காமராஜரின் 109வது பிறந்த நாளையொட்டி அவரது சிலைக்கு ஸ்டாலின் மற்றும் தி.மு.க நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் அண்ணா சாலையில் உள்ள காமராஜர் சிலையின் கீழ் வைக்கப்பட்டிருந்த படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அவரைத் தொடர்ந்து மத்திய மந்திரி காந்திசெல்வன், மேயர் மா.சுப்பிரமணியன், ஜெ.அன்பழகன், சேகர்பாபு, ஆர்.டி.சேகர், எ.வ.வேலு எம்எல்ஏ, முன்னாள் அமைச்சர் சற்குணபாண்டியன் உள்ளிட்ட பலர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
காமராஜர் பிறந்தநாளை கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடுவதை தடுப்பதா?
காமராஜர் பிறந்தநாளை, �கல்வி வளர்ச்சி நாளாக� கொண்டாடுவதை தடுக்கும் விதமாக அரசு செயல்பட்டதற்கு பல்வேறு தலைவர்களும், நாடார் சமூக பிரமுகர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.
தங்கபாலு (காங்கிரஸ்):
தமிழகத்தில் காமராஜருக்கு இணையாக தலைவர்கள் வேறு யாரும் இல்லை. சமூக முன்னேற்றத்துக்காக தன்னை அர்ப்பணித்து கொண்டவர் காமராஜர். அவர் புகழ் நிலைக்கும் வகையில் கல்வி வளர்ச்சி நாள் என்னும் திட்டத்தை முந்தய திமுக அரசு கொண்டு வந்து செயல்படுத்தியது. அதற்கான நிதியை ஒதுக்கியது. தொடர்ந்து அந்த ஆட்சியில் கல்வி வளர்ச்சி நாள் கொண்டாடப்பட்டது. அதை இப்போதைய அதிமுக அரசும் தொடர வேண்டும்.
விஜயதரணி, ஜான்ஜேக்கப் (காங்கிரஸ் எம்எல்ஏக்கள்):
கடந்த ஆண்டு வரை காமராஜரின் பிறந்த நாள் தமிழக அரசு சார்பில் கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு விழா கொண்டாடப்படவில்லை. இது கண்டனத்துக்குரியது. இனி வரும் ஆண்டுகளிலாவது காமராஜர் பிறந்த நாளை கொண்டாட அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திருமாவளவன் (விடுதலை சிறுத்தைகள்):
திமுக அரசு அறிவித்த ஒரே காரணத்துக்காக, காமராஜர் பிறந்த நாளை கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாட தமிழக அரசு எந்த வழிகாட்டுதலையும் வழங்கவில்லை. இதனால் பள்ளிகளில் இந்த விழா திட்டமிட்டபடி நடைபெறவில்லை என்பது வேதனை அளிக்கிறது.
மேயர் மா.சுப்பிரமணியன்(சென்னை மாநகராட்சி மேயர்):
ஒவ்வொரு ஆண்டும் காமராஜர் பிறந்தநாளை, கல்வி வளர்ச்சி நாளாக பள்ளிகளில் கொண்டாட அரசு நிதி ஒதுக்குவது வழக்கம். ஆனால், நேற்று முன்தினம் வரை பள்ளி கல்வித்துறையில் இருந்து எந்தவித அறிவிப்பும் வரவில்லை. இது கண்டனத்துக்குரியது, கண்டிக்கத்தக்கது. இதனால், மாநகராட்சி பள்ளிகளில் கல்வி வளர்ச்சி நாளை கொண்டாட முடியாத நிலை ஏற்பட்டது.
ஆர்.சந்திரன் ஜெயபால்(தமிழ்நாடு சத்திரிய நாடார் இயக்க நிறுவன தலைவர்):
காலம் காலமாக ஒவ்வொரு அரசும், முன்னாள் முதல்வர் காமராஜர் என்ற முறையில் அவரது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடி வருகிறது. ஆனால், தற்போதைய அரசு பள்ளிகளில் காமராஜர் பிறந்தநாளை கொண்டாட முன்னேற்பாடுகள் செய்யாமல் இருந்தது வருந்தத்தக்கது. இனி வரும் காலங்களில் அரசு காமராஜர் பிறந்தநாள் விழாவை வெகு சிறப்பாக கொண்டாட வேண்டும்.
மயிலை சி.பெரியசாமி நாடார்(தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர்):
காமராஜர் விழா பள்ளிகளில் நடக்கும் போது, இளம் மாணவர்கள் காமராஜரை பற்றி தெரிந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. இதன் மூலம் பள்ளி மாணவர்கள் சிறப்பான ஒழுக்கம் சிறிய வயதிலேயே ஏற்பட வழி வகுத்தது. தற்போது கல்வி வளர்ச்சி நாள் விழாவை தமிழக அரசு நிறுத்தியுள்ளது காமராஜர் பெயரை சீர்குலைக்கும் செயல். இதை வன்மையாக கண்டிக்கிறோம்.
வி.பி.மணி(திருவல்லிக்கேணி வியாபாரிகள் சங்க தலைவர்):
காமராஜர் பிறந்தநாள் விழாவை அரசு புறக்கணித்துள்ளது கண்டிக்க தக்கது. முந்தைய அரசின் திட்டங்களை நிறுத்துவது போல, காமராஜர் பிறந்தநாளை தற்போதைய அதிமுக அரசு நிறுத்தியுள்ளது.
இதனால், வியாபாரிகள் ஒன்று சேர்ந்து பள்ளிகளில் பேச்சு போட்டி, பாட்டு போட்டி மற்றும் விளையாட்டு போட்டிகள் நடத்தி காமராஜர் பிறந்த நாளை வெகு விமர்சையாக கொண்டாடினோம். அதை போல அனாதை விடுதி மாணவர்களுக்கும் நல உதவிகளை செய்தோம்.
மாலையில் வந்த ஞானோதயம் :
காமராஜர் பிறந்த நாளை கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாட வேண்டும் என்று கடந்த திமுக ஆட்சியில் முடிவு செய்யப்பட்டது. இதற்காக ஒரு அரசாணையும் போடப்பட்டது. அந்த அரசாணை போடும்போதே கல்வி வளர்ச்சி நாள் கொண்டாட்டத்துக்கு வேண்டிய நிதி எதிலிருந்து பெற வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது. ஆனால் கல்வி வளர்ச்சி நாளான 15.07.2011 அன்று பள்ளிகள் கொண்டாட வேண்டுமா, வேண்டாமா என்பது குறித்து 14ம் தேதி மாலை 6 மணி வரை அரசு தரப்பில் இருந்து எந்த அனுமதியும் வரவில்லை.
இதனால் பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் என்ன செய்வது என்று புரியாமல் தவித்தனர். 6 மணிக்கு மேல் அரசு அனுமதி அளித்தது. விழாவுக்கான செலவுகளை எப்படி ஈடு செய்வது என்பது குறித்து எதுவும் சொல்லவில்லை. இதனால் போன் மூலம் கல்வி அதிகாரிகள் அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு தகவல் கொடுத்தனர்.
பல தலைமை ஆசிரியர்கள் போனை எடுக்கவே இல்லை. இதனால் பல பள்ளிகளில் 15.07.2011 அன்று காமராஜர் பிறந்தநாள் விழாவை கொண்டாடவில்லை. சில பள்ளிகள் செலவுக்கு பணம் இல்லாமல் விழாவை கொண்டாடவில்லை. கடந்த ஆட்சியில் இதற்கான செலவு பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் ஈடுசெய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
No comments:
Post a Comment