நில அபகரிப்பு வழக்குகளில் 3 நாட்கள் போலீஸ் விசாரணைக்கு பின், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்துக்கு 27.07.2011 அன்று நீதிபதி ஜாமீன் வழங்கினார்.
சேலம் அங்கம்மாள் காலனி நிலம், 5 ரோடு பிரீமியர் மில் நில அபகரிப்பு தொடர்பாக முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் உள்ளிட்ட 20 பேர் மீது சேலம் நில அபகரிப்பு மீட்பு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்குகளுக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த நீதிபதி, முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம், 25ம் தேதியில் இருந்து 27ம் தேதி வரை 3 நாள் சேலம் குற்றப்பிரிவு போலீசில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்றும், 27ம் தேதி மாலை 5 மணிக்குள் சேலம் நீதிமன்றத்தில் ஆஜராகி ஜாமீன் பெற்றுக்கொள்ளும்படியும் உத்தரவிட்டார். கடந்த 3 நாட்களாக அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். 27.07.2011 அன்று மாலை 4.30 மணிக்கு சேலம் டவுன் குற்றப்பிரிவில் இருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வேனில் நீதிமன்ற வளாகத்துக்கு வீரபாண்டி ஆறுமுகத்தை அழைத்து வந்தனர். வளாகம் முழுவதும் திமுக தொண்டர்கள் திரண்டு கோஷம் எழுப்பினர்.
நீதிமன்றத்துக்குள் அழைத்து செல்லும்போது தொண்டர்களும், திமுக வக்கீல்களும் முண்டியடித்து முன்னே வந்தனர். இதனால் தள்ளுமுள்ளு ஏற்பட்டு நீதிமன்றத்தின் முன்பகுதியில் இருந்த கண்ணாடி கதவு உடைந்தது. 4.50 மணிக்கு ஜே.எம்.5 நீதிமன்றத்தில் நீதித்துறை நடுவர் சரத்ராஜ் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார். முன்னாள் அமைச்சருக்காக வக்கீல்கள் மூர்த்தி, துரைராஜ், சக்திவேல், மணிவாசகம் ஆகியோர் ஆஜராகினர்.
நீதித்துறை நடுவருக்கு வீரபாண்டி ஆறுமுகம் வணக்கம் தெரிவித்தார். அப்போது, அனைவரையும் அமைதியாக இருக்கும்படி நீதித்துறை நடுவர் அறிவுறுத்தினார். பின்னர், ஜாமீன் தொகை ஸீ25,000 கட்டப்பட்டது. தொடர்ந்து 2 வழக்குகளுக்கும் சவுந்தரராஜன், உமாசங்கர், பழனிச்சாமி, தங்கவேல் ஆகியோர் இருநபர் ஜாமீன் மனுவை வழங்கினர்.
வீரபாண்டி ஆறுமுகத்துக்கு உயர்நீதிமன்ற உத்தரவுபடி நீதித்துறை நடுவர் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். அதில் தினமும் காலை 8 மணிக்கு குற்றப்பிரிவு போலீசில் ஆஜராகி கையெழுத்திடவும் உத்தரவு வழங்கப்பட்டது.
பின்னர் வீரபாண்டி ஆறுமுகம் வெளியே வந்தார். தொண்டர்களை பார்த்து கையசைத்து விட்டு காரில் புறப்பட்டு சென்றார். தொண்டர்களும் வாழ்த்து கோஷம் எழுப்பினர். முன்னதாக நீதிமன்றத்துக்கு வீரபாண்டி ஆறுமுகத்தின் மனைவி லீலாவதி, மகன் பிரபு, ராமலிங்கம் எம்.பி, மேயர் ரேகாபிரியதர்ஷினி, துணை மேயர் பன்னீர்செல்வம் ஆகியோர் வந்திருந்தனர்.
உடைந்த கண்ணாடி உடனடியாக மாற்றம் :
முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த போலீசார் அழைத்து வந்த போது, நீதிமன்ற வளாகத்தில் ஏராளமான திமுகவினர் கூடினர். அப்போது ஏற்பட்ட நெரிசலில் நீதிமன்ற நுழைவு வாயில் கண்ணாடி உடைந்தது. இது தொடர்பாக, வீரபாண்டி ஆறுமுகத்தின் வழக்கறிஞர்கள் மூர்த்தி, துரைராஜ் ஆகியோர் மாவட்ட நீதிபதி பாஸ்கரனை நேரில் சந்தித்தனர். அப்போது, முன்னாள் அமைச்சரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அழைத்து வந்த போது, கூட்ட நெரிசலில் நுழைவு வாயில் கண்ணாடி உடைந்ததற்கு வருத்தம் தெரிவித்தனர். உடைந்த கண்ணாடியை மாற்றித் தருவதாக கூறினர். அதற்கு நீதிபதியும் அனுமதி வழங்கினார். உடனடியாக நீதிமன்ற வளாகத்தில் உடைந்து போன கண்ணாடி மாற்றிக் கொடுக்கப்பட்டது.
காலை 8 மணிக்கு கையெழுத்து - வக்கீல் பேட்டி :
முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் வழக்கறிஞர் மூர்த்தி கூறியது:
அங்கம்மாள் காலனி, பிரிமியர் நிலப்பிரச்னை தொடர்பாக, சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம், சேலம் மத்திய குற்றப்பிரிவு போலீசில் கடந்த திங்கள்கிழமை ஆஜரானார். 3 நாட்கள் விசாரணையின் முடிவில் 27.07.2011 அன்று சேலம் 5வது நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர் படுத்தினர். இதையடுத்து முன்ஜாமீன் பெற்றோம். 28.07.2011 அன்று காலை 8 மணிக்கு சேலம் மத்திய குற்றப்பிரிவு போலீஸ் ஸ்டேசனில் ஆஜராகி கையெழுத்திடுவார்.
அங்கம்மாள் காலனி, பிரிமியர் நிலப்பிரச்னை தொடர்பாக, சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம், சேலம் மத்திய குற்றப்பிரிவு போலீசில் கடந்த திங்கள்கிழமை ஆஜரானார். 3 நாட்கள் விசாரணையின் முடிவில் 27.07.2011 அன்று சேலம் 5வது நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர் படுத்தினர். இதையடுத்து முன்ஜாமீன் பெற்றோம். 28.07.2011 அன்று காலை 8 மணிக்கு சேலம் மத்திய குற்றப்பிரிவு போலீஸ் ஸ்டேசனில் ஆஜராகி கையெழுத்திடுவார்.
இவ்வாறு மூர்த்தி கூறினார்.
No comments:
Post a Comment