
லோக்பால் விசாரணை வரம்புக்குள் பிரதமரையும் கொண்டு வர வேண்டும் என டெல்லியில் நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில் திமுக திட்டவட்டமாக வலியுறுத்தியது.
இதுகுறித்து திமுக தலைமைக் கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு :
பிரதமரின் இல்லத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30 மணி முதல் 7.30 மணிவரை நடந்த கூட்டத்தில் திமுகவின் நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு பங்கேற்றார். அப்போது அவர் பேசியது:
"நாட்டின் கண்ணியமிக்க பொறுப்பாகிய பிரதமர் பதவியை லோக்பால் விசாரணை வரம்புக்குள் கொண்டு வர வேண்டும். பிரதமர் பதவி ஏற்கனவே ஊழல் ஒழிப்பு சட்டத்தின் வரம்புக்குள் வருகிறது என்றாலும், அது தொடர்பான புகார்களை விசாரிக்கும் சிபிஐ பிரதமரின் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டது. எனவே பிரதமர் மீதான புகார்கள் தொடர்பான விசாரணை வெளிப்படையாக அமையும் வகையில் பிரதமர் பதவியை லோக்பால் விசாரணை வரம்புக்குள் கொண்டு வருவது அவசியம். சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தின் அப்போதைய முதல்வர் கருணாநிதி, லோக் ஆயுக்தா வரைவு சட்டம் தயாரித்து முதல்-அமைச்சர் பதவியையும் அதன் வரம்புக்குள் சேர்த்திருந்தார். தற்போதைய வரைவு சட்டத்தில் அனைத்து மாநில முதல்வர்களும் லோக்பால் வரம்புக்குள் சேர்க்கப்பட்டுள்ளனர். பிரதமர் பதவியை லோக்பால் வரம்புக்குள் சேர்க்க தயாராக இருப்பதாக சமீபத்தில் பிரதமர் மன்மோகன்சிங் கூறியிருக்கிறார். அவரது இந்த கருத்தை திமுக ஆதரிக்கிறது. நீதிமன்றத்தின் உயர் அடுக்கையும் லோக்பால் வரம்புக்குள் கொண்டு வர வேண்டும் என்பதே எங்கள் நிலை. தேவைப்பட்டால் உயர் நீதிபதிகள் மீதான புகார்களை விசாரிக்க தனி அமைப்பை ஏற்படுத்தலாம். லோக்பால் அமைப்பின் தலைவர் அப்பழுக்கற்ற, கண்ணியமிக்க நபராக இருக்க வேண்டும். அதன் பத்து உறுப்பினர்களில் 6 பேர் நீதித்துறையில் இருந்தும், 2 பேர் அரசு தரப்பில் இருந்தும், 2 பேர் எதிர்க்கட்சி தரப்பில் இருந்தும் தெரிவு செய்யப்பட வேண்டும். தெரிவுக்குழுவின் செயலாளர் தனிச்சையான ஒருவராக இருக்க வேண்டும். மாநிலங்களுக்கு தங்களது சொந்த லோக் ஆயுக்தா அமைப்புகளை ஏற்படுத்தி கொள்ளும் உரிமை வழங்கப்பட வேண்டும். லோக்பால் சட்டத்தை நாடாளுமன்றம் இயற்ற வேண்டும். அதே வேளையில் லோக் ஆயுக்தா சட்டங்களை அந்தந்த மாநிலங்களே இயற்றி கொள்ள வழிவகை செய்ய வேண்டும் என்று டி.ஆர்.பாலு பேசினார்.
No comments:
Post a Comment