திருச்சுழி தொகுதியில் அரசு கலைக் கல்லூரி தொடங்கப்படாததற்கு அத் தொகுதியின் எம்.எல்.ஏ.வும் முன்னாள் அமைச்சருமான தங்கம் தென்னரசு கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை:
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட திருச்சுழி, நரிக்குடி, காரியாபட்டி ஒன்றியப் பகுதிகள் மிகவும் பிற்பட்ட பகுதிகள் என்பதால், திருச்சுழியில் அரசு கலைக் கல்லூரி தொடங்கப்படும் என கடந்த ஆண்டு நிதி நிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டது. திருச்சுழியில் இப்போதைய முதல்வர் கல்லூரியைத் தொடங்கி வைப்பார் என பத்திரிகைகளிலும் அறிவிப்பு செய்துவிட்டு, அக்கல்லூரியை வேறு இடத்தில் துவக்குவதாக மாற்றம் செய்து, காமராஜர் பல்கலைக்கழகம் வாயிலாக அறிவிப்பை செய்திருக்கிறார்கள். திருச்சுழி சட்டப்பேரவைத் தொகுதியில் எந்தவொரு கல்லூரியும் இல்லாத நிலையில், திமுக உறுப்பினரை எம்.எல்.ஏ.வாகத் தேர்ந்தெடுத்த ஒரே காரணத்திற்காக, அரசியல் பழிவாங்கும் நோக்குடன் அரசு கலைக் கல்லூரியை வேறு பகுதிக்கு மாற்றியுள்ளனர். திருச்சுழியுடன் சேர்த்து அறிவிக்கப்பட்ட பிற இடங்களில் எந்த மாற்றமும் இன்றி கல்லூரிகளைத் தொடங்கிவிட்டு, திருச்சுழி மக்களுக்கு மட்டும் இழைக்கப்பட்ட அநீதியைக் கண்டு மக்கள் கொதிப்படைந்துள்ளனர். திருச்சுழி பகுதி மாணவர்களின் எதிர்காலத்தை பூண்டோடு வேரறுக்கும் இச்செயலை வன்மையாகக் கண்டிக்கிறேன். கல்லூரி மாற்றத்தை வன்மையாகக் கண்டித்து, தலைமையின் அனுமதி பெற்று விரைவில் போராட்டம் நடத்தப்படும் என தென்னரசு கூறியுள்ளார்.
No comments:
Post a Comment