அதிமுக அரசைப் பொறுத்தவரையில் நினைத்தால் வரி போடுவார்கள், நினைப்பை மாற்றினால் அதை ரத்து செய்வார்கள் என்பதற்குப் பழைய உதாரணம் கூற வேண்டுமேயானால் பிளாஸ்டிக் பொருள்களுக்கு அ.தி.மு.க. ஆட்சியிலே வரி விதிக்கப்பட்டதையும், பின்னர் ரத்து செய்யப்பட்டதையும் நினைவு கூரலாம் என்று திமுக தலைவர் கருணாநிதி விளக்கம் அளித்துள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதி 22.07.2011 அன்று வெளியிட்ட கேள்வி பதில்கள் வருமாறு:
உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கான ஒதுக்கீட்டை 33 விழுக்காட்டிலிருந்து 50 விழுக்காடாக உயர்த்துவதற்கு மத்திய அமைச்சரவையில் ஒப்புதல் பெற்றிருக்கிறார்களே?
1996ம் ஆண்டு திமுக நான்காவது முறையாக ஆட்சிப் பொறுப்புக்கு வந்தபோதே, உடனடியாக உள்ளாட்சி அமைப்புகளின் தேர்தலை அறிவித்து நடத்தியபோது, அனைத்துப் பொறுப்புகளிலும் மகளிருக்கு 33 விழுக்காடு ஒதுக்கீடு செய்து பெரும் சாதனை புரிந்ததின் காரணமாக அப்போது தமிழகத்தில் 44,143 மகளிர் உள்ளாட்சி அமைப்புகளில் பதவி யேற்கும் நிலையை கழக அரசு செய்து காட்டியது.
உள்ளாட்சிகளுக்கு தற்போது செய்யப்பட்டுள்ள இந்த அறிவிப்பைப் போல, நாடாளுமன்ற, சட்டமன்றங்களுக்கும் மகளிருக்கான இட ஒதுக்கீடு விரைவிலே நடை முறைக்கு வர வேண்டும் என்பதுதான் தி.மு. கழகத்தின் விருப்பமும், வேண்டுகோளுமாகும்.
நிதி நிலை அறிக்கை ஆகஸ்ட் 4ம் தேதி பேரவையில் வைக்கப்படும் என்று ஆளுநர் அறிவித்த பிறகு தமிழக அரசு அவசர அவசரமாக ஸீ4200 கோடிக்கு புதிய வரிகளை சட்டப்பேரவை விதிகளுக்குப் புறம்பாக ஏடுகளின் மூலமாக அறிவிப்பு செய்தது. அதிலே துணி மற்றும் துணிப் பொருட்கள் மீதான 5 விழுக்காடு வரி உயர்வினை ஜெயலலிதா ரத்து செய்து அறிவிப்பதாக செய்தி வந்துள்ளதே?
வரி விதிப்பு தமிழக அரசு செய்தது. ஆனால் வரி உயர்வை ரத்து செய்தது ஜெயலலிதா. அ.தி.மு.க. அரசைப் பொறுத்தவரையில் நினைத்தால் வரி போடுவார்கள், நினைப்பை மாற்றினால் அதை ரத்து செய்வார்கள் என்பதற்குப் பழைய உதாரணம் கூற வேண்டுமேயானால் பிளாஸ்டிக் பொருள்களுக்கு அதிமுக ஆட்சியிலே வரி விதிக்கப்பட்டதையும், பின்னர் ரத்து செய்யப்பட்டதையும் நினைவு கூரலாமே?
தமிழக அரசின் சார்பில் பெண்களுக்கு இலவச கிரைண்டர் வழங்கும் திட்டத்தை நிறைவேற்ற தேவையான கிரைண்டர்களை தமிழக அரசு சீன நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப் போவதாகக் கூறி தமிழகத்திலே உள்ள கிரைண்டர் உற்பத்தியாளர்கள் வேலை நிறுத்தம் செய்திருக்கிறார்களே?
அரசு என்ன முடிவெடுத்திருக்கிறது என்பது இதுவரை திட்டவட்டமாக அறிவிக்கப்படவில்லை. எனினும், சீன நாட்டு கிரைண்டர் உற்பத்தியாளர்கள் தமிழக அரசினரிடம் நேரடியாகப் பேசி என்னென்ன நிபந்தனைகளை நிறைவேற்றுவதாக வாக்குறுதி கொடுத்துள்ளார்கள் என்பதை அறிந்து, தமிழ்நாட்டு கிரைண்டர் உற்பத்தியாளர்களும் அந்த நிபந்தனைகளை நிறைவேற்ற முன்வரலாமே?
சமச்சீர் கல்வி பற்றிய வழக்கில் உச்ச நீதி மன்றத்தில் தமிழக அரசு சார்பாக வாதாடிய வழக்கறிஞர் சமச்சீர் கல்வி பாடத் திட்டம் அவசர கதியில் தயாரிக்கப்பட்டது என்று சொல்லியிருக்கிறாரே?
அதற்கு எதிராக வாதாடிய வழக்கறிஞர்கள் நான்காண்டுகளாக கல்வித் துறை நிபுணர்கள் தனித்தனியே ஆய்வு செய்து சமச்சீர் பாடத் திட்டத்தை தயாரித்திருப்பதாகவும், அதில் குறைகள் எதுவுமில்லை என்றும் விளக்கியிருக்கிறார்கள்.
ஜெயலலிதா ஸீ66 கோடி சொத்துக் குவிப்பு வழக்கில் ஆடிட்டர் பாலாஜியை மறு விசாரணைக்கு அனுமதிக்கக் கோரும் சசிகலாவின் மேல் முறையீட்டு மனுவை கர்நாடக உயர்நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்திருக்கிறதே?
ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கு உச்சநீதிமன்றத்தின் ஆணைப்படி பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் பதினான்கு ஆண்டு காலமாக நடைபெற்று வருகிறது. சாட்சிகள் விசாரணை எல்லாம் முறைப்படி முடிக்கப்பட்டு குற்றஞ்சாட்டப்பட்டவர்களை நீதி மன்றத்தில் ஆஜராகுமாறு சிறப்பு நீதி மன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
இந்த நேரத்தில் ஆடிட்டர் பாலாஜியை மறு விசாரணை செய்ய அனுமதிக்க வேண்டுமென்று சசிகலாவின் வழக்கறிஞர் சிறப்பு நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்து, சிறப்பு நீதிமன்ற நீதிபதி அந்தக் கோரிக்கையை ஏற்க மறுத்து ஏற்கனவே தள்ளுபடி செய்துவிட்டார்.
ஆனாலும் வழக்கை மேலும் இழுத்தடிக்க வேண்டுமென்ற எண்ணத்தோடு, ஜெயலலிதா தரப்பினர் இதே காரணத்திற்காக கர்நாடக உயர்நீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். அதிலேதான் கர்நாடக மாநில உயர் நீதிமன்ற நீதிபதி கேசவ நாராயண் சசிகலா தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்திருக்கிறார்கள்.
உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படி இந்த வழக்கில் அரசுத் தரப்பில் வாதாட சிறப்பு வழக்கறிஞராக பி.வி. ஆச்சார்யா நியமிக்கப்பட்டுள்ளார். ஆனால் ஆடிட்டர் பாலாஜியை மறு விசாரணைக்கு அனுமதி கோரும் மேல் முறையீட்டு மனு விசாரணையில் தமிழக அரசு சார்பில் வாதிட வழக்கறிஞர் நானையாவை நியமித்ததை நீதிமன்றம் ஆட்சேபித்ததோடு, ஆச்சார்யாவின் கவனத்துக்குக் கொண்டு செல்லாமல் இந்த வழக்கை நடத்துவதை ஏற்க முடியாது என்றும் அது நீதியை மூழ்கடிக்கும் முயற்சி என்றும் ஜெயலலிதா தரப்பினருக்கு நீதிபதி கடும் கண்டனம் தெரிவித்து, தனி நீதி மன்றத்தின் விசாரணை தொடர்ந்து நடைபெறலாம் என்று உத்தரவிட்டுள்ளார்.
இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.
No comments:
Post a Comment