கோவையில் நடைபெறும் திமுக பொதுக்குழுவுக்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடந்து வருகிறது.
திமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டம் வரும் 23. 24ம்தேதிகளில் கோவை சிங்காநல்லூர் விஜயா டிரேட் பேர் மைதானத்தில் நடக்கிறது. இந்த மைதானம் 8.46 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இதில் 5.5 ஏக்கர் காலியாக விடப்படுகிறது. மீதமுள்ள இடத்தில் 3 அரங்குகள் அமைக்கப்படுகிறது. செயற்குழு, பொதுக்குழு நடைபெறும் அரங்கம் 100 அடி அகலம், 200 அடி நீளத்தில் குளுகுளு வசதியுடன் அமைக்கப்படுகிறது. இது 20 ஆயிரம் சதுர அடி பரப்பளவு கொண்டது.
இதே அளவுள்ள மற்றொரு அரங்கு உணவு கூடத்துக்கு பயன்படுத்தப்படும். 3வது அரங்கில், பொதுக்குழுவுக்கு வரும் உறுப்பினர்களை வரவேற்று பேட்ஜ் வழங்க தனித்தனி கவுன்டர்கள் அமைக்கப்படுகிறது. இங்கு கையெழுத்திட்டு பேட்ஜ் பெற்றவர்கள் மட்டும்தான் பொதுக்குழு அரங்குக்குள் அனுமதிக்கப்படுவார்கள்.
காலி இடத்தில் பார்க்கிங் வசதி செய்யப்படுகிறது. அங்கு ஒரே நேரத்தில் 700 வாகனங்களை நிறுத்தலாம். உணவு கூடத்தில் 2 கேன்டீன்கள் அமைக்கப்படுகிறது. இங்கு சலுகை விலையில் உணவு, குடிநீர் வழங்கப்படும். பொதுக்குழு தினத்தில் மதியம் மட்டும் கட்சி சார்பில் அனைவருக்கும் பிரியாணி வழங்கப்படுகிறது. இதற்காக ஆம்பூரில் இருந்து சமையல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். குடிநீர் தொட்டி, டாய்லெட் வசதிகளும் செய்யப்படுகிறது.
பொதுக்குழு அரங்கில் 30 அடி நீள, அகலத்தில் மேடை அமைக்கப்படுகிறது. இதன் அருகே 10க்கு 16 அடி அளவில் கருணாநிதி ஓய்வெடுக்க அறை தயாராகிறது. ஏற்பாடுகள் முழுவீச்சில் நடக்கிறது.
No comments:
Post a Comment