வக்கீல்கள் எதிர்ப்பால் உயர் நீதிமன்றத்தில் நடந்த அடிக்கல் நாட்டு விழாவில் முதல்வர் கலந்து கொள்ளவில்லை.
உயர் நீதிமன்ற வளாகத்தில் மாற்றுமுறைத் தீர்வு மையம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா 16.07.2011 அன்று நடந்தது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக முதல்வர் ஜெயலலிதா கலந்து கொள்வதாக இருந்தது. விழாவுக்கான அழைப்பிதழிலும் சிறப்பு விருந்தினர் முதல்வர் ஜெயலலிதா என்று அச்சிடப்பட்டிருந்தது.
16.07.2011 அன்று காலை 10.30 மணிக்கு விழா தொடங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அமைச்சர்கள் சண்முகவேல், செல்வி ராமஜெயம், முகமது ஜான் ஆகியோரும், சில அதிமுக எம்எல்ஏக்களும் கூட்ட அரங்குக்கு 9.30 மணிக்கே வந்து அமர்ந்தனர். அரசு வக்கீல்களும், அதிமுக வக்கீல்களும் வந்திருந்தனர். அதிமுக தொண்டர்களும் வந்தனர். முதல்வர் நிகழ்ச்சி என்பதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. முதல்வரை வரவேற்க போலீஸ் கமிஷனர் திரிபாதி காத்திருந்தார்.
10.15 மணியளவில் விழா தொடங்குவதற்கான நேரம் நெருங்கிய நிலையில் திடீரென அமைச்சர்களும், அதிமுக எம்எல்ஏக்களும் ஒருவர் பின் ஒருவராக அரங்கை விட்டு வெளியேற ஆரம்பித்தனர். அந்த பகுதி 10.25 மணிக்கு முழுவதுமாக காலியானது.
அதன்பின்னர் முதல்வர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை என்ற செய்தி தெரியவந்தது. ஜெயலலிதா மீது பெங்களூரு நீதிமன்றத்தில் சொத்துக் குவிப்பு வழக்கு நடந்து வருவதாலும், வரும் 27ம் தேதி அவர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாலும், நீதிபதிகளுடன் ஒரே மேடையில் அவர் அமரக் கூடாது என்று இளம் வக்கீல்கள் கூட்டமைப்பு எதிர்ப்பு தெரிவித்திருந்தது. உயர் நீதிமன்ற வளாகத்தில் ஆர்பாட்டமும் நடத்தினர். அதன் எதிரொலியாக ஜெயலலிதா, இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை எனக் கூறப்படுகிறது.
No comments:
Post a Comment