“உங்களோடு ஒருங்கிணைந்து பணியாற்ற காத்திருக்கிறேன்” என்று கொளத்தூர் தொகுதி எம்எல்ஏ அலுவலகத்தை திறந்து வைத்து முன்னாள் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
கொளத்தூர் தொகுதி எம்எல்ஏ அலுவலக திறப்பு விழா 16.07.2011 அன்று காலை ஜவகர் நகரில் நடந்தது. தொகுதி எம்எல்ஏவும், முன்னாள் துணை முதல்வருமான மு.க.ஸ்டாலின், ரிப்பன் வெட்டி அலுவலகத்தை திறந்து வைத்தார். அப்போது டி.கே.எஸ்.இளங்கோவன் எம்பி, மேயர் மா.சுப்பிரமணியம், முன்னாள் எம்எல்ஏ ரங்கநாதன், மாவட்ட பொறுப்பாளர் ஆர்.டி.சேகர், இரா.கிரிராஜன், துர்கா ஸ்டாலின் உடனிருந்தனர்.
பின்னர், நடந்த விழாவில் மு.க.ஸ்டாலின் பேசியது:
தேர்தல் முடிந்த பிறகு வாக்காளர்களுக்கு முதன்முதலாக நன்றி தெரிவித்த தொகுதி கொளத்தூர் தொகுதிதான். தோல்வியை கண்டு துவண்டு விடாமல் வாக்களித்தவர்களுக்கும், வாக்களிக்காதவர்களுக்கும் நன்றி தெரிவித்தோம். அடுத்தகட்ட மாக மக்களுக்கான பணிகளை நிறைவேற்ற மாநகராட்சியிடம் இடம் கேட்டு கோரிக்கை வைத்தோம். மாநகராட்சி மன்ற கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி இந்த அலுவலகம் அமைக்கப்பட்டு இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. அதற்காக தொகுதி மக்கள் சார்பில் மாநகராட்சிக்கும், மேயருக்கும் நன்றி தெரிவிக்கிறேன்.
உங்கள் ஆர்வம், எழுச்சியை காணும்போது இது வெற்றி விழா நிகழ்ச்சியாகவும் இருக்கிறது. நீங்கள் ஏராளமான சால்வைகளை அணிவித்தபோது, இது என் பிறந்தநாள் நிகழ்ச்சியோ என்ற சந்தேகமும் ஏற்பட்டது. நீங்கள் தெரிவித்த வாழ்த்து, பாராட்டு, நான் செய்து முடித்த பணிக்காக அல்ல, இனி செய்ய இருக்கும் பணிகளுக்காக என்று கருதுகிறேன். உங்களோடு ஒருங்கிணைந்து பணியாற்ற நான் காத்திருக்கிறேன். அனைவரது ஒத்துழைப்புடன் என் பணியை நிறைவேற்றுவேன். அடுத்து இதுபோன்ற நிகழ்ச்சியில் இதைவிட அதிகளவில் பாராட்டு தெரிவித்தால் நான் அதிக மகிழ்ச்சி அடைவேன். அந்தளவுக்கு வாக்களித்தவர்களுக்கும், வாக்களிக்க தவறியவர்களுக்கும் நான் பணியாற்ற காத்திருக்கிறேன்.
சென்னை மேயராக நான் பொறுப்பேற்ற போது, கருணாநிதி, மூப்பனார் போன்றவர்கள் என்னை வாழ்த்தினார்கள். அப்போது நான், ‘இப்படிப்பட்டவர்களுக்கு வாக்களிக்க தவறி விட்டோமே என எண்ணும் அளவுக்கு பணியாற்றுவேன்’ என்றேன். அது எந்த அளவுக்கு நிறைவேற்றப்பட்டதோ தெரியாது. 234 தொகுதிகளில் அனைவரும் பாராட்டும் வகையில் இந்த தொகுதி சிறந்த தொகுதியாக இடம் பெற பணியாற்றுவேன். நான், இந்த தொகுதி எம்எல்ஏ மட்டுமல்ல, திமுக பொருளாளர். எனவே தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய வேண்டிய அவசியத்தில் இருக்கிறேன். எந்த நேரத்திலும் இங்கிருந்து நான் பணியாற்ற நினைத்தாலும் அது இயலாத நிலை உள்ளது. இந்த தொகுதி அலுவலகத்துக்கு வாரம் 2 நாட்கள் வந்திருந்து உங்களது பிரச்னைகளை ஆராய்ந்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள், அமைச்சர்களுக்கு எடுத்துரைப்பேன்.
சட்டமன்றம் கூடும்போது அந்த பிரச்னைகளை சுட்டிக்காட்டி என் கடமைகளை நிறைவேற்ற காத்திருக்கிறேன். மற்ற நாட்களில் என்னுடைய தனிப்பட்ட முறையில் ஒரு உதவியாளரும், அவருக்கு துணையாக மேலும் 2 பேரும் இருந்து பணியாற்றுவார்கள். இங்கு ஜெராக்ஸ் இயந்திரம், தட்டச்சு இயந்திரம், பேக்ஸ் கருவி போன்றவை வைக்கப்படும். மக்கள் இந்த அலுவலகத்தை நல்ல வகையில் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.
விழாவில் மேயர் மா.சுப்பிரமணியம், சுகவனம் எம்பி, முன்னாள் எம்எல்ஏக்கள் சங்கரி நாராயணன், செங்கை சிவம், சேகர் பாபு, கு.க.செல்வம், சதிஷ்குமார், ஐசிஎப் முரளி, தேவர் ஜவகர், எஸ்.ஆர்.எம்.யு. தலைவர் கண்ணையா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மு.க.ஸ்டாலினுக்கு பொதுமக்கள், தொண்டு நிறுவனத்தினர், பொதுநல சங்க நிர்வாகிகள், மகளிர் சுய உதவிக்குழுவினர் உள்ளிட்ட ஏராளமானோர் நீண்ட வரிசையில் நின்று வாழ்த்து தெரிவித்தனர். முன்னதாக பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை மு.க.ஸ்டாலின் பெற்றுக் கொண்டார்.
முன்னதாக மேயர் மா.சுப்பிரமணியம் கூறும்போது, “கடந்த திமுக ஆட்சியில் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அலுவலகம் கட்டி தரும் திட்டம் செயல்படுத்தப்பட்டது. சென்னையில் உள்ள 16 தொகுதிகளில் 7 தொகுதிகளுக்கு அலுவலகம் இல்லாத நிலை இருந்தது. அங்கு அலுவலகங்கள் கட்டும் பணி நடந்து வருகிறது. புதிய தொகுதியான கொளத்தூர் தொகுதியில் இந்த இடம் 2001ல் சாரணர் அமைப்புக்கு ஒதுக்கப்பட்டு பயன்படுத்தப்படாமல் பாழடைந்த நிலையில் இருந்தது. இதை ஸீ10 லட்சத்தில் மேம்படுத்தி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகமாக மாற்றியுள்ளோம்” என்றார்.
No comments:
Post a Comment