தி.மு.க. அரசு ரூ.1.25 லட்சம் கோடி கடன் சுமையை ஏற்றி வைத்ததாக கூறிய தா.பாண்டியனுக்கு கருணாநிதி விளக்கம் அளித்துள்ளார்.
தி.மு.க. தலைவர் கலைஞர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
இந்திய கம்ழூனிஸ்டு கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன், தி.மு.க.வோடு உறவு நிலையில் இருந்த காலத்திலேயே அந்தக் கட்சியைச் சேர்ந்த தொண்டர்களும், தலைவர்களும் நம்மோடு ஒன்றுபட்டு தோழமை உணர்வோடு இருந்தபோது கூட தா.பாண்டியன் ஒருவித அலர்ஜி''யோடுதான் பழகுவார். பொதுத் தேர்தலுக்கு முன்பே, இந்திய கம்ழூனிஸ்டு கட்சி அ.தி.மு.க.வோடு உறவு கொள்ள வேண்டும் என்பதில் மிகுந்த அக்கறையோடும், ஆர்வத்தோடும் செயல்பட்டவரும் அவர்தான் என்பதை அந்தக் கட்சியிலே உள்ள தொண்டர்களும், முன்னணியினரும் நன்றாகவே அறிவார்கள். ஆனால் எந்தவொரு கருத்திலும் எந்த அளவிற்கு அவர் உறுதியோடு இருப்பார் என்பது கேள்விக்குரியது.
ஜெயலலிதா அரசு பொறுப்புக்கு வந்த இரண்டு மாதங்களுக்குள்ளேயே ரூ.4,200 கோடி அளவிற்கு வரிகளை விதித்துள்ளது. அதைப்பற்றி அனைத்துக் கட்சியினரும் தங்கள் கண்டனத்தைத் தெரிவித்திருக்கிறார்கள். ஆனால் தா.பாண்டியன் அதைப்பற்றி ஒரு பேட்டியில் பதில் கூறியதாக சில ஏடுகள் வெளியிட்டுள்ளன.
தமிழக அரசுக்கு ரூ.98 ஆயிரம் கோடி கடன் இருப்பதாக முந்தைய அரசு அறிவித்தது. ஆனால் தமிழக அரசுக்கு ரூ.1 லட்சத்து 25 ஆயிரம் கோடி கடன் இருப்பது தெரியவந்துள்ளது. இதற்கு அசல் மற்றும் வட்டியை அரசு செலுத்த வேண்டியது உள்ளதால் பொருள்களின் மீது வரி விதித்திருப்பது தவிர்க்க முடியாதது'' என்று பொதுமக்கள் மீது ரூ.4,200 கோடிக்கு வரிகள் விதிக்கப்பட்டதற்கு நியாயம் கற்பித்து அவர் கூறியிருக்கிறார்.
தமிழக அரசின் கடன் விவரங்கள் பற்றி அரசின் சார்பில் பலமுறை விளக்கம் தரப்பட்ட பிறகும், தா.பாண்டியன் நான் ஏதோ ரூ.1.25 லட்சம் கோடி கடன் சுமையை அரசுக்கு ஏற்றி வைத்து விட்டதாகச் சொல்லுகிறார். இதே குற்றச்சாட்டினை அ.தி.மு.க.வின் முதல் அமைச்சர் ஜெயலலிதாவும் கூறி நான் அதற்கு 1.7.2011 அன்று விளக்கமாகப் பதில் கூறியிருக்கிறேன். இந்த ஆட்சியினர் மீது ரூ.1.25 லட்சம் கோடி கடன் சுமையை தி.மு.க. அரசு ஏற்றி வைத்து விடவில்லை.
தி.மு.க. அரசின் சார்பில் 5.2.2011 அன்று பேரவையில் வைக்கப்பட்ட இடைக்கால நிதிநிலை அறிக்கை பக்கம் 55 ல், சேம நல நிதி முதலிய பொறுப்புகளை உள்ளடக்கிய மாநில அரசின் மொத்தக் கடன் 31.3.2006 அன்று ரூ.57,457 கோடியாக இருந்தது. இது 31.3.2011 ல் ரூ.1,01,541 கோடியாக அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது'' என்று சொல்லப்பட்டிருப்பதை தா.பாண்டியன் இப்போதாவது எழுத்துக் கூட்டியாவது படித்துப் பார்த்து தெளிவு பெறலாம். எனவே 98 ஆயிரம் கோடி கடன் இருப்பதாக தி.மு.க. அரசில் யாரும் தவறாகக் கூறி விடவில்லை.
10.2.2011 அன்று இடைக்கால நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்திற்குப் பதில் கூறும்போது கூட, அன்றைய நிதியமைச்சர் பேராசிரியர், அ.தி.மு.க. அரசு வைத்துவிட்டுப் போன கடன் ரூ.56 ஆயிரம் கோடி. அதுதான் தற்போது ஏறத்தாழ ரூ.1 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது என்று தெரிவித்தார். எனவே தவறான புள்ளிவிவரம் எதையும் கழக அரசின் சார்பில் யாரும் தந்துவிடவில்லை.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment