கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Wednesday, July 20, 2011

சமச்சீர் கல்வி வழக்கில் மேல்முறையீடு செய்யாமல் மாணவர்கள் கல்வியை தொடர வழிவகுக்க வேண்டும்: கலைஞர்


சமச்சீர் கல்வி வழக்கில் மேல்முறையீடு செய்யாமல், மாணவர்களுக்கு புத்தகங்களை வழங்கி கல்வியை தொடர வழிவகுக்க வேண்டும் என்று தி.மு.க. தலைவர் கலைஞர் கூறி உள்ளார்.


தி.மு.க. தலைவர் கலைஞர் 19.07.2011 அன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,


2006 ஆம் ஆண்டு சட்டப் பேரவைத் தேர்தல் அறிக்கையில், அனைத்துப் பள்ளிகளிலும் ஒரே தரமான கல்வி வழங்கும் சமச்சீர் கல்வி முறையை தமிழக மக்கள் அனைவருக்கும் வழங்கிட வழி அமைப்போம்'' என்று தி.மு.க. அறிவித்திருந்தது. அதன் அடிப்படையில், சமச்சீர் பள்ளிக் கல்வி முறையை நடைமுறைப்படுத்துவதற்காக தமிழ்நாடு சமச்சீர் பள்ளிக் கல்வி முறைச் சட்டம் 2010 இயற்றப்பட்டது.

சமச்சீர் கல்வி முறை 2010 2011 ம் கல்வி ஆண்டு முதல் தமிழகத்திலுள்ள அனைத்துப் பள்ளிகளிலும் 1 மற்றும் 6ஆம் வகுப்புகளில் நடைமுறைப்படுத்தப்பட்டது. அத்துடன் புதிய பாட நூல்களும் தயாரித்து வழங்கப்பட்டு ஓராண்டு அந்த மாணவர்களும் அதனைப் படித்து முடித்துவிட்டனர்.


2011 2012 ஆம் ஆண்டு கல்வி ஆண்டு முதல் சமச்சீர் கல்வி முறையை மேலும் தொடர்ந்து நடைமுறைப்படுத்துவதற்கு ஏதுவாக எஞ்சிய 2, 3, 4, 5, 7, 8, 9 மற்றும் 10 ஆம் வகுப்புகளுக்கான பாடபுத்தகங்கள் ரூ.200 கோடி செலவில் அச்சிடப்பட்டு, மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டும் விட்டன.


சமச்சீர் கல்வி சட்டத்தை தள்ளுபடி செய்யக்கோரி ஒரு சில தனியார் பள்ளிகள் மற்றும் சங்கத்தினரால் சென்னை ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்குகளில் 30.4.2010 அன்று வழங்கப்பட்ட தீர்ப்பாணையில், தமிழக அரசால் பிறப்பிக்கப்பட்ட இந்த சட்டம் செல்லத்தக்கது'' என நிலைநிறுத்தம் செய்யப்பட்டது. ஐகோர்ட்டு தீர்ப்பாணைக்கு இடைக்கால தடை வழங்கக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீட்டு வழக்குகள் தொடரப்பட்டு அந்த வழக்குகளும் தள்ளுபடி செய்யப்பட்டன.


சமச்சீர் கல்வித் திட்டம் குறித்து அ.தி.மு.க. அரசின் முடிவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், ஏற்கனவே ஐகோர்ட்டும், சுப்ரீம் கோர்ட்டும் உணர்ந்துதான் தங்களது கருத்தை தெரிவித்திருக்கின்றார்கள். இதையெல்லாம் சீர்தூக்கிப் பார்த்து சென்னை உயர் நீதிமன்றம் இதற்கான தீர்ப்பினை இறுதித் தீர்ப்பாக வழங்கி மாணவர்களின் எதிர்கால நலனைக் காப்பாற்றுவார்கள் என்று பெரிதும் நம்புகிறேன்'' என்று நான் ஏற்கனவே ஓர் அறிக்கையில் கூறியிருந்தேன். அதன்படி 18 7 2011 அன்று ஐகோர்ட்டு தீர்ப்பினை அளித்துள்ளது.


ஐகோர்ட்டு தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பால், நீதிபதி டி.எஸ். சிவஞானம் ஆகியோர் அளித்துள்ள தீர்ப்பில் முக்கிய பகுதிகளை நான் இங்கே கோடிட்டுக் காட்ட விரும்புகிறேன்.


தீர்ப்பினைத் தொடங்கும்போதே, 1 முதல் 10ஆம் வகுப்பு வரை பயிலும் 1 கோடியே 23 லட்சம் மாணவர்களும், அவர்களுடைய பெற்றோரும் எந்தப் புத்தகமும் இல்லாமல் குழப்பத்திலே ஆழ்ந்திருக்கிறார்கள் என்றும், புதிய அரசு அமைந்தவுடன் கொண்டு வந்த திருத்தச் சட்டத்தின்படி தயாரித்த பாடப் புத்தகங்களைப் படிக்க வேண்டுமா அல்லது சமச்சீர் கல்வி திட்டப்படி ரூ.200 கோடி செலவழித்து தயாரான புத்தகங்களைப் படிக்க வேண்டுமா அல்லது அவற்றை அழித்து விட வேண்டுமா? என்று தெரியாத நிலைமை உள்ளது என்றும் குறிப்பிட்டிருக்கிறார்கள்.


இறுதியாக தங்கள் முடிவுகளை நீதிபதிகள் தெரிவித்திருக்கிறார்கள். அதில், ஒன்று மற்றும் 6 ஆம் வகுப்புகள் தவிர மற்ற வகுப்புகளுக்கும் தேவையான சமச்சீர் பாடப் புத்தகங்கள் அச்சிடப்பட்டு கணிசமான பணிகள் முடிந்து விட்டன. அவை இணையத்தளத்திலும் விடப்பட்டு விட்டன. இந்த நிலையில் சமச்சீர் கல்வி சட்டத்தில் திருத்தங்கள் கொண்டு வருவது, மாணவர்களின் நலனைப் பாதிக்கும். எனவே அந்தச் சட்டத்தின் 3 ஆம் பிரிவைத் திருத்தி, தமிழக அரசு கொண்டு வந்த சட்ட திருத்தம் செல்லாது. அதை ரத்து செய்கிறோம்.


சமச்சீர் சட்டத்தின்கீழ் வரும் கல்விக்கான பாடப்புத்தகத்தை மாணவர்களுக்கு உடனடியாக வழங்கவேண்டும். இந்தப் பணிகளை 22 ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும். சமச்சீர் கல்வி பாடங்களை நடத்துவதற்கு ஏதுவான குறிப்புகளை ஆசிரியர்களுக்கு உடனே அரசு வழங்க வேண்டும். அந்தப் புத்தகங்களில் உள்ள ஆட்சேபனைக்குரிய பகுதிகளை நீக்கி அவற்றுக்குப் பதிலாக புதிய பாடங்களை அரசு சேர்க்கலாம். புதிய பாடங்களை கூடுதல் இணைப்பு புத்தகமாக வழங்க வேண்டும். இதற்கான நடவடிக்கைகளை 3 மாதங்களுக்குள் முடிக்க வேண்டும்.


அரசுக்கு ஏற்கனவே சமர்ப்பிக்கப்பட்டு, அங்கீகரிக்கப்பட்ட பாடப் புத்தகங்கள் குறித்த விவரங்களை அரசு அறிவிக்கையாக வெளியிட வேண்டும். எனவே மாணவர்களின் எதிர்காலத்தையும், நாட்டின் நலனையும் கருத்திலே கொண்டு, சமச்சீர் கல்வியை அமல்படுத்த, மாநில அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கும் என்று நம்புகிறோம்'' என்று கூறியிருக்கிறார்கள்.


இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பினை ஐகோர்ட்டு நீதிபதியும் மற்றொரு நீதிபதியும் தெரிவித்திருக்கிறார்கள். இந்தத் தீர்ப்பு பற்றி உடனடியாக செய்தியாளர்கள் என்னைச் சந்தித்து கேட்ட போது, "இந்தத் தீர்ப்பை இன்றுள்ள தமிழக அரசு தங்களுக்குக் கிடைத்த தோல்வியாகக் கருதாமல் ஏழை, எளிய நடுத்தர மக்களுக்கும், மாணவர்களுக்கும் கிடைத்த வரப்பிரசாதமாக கருத வேண்டும். வழக்காடியதில் கிடைத்த தோல்வி என்று ஆட்சியினர் கணக்கிடாமல் எதிர்கால புதிய சமுதாயத்திற்கு வழங்கப்பட்ட "வழிகாட்டுதல்'' என்று எடுத்துக்கொள்ள வேண்டும். அப்படி எடுத்துக் கொண்டால் அது அவர்களுக்கும் நல்லது, எதிர்கால சமுதாயத்திற்கும் நல்லது என்று சொல்லியிருக்கிறேன்.

நான் மாத்திரமல்ல, அ.தி.மு.க.வுடன் தோழமை கொண்டுள்ள கட்சிகளின் நண்பர்கள் எல்லாம் இதுபற்றி தங்கள் கருத்துகளைத் தெரிவித்திருக்கிறார்கள். எனவே இதிலே அரசு பெருந்தன்மையாக தமிழக மாணவர்களின் நலன் கருதியும், அவர்களது பெற்றோரின் தவிப்பினை உணர்ந்தும், இந்த தீர்ப்பில் மேல்முறையீடு செய்யாமல் உடனடியாக 22 ந் தேதிக்குள் மாணவர்களுக்குப் புத்தகங்கள் கிடைத்து அவர்கள் தங்கள் கல்வியைத் தொடர வழி வகுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.


இவ்வாறு தி.மு.க. தலைவர் கருணாநிதி கூறி உள்ளார்.


No comments:

Post a Comment