கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Monday, July 18, 2011

சமச்சீர் கல்வி தொடர்பான தீர்ப்பு: கலைஞர் நீதிமன்றத்தின் மூலம் வெற்றி பெற்றிருக்கிறார் - பொன்முடி



சமச்சீர் கல்வி திட்டத்தை நடப்பாண்டில் செயல்படுத்த வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இதுகுறித்து முன்னாள் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறியுள்ளதாவது,


சமச்சீர் கல்வியை பொறுத்த வரையில் கலைஞர் ஆட்சியில் ஒரு சமூக நோக்கத்தோடு கொண்டுவரப்பட்ட திட்டமாகும். இதனை ஜெயலலிதா அரசு எப்படியாவது தடுத்து நிறுத்த வேண்டும் என்று பல்வேறு முயற்சிகளை எடுத்தார்கள். அதற்கு நீதிமன்றம் உடந்தையாக இல்லாமல், சமச்சீர் கல்வியை இந்த ஆண்டு முதலே ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை நிறைவேற்றப்பட வேண்டும் என்று அறிவித்திருப்பதும், 22ஆம் தேதிக்குள் சமச்சீர் கல்வி பாட புத்தகங்கள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டிருக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருப்பதும், பெற்றோர்களுக்கும், மாணவர்களுக்கும் மகிழ்ச்சியான செய்தி.

ஆக, சமூக சீர்த்திருத்த திட்டத்தில் கலைஞர் நீதிமன்றத்தின் மூலம் வெற்றி பெற்றிருக்கிறார். இதுபோன்றவைகளை இந்த அரசு செய்யாமல் நல்ல திட்டங்களை செயல்படுத்த முன்வர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்றார்.

சமச்சீர் கல்வி - சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பு குறித்து வழக்கறிஞர் பாலு விளக்கம் :

சமச்சீர் கல்வியை அமல்படுத்த வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை வழக்கறிஞர்கள் வரவேற்றுள்ளனர்.


சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய வழக்கறிஞர் பாலு,

தமிழகம் முழுவதும் ஆவலோடு எதிர்பார்க்கப்பட்ட சமச்சீர் கல்வி தொடர்பான தீர்ப்பை தலைமை நீதிபதி வழங்கினார். அந்த தீர்ப்பில் புதிதாக பொறுப்பேற்ற அரசு சமச்சீர் கல்வி திட்டத்தை நிறுத்தி வைக்க கொண்டு வந்த சட்டத்தை ரத்து செய்தது. சமச்சீர் கல்வி திட்டம் இந்த ஆண்டு முதலே தொடர வேண்டும் என்று தீர்ப்பு வழங்கியிருக்கின்றார். சமச்சீர் கல்வி திட்டத்தை ரத்து செய்ய புதிய அரசு கொண்டு வந்த அந்த சட்டம், எந்த ஆய்வும் மேற்கொள்ளாமல் அவசர அவசரமாக கொண்டு வரப்பட்டது என்பதற்கான ஆதாரங்கள் முழுமையாக உள்ளது என்று நீதிபதிகள் தெரிவித்து, மாணவர்கள் மேலும் குழப்பத்திற்கு ஆளாகாமல், அவர்கள் சமச்சீர் கல்வி திட்டத்தை தொடருவதற்கு ஏதுவாக, தமிழக அரசு 22ஆம் தேதிக்குள்ளாக சமச்சீர் கல்வி திட்ட புத்தகங்களை வழங்க வேண்டும் என்பதை நீதிபதி தெரிவித்துள்ளார்.


தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர், இந்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றம் சென்று தடை வாங்க வேண்டும். எனவே இந்த 22ஆம் தேதி என்பதை ஒத்திவைத்து, காலஅவகாசம் வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அதற்கு தலைமை நீதிபதி வாய்ப்பு வழங்க மறுத்து, இந்த உத்தரவு இன்றைய தேதியில் இருந்து அமல்படுத்தப்படுகிறது. நீங்கள் வேண்டுமானால், உச்சநீதிமன்றம் சென்று தடை வாங்குவதற்கு எந்த தடையும் இல்லை. அது உங்கள் விருப்பம். நாங்கள் தீர்ப்பை வழங்கி விட்டோம். இன்றைய தேதியில் இருந்து அமலுக்கு வருகிறது.


இந்த தீர்ப்பில் இன்னொன்றையும் சொல்லியிருக்கிறார்கள். உச்சநீதிமன்றம் சட்டிக்காட்டிய அந்த நிபுணர் குழு வழங்கியுள்ள அந்த கருத்துக்களின் அடிப்படையில், சமச்சீர் கல்வி பாடத்திட்டத்தில் உள்ள சில பகுதிகளை நீக்க வேண்டும் என்றோ, அல்லது புதிதாக சில பகுதிகளை சேர்க்க வேண்டும் என்றாலோ, அதற்காக தனி பாடப்புத்தகத்தை தயாரித்து 3 மாத காலத்திற்குள்ளாக மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் வழங்க வேண்டும் என்று கூறி, புதிதாக பொறுப்பேற்ற இந்த அரசு கொண்டு வந்த சமச்சீர் கல்வி ரத்து செய்யும் சட்டத்தை ரத்து செய்து நீதிபதிகள் தீர்ப்பு வழங்கியிருக்கிறார்கள்.

இந்த தீர்ப்பு சமச்சீர் கல்வி வேண்டும் என்று கேட்ட தமிழகத்தில் உள்ள அனைத்து மாணவர்கள், பெற்றோர்கள், சமூக நீதியில் அக்கறை கொண்டர்களுக்கு கிடைத்த வெற்றி என்றே கருதுகிறோம் என்றார்.

சமச்சீர் கல்வி மேல்முறையீடு கூடாது - தமிழக அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல் :

பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,


தர்மத்தின் வாழ்வுவதன்னை ஏதுகவ்வும்: தர்மம் மறுபடியும் வெல்லக் காண்போம் என்ற பாரதியாரின் கூற்றுக்கிணங்க, தமிழ்நாட்டில் சமச்சீர்க் கல்வித் திட்டத்தை கிடப்பில் போட தமிழக அரசு மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தையும் சென்னை உயர்நீதிமன்றம் முறியடித்திருக்கிறது.


தமிழ்நாட்டில் நடப்பாண்டிலிருந்தே அனைத்து வகுப்புகளுக்கும் சமச்சீர்க் கல்வியை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் மகிழ்ச்சியுடன் வரவேற்கிறேன்.


சமத்துவ சமுதாயம் ஏற்பட சமச்சீர்க் கல்விதான் முதல்படி என்பதால், சமச்சீர்க் கல்வியை ஏற்படுத்த பாமக கடந்த 15 ஆண்டுகளாகப் போராடி வருகிறது. பாமகவின் முயற்சியால் தான் தமிழகத்தில் கடந்த ஆண்டு ஒன்றாம் வகுப்புக்கும் 6ஆம் வகுப்புக்கும் சமச்சீர்க் கல்வி அறிமுகம் செய்யப்பட்டது.


ஆனால், புதிதாக பதவியேற்ற அதிமுக அரசு சமச்சீர்க் கல்வியை நடைமுறைப்படுத்திவிடக் கூடாது என்பதற்காக பல வழிகளிலும் முயன்றது. ஆனால் அரசு மேற்கொண்ட அத்தனை முயற்சிகளும் தோல்வியடைந்து, சமச்சீர்க் கல்வியை நடைமுறைப்படுத்தியே தீரவேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டிருக்கிறது.


எனினும், உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பிலிருந்து பாடம் கற்றுக்கொள்ளாத தமிழக அரசு, சமச்சீர்க் கல்வித் திட்டத்தை எதிர்த்து மீண்டும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்போவதாகக் கூறி பெற்றோர்கள் மற்றும் மாணவர்களின் சாபத்திற்கு ஆளாகியுள்ளது.


சமச்சீர்க் கல்வித் திட்டத்தை செயல்படுத்துவதில் தமிழக அரசு கடைப்பிடித்த பிடிவாத போக்கினால், கடந்த 2 மாதங்களாக மாணவர்கள் பள்ளிக்குச் சென்றும், பாடம் படிக்க முடியாமல் காலத்தை வீணடித்துக் கொண்டிருக்கின்றனர். பள்ளிகளில் பாடங்கள் நடத்தப்படாததால் முதல் பருவத் தேர்வு நடைபெறவில்லை. செம்படம்பர் மாதத்தில் காலாண்டுத் தேர்வு நடத்த வேண்டுமானால் அதற்கு இப்போதிலிருந்தாவது பாடங்களை தொடங்க வேண்டும். ஆனால், தமிழக அரசோ மாணவர்களின் எதிர்காலம் சீரழிந்தால்கூட பரவாயில்லை. நாங்கள் எடுத்த முடிவை செயல்படுத்தியே தீருவோம் என்பதுபோல பொறுப்பற்ற வகையில் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது.


சமச்சீர்க் கல்வியை எதிர்த்து ஏற்கனவே உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் அதற்கு தடை விதிக்க முடியாது என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெளிவாக கூறிவிட்டனர். எனவே மீண்டும் மேல்முறையீடு செய்வதால் எந்தப் பயனும் இல்லை. ஒரு நல்ல அரசுக்கு அதன் முடிவில் பிடிவாதமாக இருப்பதைவிட, மக்கள் நலனைக் காப்பதுதான் முக்கியம். இதை உணர்ந்து, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யும் திட்டத்தை கைவிட்டு, உயர்நீதிமன்ற அறிவுரைப்படி தமிழ்நாட்டில் உடனடியாக சமச்சீர்க் கல்வித் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு ராமதாஸ் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

சமச்சீர் கல்வி உயர்நீதிமன்றத் தீர்ப்பை மதித்து தமிழக அரசு செயல்பட வேண்டும் - திருமாவளவன் :

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,


தமிழக அரசு சமச்சீர்க்கல்வித் திட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டுமென உயர்நீதிமன்றம் 18.07.2011 அன்று தீர்ப்பளித்திருப்பது பெரும் மகிழ்ச்சியையும் நீதித்துறையின் மீது நம்பிக்கையையும் ஏற்படுத்தியிருக்கிறது.


சமச்சீர்க் கல்வித் திட்டத்தை நடைமுறைப்படுத்தாமல் சாக்குப் போக்குச் சொல்லி முற்றிலும் முடக்குவதற்கு தமிழக அரசு மேற்கொண்ட முயற்சிகள் இத்தீர்ப்பின் மூலம் முறியடிக்கப்பட்டுள்ளன. இத்தீர்ப்பைப் பெறுவதற்காக நீதிமன்றங்களில் வழக்காடியவர்களுக்கும், களத்தில் போராடியவர்களுக்கும் விடுதலைச் சிறுத்தைகளின் சார்பில் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.


பாடத்திட்டத்திலுள்ள குறைகளைப் போக்கவும், சரிசெய்யவும் வல்லுநர் குழு அமைத்துக்கொள்ளலாம் எனவும், 1 முதல் 10 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு சமச்சீர்க் கல்வித் திட்டத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட பாடப் புத்தங்களை 22.07.2011 ஆம் தேதிக்குள் வழங்க
வேண்டுமெனவும், பழைய பாடத்திட்டத்தின்படி உருவாக்கப்பட்ட பாடப் புத்தகங்களை வழங்குவதற்குத் தடை விதித்தும் உயர்நீதிமன்றம் அளித்திருக்கிற தீர்ப்பு கடந்த 2 மாத காலமாக பள்ளிக் கல்வி நிர்வாகத்தில் நிலவிய பெரும் குழப்பத்தைப் போக்குவதாக அமைந்துள்ளது.


இந்நிலையில் தமிழக அரசு மீண்டும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யபோவதாக வெளியாகியுள்ள செய்தி, பள்ளி மாணவர்களின் கல்வியைப் பற்றி கவலைப்படாமல் செயல்படும் தமிழக அரசின் பிடிவாதப் போக்கை வெளிப்படுத்துகிறது. பள்ளி மாணவர்களின் எதிர்காலத்தைக் கருத்தில்கொண்டு உயர்நீதிமன்றத் தீர்ப்பை மதித்து தமிழக அரசு பெருந்தன்மையோடு இப்பிரச்சனையை அணுக வேண்டுமெனவும் மேல்முறையீடு செய்யும் நிலைப்பாட்டைத் தவிர்க்க வேண்டுமெனவும் விடுதலைச் சிறுத்தைகள் கேட்டுக்கொள்கிறது.


இவ்வாறு திருமாவளவன் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

சமச்சீர் கல்வி மேல் முறையீடு தவிர்க்கபடவேண்டும் - தா.பாண்டியன் :

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,


இந்தியக் கம்யூனிட்ஸ்ட் கட்சி சமச்சீர் கல்வி திட்டம் தேவை என்பதனையும் காலதாமதமின்றி நடைமுறை படுத்த வேண்டும் என்பதனையும் தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளது.


தமிழ்நாடு அரசும், நீதிமன்றத்தில் அரசு வழக்குரைஞர்கள் மூலம் சமச்சீர் கல்வி கொள்கைதான் தங்களது நிலை என்று உறுதிப் படுத்தி உள்ளது.


தற்போது வெளியாகி உள்ள தமிழ்நாடு உயர்நீதிமன்ற தீர்ப்பு சமச்சீர் கல்வியை நடைமுறை படுத்த வேண்டிய அவசியத்தை குறிப்பிட்டதோடு, இந்த ஆண்டு ஜுன் மாதம் துவங்கிய பள்ளிகளில் 60 நாட்கள் ஆனபிறகும் படிக்க வேண்டிய புத்தகங்கள் வழங்கப்படாது இருப்பதால், குழந்தைகளின் கல்வி வளர்ச்சியை கருத்தில் கொண்டு தயாரிக்கப்பட்ட பாடபுத்தகங்களை 22 ம் தேதிக்குள் வழங்கிவிடுமாறு ஆணையிட்டுள்ளது.


அதே தீர்ப்பில் தமிழ்நாடு அரசு பாடதிட்டங்கள் செழுமை படுத்தபட வேண்டும் என்று கூறிய மனுவை ஏற்று செம்மைபடுத்தலாம் அதை வருகிற ஆண்டில் பயன்படுத்திகொள்ளலாம் என தீர்பளித்திருப்பது, மாணவர் பெற்றோர்கள், கல்வியாளர்களால் வரவேற்கபடுகிறது. இந்த தீர்ப்பில் தமிழக அரசின் நடவடிக்கைகளை தடுப்பதாகவோ குறைகாண்பதாகவோ எந்த வாசகமும் இல்லாத நிலையில் மேல் முறையீடு தவிர்க்கபடவேண்டும் என்ற மக்களின் உணர்வை நாங்கள் வற்புறுத்துகிறோம்.

இவ்வாறு தா.பாண்டியன் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

அப்துல் மஜீத்: (தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி):
சமச்சீர் கல்வி என்ற தலைப்பே, ஏழை பணக்காரன் என்ற வித்தியாசம் இல்லாத முறையை குறிப்பது. இதை கடந்த ஆட்சியில் நடைமுறைப்படுத்தியபோது நாங்கள் வரவேற்றோம். அதரித்தோம். கருத்து தெரிவித்தோம். சமச்சீர் கல்வி என்பது முறையான கல்வியை கொடுப்பது. பண அடிப்படையில் வித்தியாசம் இல்லாமல் உள்ளது. இப்போது அதை உயர்நீதி மன்றம் உறுதி செய்து தீர்ப்பு வழங்கியுள்ளது. அந்த தீர்ப்பை வரவேற்கிறோம்.
எஸ்.எஸ்.ராஜகோபால்(கல்வியாளர்):
இந்த தீர்ப்பு வரவேற்க தக்கது. நியாயமானது. எதிர்பார்த்தது. ஒரு கோடி குழந்தைகளின் கல்விக்கு விடிவு காலம் கொடுத்த தீர்ப்பு. குழந்தைகள் நிம்மதியாக படிக்க வேண்டும் என்பதற்காக வழங்கியுள்ள தீர்ப்பு. சமச்சீர் கல்வி விஷயத்தில் இனிமேலும் அரசு கவுரவம் பார்க்காமல் அதை நடைமுறைப்படுத்த வேண்டும்.
வா.அண்ணாமலை (அகில இந்திய ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் தென்னிந்திய செயலாளர்):
இது சமூக நீதியை காத்த தீர்ப்பாக இது அமைந்துள்ளது. தமிழக குழந்தைகளின் நலனை கருத்தில் கொண்டு எந்தவித பாரபட்சமும் பார்க்காமல் அரசு உடனடியாக சமச்சீர் கல்வியை நிறைவேற்ற வேண்டும்.
பிரின்ஸ் கஜேந்திரபாபு(பொதுக்கல்விக்கான மாநில மேடை):
உயர்நீதி மன்றம் வழங்கிய தீர்ப்பை நாங்கள் எதிர்பார்த்ததுதான். இதற்கு பிறகும் அரசு சமச்சீர் கல்வியை நடைமுறைப்படுத்துவதில் தாமதம் செய்யக்கூடாது. அப்படி செய்தால் மேலும் சில நாட்கள் மாணவர்கள் பாடம் படிக்க முடியாமல் மன அழுத்தத்துக்கு ஆளாக நேரிடும்.
ஆர்.வேல்முருகன்(இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம்):
பாடப்புத்தகம் இல்லாமல் பள்ளிக்கு செல்லும் குழந்தைகளின் மனநிலையையும், அவர்களை தயார்படுத்தி அனுப்பும் பெற்றோரின் மனவேதனையையும் அரசு புரிந்து கொள்ள வேண்டும்.
பொன்குமார்(தமிழ்நாடு விவசாயிகள்&தொழிலாளர்கள் கட்சி):
இது இப்பிரச்னையின் ஆழத்தை அழுத்தமாக உயர்நீதி மன்றம் உணர்ந்துள்ளதை காட்டுகிறது. எனவே முதல்வர் தன பிடிவாதத்தை கைவிட்டுவிட்டு உடனடியாக சமச்சீர் கல்வியை நடைமுறைப்படுத்த முன்வரவேண்டும்.
சமச்சீர் கல்வியை படித்தால் கவுரவம் உயரும் - நாஞ்சில் சம்பத் :

நெல்லை மாவட்டம் சங்கரன் கோயில் நகரில், மதிமுகவின் 18ஆம் ஆண்டு துவக்க விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய அக்கட்சியின் கொள்கைப் பரப்பு செயலாளர் நாஞ்சில் சம்பத்,


சமச்சீர் கல்வியை எடுத்தப் பிறகு, சர்க்கார் எதற்கு. ஒன்றரை லட்சம் குழந்தைகளின் எதிர்காலம் திண்டாடுகிறது. கலைஞர் ஆட்சியில் உருவான பணிகளில் மகத்தான பணி சமச்சீர் கல்வி. அவரது கற்பனையில் உருவானது அல்ல. கலைஞர் அச்சடித்த சமச்சீர் கல்வி பாடத்திட்டத்தை படித்தீர்களா. இந்த மாதிரியான பாடத்திட்டத்தினை படித்திருந்தால், என்னுடைய கவுரவம் உயர்ந்திருக்கும்.

எந்த குற்றமும்செய்யாத எங்கள் குழந்தைகள் மீது ஏன் இந்த தாக்குதல். சமச்சீர் கல்வி வேண்டுமா அல்லது வேறு பாடத் திட்டம் வேண்டுமா என்று தமிழ்நாட்டு மக்களிடம் வாக்கெடுப்பு நடத்த தயாரா. என சவாலை விடுத்தார் நாஞ்சில் சம்பத்.

உயர் நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்புக்குத் தமிழக அரசு தலை வணங்க வேண்டும் - தங்கபாலு :

சமச்சீர் கல்வித் திட்டத்தை இந்த ஆண்டே அமல்படுத்த வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்புக்குத் தமிழக அரசு தலை வணங்க வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.வீ. தங்கபாலு வலியுறுத்தியுள்ளார்.


இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை:


இந்த ஆண்டே சமச்சீர் கல்வியை அமல் செய்ய வேண்டும், அதற்கான புத்தகங்களை இந்த மாதம் 22 ம் தேதிக்குள் மாணவர்களுக்கு வழங்க வேண்டும் என்ற தீர்ப்பு மாணவர்களுக்கும் பெற்றோருக்கும் மகிழ்ச்சி தருவதாக உள்ளது. சமச்சீர் கல்வித் திட்டத்தை ரத்து செய்யவில்லை என்றும் குறைகளை நீக்கி அடுத்த ஆண்டு அமல் செய்வோம் என்றும்தான் உச்சநீதிமன்றத்தில் அதிமுக அரசு கூறியுள்ளது.

எனவே உயர் நீதிமன்றத்தின் இத் தீர்ப்பு அரசுக்கு வெற்றியோ தோல்வியோ அல்ல. எனவே, கெளிரவம் பார்க்காமல் சமச்சீர் கல்வித் திட்டத்தை அரசு உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று தங்கபாலு கூறியுள்ளார்.

சமச்சீர் கல்வியை இந்த ஆண்டே அமல் செய்ய வேண்டும் - மா.கம்யூ., கோரிக்கை :

சமச்சீர் கல்வியை இந்த ஆண்டே அமல் செய்ய வேண்டும் என்ற உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்யக் கூடாது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.


இதுதொடர்பாக தமிழ்நாடு மார்க்சிஸ்ட் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கை:


சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை மார்க்சிஸ்ட் கட்சி வரவேற்கிறது. அதேசமயம் தீர்ப்பு குறித்து தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் கருத்து தெரிவிக்கையில், உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்யும் என்று கூறியுள்ளதாகத் தெரிகிறது.


பள்ளிகள் திறந்து ஒரு மாத காலம் கடந்துவிட்ட நிலையில், மேலும் காலம் தாழ்த்துவது மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்களுக்கு மிகுந்த மன உளைச்சலையும், நடைமுறைச் சிக்கலையும் ஏற்படுத்தும்.

எனவே மேல்முறையீடு செய்யும் எண்ணத்தைக் கைவிட்டு உயர் நீதிமன்றத் தீர்ப்பை ஏற்று சமச்சீர் கல்வித் திட்டத்தின் முக்கிய அம்சமான பொதுப்பாடத் திட்டத்தை இந்தக் கல்வி ஆண்டிலேயே அமல் படுத்த வேண்டும் என ராமகிருஷ்ணன் கோரியுள்ளார்.

சமச்சீர் கல்வி மேல் முறையீடு செய்ய உள்ள தமிழக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் :

சமச்சீர் கல்வி தொடர்பாக உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ள தமிழக அரசை கண்டித்து 19.07.2011 அன்று காலை 10.30 மணிக்கு பள்ளி கல்வி இயக்ககம் வளாகத்தில் இந்திய மாணவர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் முற்றுகை போராட்டம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்களின் எதிர்காலத்தை இருளில் தள்ளிவிடாமல் சமச்சீர் கல்வியை நடைமுறைப்படுத்த வேண்டும் - வைகோ :

தவறுக்கு மேல் தவறு செய்து நாட்களை வீணடித்து மாணவர்களின் எதிர்காலத்தை இருளில் தள்ளிவிடாமல், உடனடியாக சமச்சீர் கல்வித் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டுமென்று மதிமுக பொதுச்செயலர் வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார்.


இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:


தமிழக அரசு கொண்டுவந்த சமச்சீர் கல்வித் திருத்த சட்டத்தை ரத்துசெய்து, சமச்சீர் கல்வி முறையை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று உயர்நீதிமன்றம் வரவேற்கத்தக்க சிறப்பான தீர்ப்பை வழங்கியுள்ளது.


தமிழக அரசின் வீண் பிடிவாதத்தால் கோடை விடுமுறைக்குப் பிறகு பள்ளிகள் திறக்க வேண்டிய தேதியில் திறக்கப்படாமல் பதினைந்து நாட்கள் தள்ளிப்போனது. பின்னர் திறந்து ஒன்றரை மாதங்கள் ஆகியும் பள்ளி மாணவர்கள் எந்தப் பாடங்களைப் படிப்பது என்ற தவிப்பும் குழப்பமும் ஏற்பட்டுள்ளது. தமிழக வரலாற்றிலேயே இதுபோன்ற ஒரு சூழல் கல்வித் துறையில் இதுவரை ஏற்பட்டதில்லை. எனவேதான், உயர்நீதிமன்றம் சமச்சீர் கல்வித் திட்டத்தை நடைமுறைப்படுத்த வரும் 22 ஆம் தேதிக்குள் சமச்சீர் கல்விக்கான பாடப்புத்தகங்களை வழங்க வேண்டும், ஆசிரியர்கள் பாடங்களை தொடங்க வேண்டும் என்றும் குறைபாடுகளை களைந்து புதிய பாடங்களை கூடுதல் புத்தகங்களாக அச்சிட்டு மூன்று மாதத்திற்குள் வழங்க வேண்டும் என்றும் தெளிவாக தீர்ப்பு வழங்கியுள்ளது.

ஆனால், இதனை ஏற்காமல் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்போவதாக அறிவித்துள்ள தமிழக அரசின் போக்கை வன்மையாக கண்டிப்பதுடன் தவறுக்கு மேல் தவறு செய்து நாட்களை வீணடித்து மாணவர்களின் எதிர்காலத்தை இருளில் தள்ளிவிடாமல், உடனடியாக சமச்சீர் கல்வித் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு வைகோ தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

சமச்சீர் கல்வி - நெடுமாறன் வேண்டுகோள் :

சமச்சீர் கல்வித் திட்டத்தை எதிர்த்து மேல்முறையீடு செய்வதால் ஏற்படும் காலதாமதம் மாணவர்களின் எதிர்காலத்தை பெரிதும் பாதிக்கும் என்று மக்கள் உரிமைக் கூட்டமைப்பின் அமைப்பாளர் பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார்.


இதுகுறித்து பழ.நெடுமாறன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,


10 ம் வகுப்பு வரை அனைத்து வகுப்புகளுக்கும் இந்த ஆண்டிலிருந்தே சமச்சீர் கல்வியை அமல்படுத்த வேண்டும் என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கிறது. ஆனால் இந்தத் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்ய தமிழக அரசு செய்துள்ள முடிவு தவறானது மட்டுமல்ல, பின்னோக்கி அடி எடுத்து வைப்பதாகும். ஏற்கெனவே 1 மற்றும் 6 ஆம் வகுப்பு வரை சமச்சீர் கல்வி அறிமுகப்படுத்தப்பட்டுவிட்டது. இந்த நிலையில் உச்ச நீதிமன்றத்தில் முறையிடுவதின் மூலம் ஏற்படும் காலதாமதம் மாணவர்களின் எதிர்காலத்தைப் பெரிதும் பாதிக்கும்.


2006 ம் ஆண்டிலிருந்து முனைவர் முத்துக்குமரன் குழு சமச்சீர் கல்வியை அமல்படுத்த கடுமையான முயற்சிகளை மேற்கெட்ண்ட போதிலும், நான்காண்டு காலத்திற்குப் பிறகே சமச்சீர் கல்வி முறை அமலுக்கு வந்துள்ளது. எனவே அவசர கதியில் இது அறிமுகப்படுத்தப்பட்டது என்று மெட்ரிக் பள்ளிகள் கூறுவது உண்மைக்கு மாறானதாகும்.

பாடப்புத்தகங்களில் உள்ள ஆட்சேபனைக்குரிய பகுதிகளை நீக்கிவிட்டு சேர்க்க வேண்டிய பகுதிகளைச் சேர்த்து அவற்றை கூடுதல் தொகுப்பாக மாணவர்களுக்கு விரைவில் வழங்க ஏற்பாடு செய்யப்பட வேண்டும். எக்காரணம் கொண்டும் சமச்சீர் கல்வியை அமல்படுத்துவதில் எவ்விதத் தாமதமும் கூடாது. பெற்றோரும் கல்வியாளர்களும் நீண்ட காலமாக நடத்திய போராட்டத்தின் விளைவாகவே சமச்சீர் கல்வித் திட்டம் கொண்டுவரப்பட்டது என்பதை நினைவில் கொண்டு செயல்படுமாறு தமிழக அரசை வேண்டிக்கொள்வதாக நெடுமாறன் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

சமச்சீர் கல்வி: மேல் முறையீடு என்றுகூறி மேலும் காலத்தை வீணடிக்க வேண்டாம் - கி.வீரமணி :

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில்,


தி.மு.க. அரசு கொண்டு வந்த சமச்சீர் கல்வித் திட்டத்தை நடைமுறைப்படுத்தாமலிருக்கும் வண்ணம், புதிதாக பொறுப்பேற்றுள்ள அ.தி.மு.க. அரசு அவசர அவசரமாக அது செல்லாது என்றுகூறி, ஒரு சட்டத் திருத்தத்தை அறிவித்து, இந்தக் கல்வியாண்டில் மாணவர்கள் கல்விக் கண்ணை பெறாது தடுக்கும் வகையில் செயல்பட்டுள்ளது.

பொருத்தமற்ற காரணங்கள்


இல்லாததையும் பொல்லாததையும் பொருத்தமில்லாத வைகளையும் கூறி, 200 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்ட திட்டத்தை (நல்ல பாடத் திட்ட வல்லுநர் குழுவால்தான் அவை தயாரிக்கப்பட்டது) ஏற்றுக் கொள்ள முடியாது என்று கூறியதோடு, நீதிக்கட்சி வரலாறு சமூக நீதியின் அடித்தளம் என்பதைப் பற்றிக்கூட கவலைப் படாமல் அ.தி.மு.க. அரசு அதனை நீக்கியது எவ்வளவு பெரிய வரலாற்றுப் பிழை என்பதெல்லாம் அரசுக்கு மாணவர்களாலும், கல்வி அறிஞர்களாலும், பெற்றோர் களாலும், முற்போக்குச் சிந்தனையாளர்களாலும், இடதுசாரிகளாலும் சுட்டிக் காட்டப்பட்டன.


தேவையற்ற பிடிவாதம்!


இதில் தேவையில்லாத பிடிவாதத்தை புதிய அரசு காட்டி, வழக்கு உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு என்றெல்லாம் சென்ற புதிய அரசின் நியாயமற்ற, நிலைப்பாட்டினை நீதிமன்றங்கள் ஏற்க இயலாது என்று தெளிவாகத் தெரிவித்து விட்டன.


1. இதுவரை மக்கள் வரிப் பணம் ஏற்கெனவே ரூ.500 கோடி, உயர்நீதிமன்ற, உச்சநீதிமன்றத்தின் சிறப்பு மூத்த வழக்குரைஞர்கள் ஏற்பாடு செய்துள்ள வகையில் பல லட்சம் ரூபாய் செலவுகள் இவை மக்களின் வரிப்பணம் தான்!


2. பல லட்சக்கணக்கான மாணவர்களும், பெற்றோர் களும் இந்தக் கல்வியாண்டில் படிப்புப் பாழாகி, கால தாமதம் ஆகி, ஏதோ யோகா, நடனம் என்று பொன்னான நேரத்தை வீணடித்து, பள்ளிகளில் இவற்றில் ஈடுபட வைத்தனர். பாட புத்தகங்கள் இன்றி பள்ளிக்குச் செல்லுவதோடு, முதல் பருவம் (பங்ழ்ம்) முடிந்து தேர்வு எழுத வேண்டிய காலத்தில் வகுப்புகளே முறையான பாட புத்தகங்களோடு, துவக்கப்படவில்லை என்ற வேதனைக்கு ஆளாகி வெந்து, நொந்து, நூலாகியுள்ளனர்!


நெஞ்சில் பால் வார்த்த தீர்ப்பு!


இந்தச் சூழலில், அவர்கள் நெஞ்சில் பால் வார்த்தது போல சென்னை உயர்நீதிமன்றத்தின் முதல் அமர்வு தலைமை நீதிபதி எம்.ஓய் இக்பால் அவர்களும் மற்றொரு நீதிபதியும் (திரு . டி.எஸ். சிவஞானம்) நல்ல தீர்ப்பு வழங்கி, அவசர கோலத்தில் அள்ளித் தெளித்த இந்த புதிய அரசின் சட்டத் திருத்தம் செல்லாது என்று கூறியுள்ளனர்.

இது இரண்டாவது முறை ஓங்கி அடிக்கப்பட்ட தீர்ப்பு ஆகும்!


தேவையற்ற மேல் முறையீடு


என்றாலும் மேல் முறையீட்டை உச்சநீதிமன்றத்திற்குப் போய் செய்ய அரசு நினைப்பது தேவையற்றது மக்கள் விரோத நடவடிக்கையாகும். உச்சநீதிமன்றம் முந்தைய அரசின் இப்பாடத் திட்டத்தை ஏற்கவே செய்தது!


இப்புதிய அரசு இம்முறை உச்சநீதிமன்றம் சென்ற போதும் இப்பிரச்சினையில், சென்னை உயர்நீதிமன்றத் தில் வழக்கை முடிக்கவே தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.


பிள்ளை பிழைக்காது!


இந்நிலையில் மீண்டும் உச்சநீதிமன்றம் செல்வது வெறும் எண்ணெய்ச் செலவே தவிர, பிள்ளை பிழைக்காது! என்பதையே மறுமுறை உறுதி செய்து கொள்ளவே உதவிடும். இதனை ஆழ்ந்து சிந்திக்க வேண்டும் தமிழக அரசும், முதல் அமைச்சரும்.

ஆச்சாரியார் குலக் கல்வித் திட்டம் கொண்டு வந்து சந்தித்த எதிர்ப்புப் போலவே, ஒரு மாபெரும் எதிர்ப்பைச் சந்திப்பதிலும் சமாளிப்பதிலும் புதிய அரசு தனது நேரம், நினைப்பு, உழைப்பைச் செலவிடாது, நீதிமன்றத் தீர்ப்புகளை மதித்து நடந்து கொள்ள வேண்டியது அவசர அவசியமாகும்.


வேண்டாம் கல்வியில் விளையாட்டு!


பிள்ளைகளுடைய கல்வியில் விபரீத விளையாட்டு வேண்டாம்; தன்முனைப்புக்கு இடம் தர வேண்டாம். தீர்ப்பை ஏற்று உடனடியாக பள்ளிகளில் பாடப் புத்தகங் களை வழங்குவதே நியாயமானது இப்போதைய தேவையும்கூட!


கொள்கையளவில் சமச்சீர்க் கல்வித் திட்டத்தை நாங்கள் ஏற்கிறோம் என்று திடீரென்று சில நாள்களுக்கு முன்பு தீர்ப்பு வருவதற்குமுன் கூறிய நிலையில், உச்ச நீதிமன்றத்திற்கு மேல் முறையீடு செய்யப் போகின்றோம் என்று கூறினால் அது முரண்பாடான நிலை அல்லவா என்று முதலமைச்சர் அவர்கள் யோசிப்பது அவசியம்.


இதை தனது அரசின் தோல்வி என்று கருதாமல், மக்களின் நியாயம் என்று உணர்ந்து உடனடியாக சமச்சீர் பாடப் புத்தகங்களை விநியோகம் செய்ய வேண்டும்.


ஜனநாயகத்தில் தேர்தல்கள் மூலம் வரும் அரசுகள் ஒரு தொடர்ச்சியே தவிர, ஒன்று செய்ததை மற்றொன்று ஏற்கவே கூடாது என்று பிடிவாதம் காட்டுவதாகாது. திருத்தங்கள் மாற்றங்கள் செய்வதில் தவறல்ல, ஆனால் மாற்றத்திற்காகவே மாற்றம் என்ற பிடிவாதப் போக்கு ஏற்கத்தக்கதல்ல!


முதல் அமைச்சருக்கு வேண்டுகோள்!


69 சதவிகித இடஒதுக்கீடு ஆணையில் எப்படி அரசுகள் ஒத்துப் போகின்றனவோ, அதுபோலவே இந்தக் கல்வித் திட்டத்திலும் ஒத்துப் போகும் நிலைப்பாடு மிகவும் இன்றியமையாதது.


எனவே இந்தக் கல்விக் குழப்பத்திற்கு உடனே முற்றுப் புள்ளி வைத்து, பழைய பாட நூல்களைப் பரப்பிட ஆவன செய்ய வேண்டாமெனவும், சமச்சீர் கல்விப் புத்தகங்களை மாணவர்களுக்கு வழங்கி, உடனடியாக வகுப்புகள் நடைபெற (தேவைப்பட்டால் பள்ளி விடுமுறை நாட்களைக் குறைத்து) ஆவன செய்ய வேண்டுமென தமிழக அரசினை, முதல் அமைச்சர் அவர்களைக் கேட்டுக் கொள்கிறோம்.

இவ்வாறு கி. வீரமணி தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

சமச்சீர் கல்வி வழக்கு நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்துவதே நாகரிகம் - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் :

சமச்சீர் கல்வி குறித்து நீதிமன்றம் அளித்த தீர்ப்பை அமல்படுத்துவதே நாகரிகமானது என்று ஜெயலலிதாவுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆலோசனை கூறியுள்ளது.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி தலைவர் காதர்மொய்தீன் விடுத்துள்ள அறிக்கை:
சமச்சீர் கல்வி திட்டத்தில் தமிழக அரசு உருவாக்கிய குழப்பத்தை நீக்கவும், சமச்சீர் கல்வியின் முக்கியத்துவம் குறித்த ஐயப்பாடுகளை நீக்கவும் சென்னை உயர் நீதி மன்றம் அழகிய தீர்ப்பை அளித்துள்ளது. உயர் நீதிமன்ற தீர்ப்பின்படி தமிழக மாணவர்கள் நலன் கருதி சமச்சீர் கல்வியை உடனே அமல்படுத்தவேண்டும்.
உயர் நீதிமன்ற தீர்ப்பு கருணாநிதி ஆட்சியில் வந்திருக்குமானால் முதல்வர் பதவியில் இருந்து கருணாநிதி ராஜினாமா செய்யவேண்டும் என ஜெயலலிதா நிச்சயமாக கூறியிருப்பார். இதில் வெற்றி, தோல்வி என்று பார்க்காமல் உயர் நீதிமன்ற தீர்ப்பை நாட்டு மக்களின் நன்மை கருதி தமிழக அரசு அமல்படுத்த வேண்டும் என்று கருணாநிதி கூறியிருப்பது அரசியல் நாகரிகத்தின் வெளிப்பாடு.
உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து உயர் நீதிமன்ற தீர்ப்பை மீண்டும் உறுதி செய்தால் ஜெயலலிதாவை உடனடியாக ராஜினாமா செய்யவேண்டும் என தமிழக மக்கள் வலியுறுத்துவார்கள்.
எனவே தமிழக முதல்வர் இதில் எவ்வித தயக்கம் இன்றி உயர் நீதிமன்ற தீர்ப்பை உடனே நடைமுறைப்படுத்துவதே சிறந்த நாகரிகம். நாட்டுக்கு நன்மை சேர்ப்பது.
இவ்வாறு காதர்மொய்தீன் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment