நில மோசடி வழக்கில் கைதான பொட்டு சுரேஷ் 25.07.2011 அன்று குண்டர் சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார்.
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகேயுள்ள வெங்கடசமுத்திரம் கிராமத்தை சேர்ந்த சிவனாண்டி, பாப்பா தம்பதிக்கு சொந்தமான 5.4 ஏக்கர் நிலத்தை அபகரித்ததாக மதுரை நகர் மாவட்ட திமுக செயலாளர் தளபதி, தலைமை செயற்குழு உறுப்பினர் பொட்டு சுரேஷ் என்ற சுரேஷ்பாபு உட்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் இவர்கள் 4 பேரும் நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதில் பொட்டு சுரேஷ் மீது மதுரை குற்றப்பிரிவு போலீசில் 109, 120பி, 143, 406, 420, 387, 506(1) ஆகிய பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தன. இதேபோல் மதுரை கே.கே.நகரை சேர்ந்த ஆடிட்டர் அமர்நாத்துக்கு சொந்தமாக ரிங் ரோடு அருகே சம்பக்குளம், கருவேலம்பட்டி பகுதியில் இருந்த 40 ஏக்கர் நிலத்தை ரியல் எஸ்டேட் அதிபர் மாணிக்கம், சூடம் மணி, உதயக்குமார், பாலமுருகன், ராஜ்குமார் ஆகியோர் போலி ஆவணம் தயாரித்து நிலத்தை பொட்டு சுரேஷ் பெயரில் பதிவு செய்தனராம்.
இதுதொடர்பாக அமர்நாத், மதுரை எஸ்.பி அஸ்ரா கார்க்கிடம் புகார் செய்தார். இந்த புகாரின் பேரில் நில அபகரிப்பு தடுப்பு தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர். இதில், நிலத்தை அபகரித்தது உண்மை என தெரியவந்தது. இதையடுத்து, அவர்கள் 6 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து, ரியல் எஸ்டேட் அதிபர் மாணிக்கத்தை போலீசார் கைது செய்தனர்.
கடந்த சட்டசபை தேர்தல் சமயத்தில் திருநகரில் நடந்த வாகன சோதனையின்போது போலீசாரை பணி செய்யவிடாமல் தடுத்ததாக பொட்டு சுரேஷ் மீது ஏற்கனவே ஒரு வழக்கு உள்ளது. அவர் மீது 120பி, 109, 406, 420. 220, 323, 294பி, 506(1) கொலை மிரட்டல், 3(1) டி.என்.பி.பி. பி.எல். ஆக்ட் (அரசு சொத்துக்களை சேதப்படுத்திய வழக்கு) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
அவரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய எஸ்.பி ஆஸ்ரா கர்க், கலெக்டர் சகாயத்துக்கு பரிந்துரை செய்தார். இதன்பேரில் பொட்டு சுரேஷை குண்டர் சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்து, நகலை சிறையில் உள்ள அவரிடம் வழங்கினர்.
பாளை சிறையில் அடைக்கப்பட்டுள்ள திமுகவினருடன் முன்னாள் அமைச்சர் சந்திப்பு :
திமுக மதுரை மாநகர் மாவட்ட செயலாளர் தளபதி, தலைமை செயற்குழு உறுப்பினர் சுரேஷ்பாபு என்ற பொட்டுசுரேஷ், திருமங்கலம் ஊராட்சி உன்றிய தலைவர் கொடிசந்திரசேகர், திருப்பரங்குன்றம் தி.மு.க. நகர செயலாளர் கிருஷ்ணபாண்டி ஆகிய 4பேரையும் நிலம் பறிப்பு வழக்கில் மதுரை குற்றப்பிரிவு போலீசார் கடந்த 19-ந்தேதி கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட இவர்கள் 4பேரும் பாளை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களை மத்திய அமைச்சர் மு.க.அழகிரி கடந்த 20-ந்தேதி பாளை சிறையில் சந்தித்து பேசினார். இந்நிலையில் முன்னாள் அமைச்சரும், திருப்பத்தூர் தொகுதி எம்.எல்ஏ.வுமான பெரியகருப்பன் 25.07.2011 அன்று சந்தித்து பேசினார்.
முன்னதாக பொட்டு சுரேஷ் உள்ளிட்ட 4பேரையும் தூத்துக்குடி மாவட்ட தி.மு.க. செயலாளர் பெரியசாமி சந்தித்தார்.
No comments:
Post a Comment