்டம் தரம் இல்லை என யாராவது நிரூபிக்கத் தயாரா? இதை ஒரு சவாலாகவே கேட்கிறேன்!''

- இரா. தமிழ்க்கனல்

நன்றி : ஜூனியர் விகடன்

No comments:

Post a Comment