ஊழல் வழக்கில் சிக்கியுள்ள ஜெயலலிதா உயர் நீதிமன்றத்தில் இன்று நடைபெறவுள்ள விழாவில் நீதிபதிகளுக்கு சமமாக மேடையில் அமரக் கூடாது என்று வக்கீல்கள் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். இது தொடர்பாக நேற்று ஆர்ப்பாட்டமும் செய்தனர்.
ஜெயலலிதா கடந்த 1991 முதல் 1996வரை ஆட்சியில் இருந்தபோது வருமானத்துக்கு அதிகமாக ^66 கோடி சொத்து சேர்த்ததாக அவர் மீது வழக்கு தொடரப்பட்டது.
ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் தொடரப்பட்ட அந்த வழக்கு பெங்களூருவில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த 14 ஆண்டுகளாக நடந்து வருகிறது. தற்போது இந்த வழக்கு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. சாட்சிகள் விசாரணை முடிந்த நிலையில், குற்றவாளியிடம் குற்றம் தொடர்பான கேள்விகளை நீதிபதி கேட்கும் விசாரணை வரும் 27ம் தேதி நடக்கிறது. இதுவரை ஆஜராகாமல் இருந்து வரும் ஜெயலலிதா, அன்று கண்டிப்பாக ஆஜராக வேண்டும் என்று சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதேபோல், கடந்த 1992ல் அவரது பிறந்த நாளின்போது பல்வேறு இடங்களிலிருந்து பிறந்த நாள் பரிசாக ரொக்கமாகவும் டி.டி.யாகவும் ^ 2 கோடி வந்தது. இது தொடர்பாக அவர் மீது தொடரப்பட்ட வழக்கு சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள சிபிஐ நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. குற்றச்சாட்டு பதிவு செய்யப்படாமல் இந்த வழக்கும் கடந்த 15 ஆண்டுகளாக பல்வேறு காரணங்களைக் கூறி தொடர்ந்து தள்ளிவைக்கப்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் மாற்று முறை தீர்வு மையத்தின் அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெறுகிறது. இந்த விழாவில் ஜெயலலிதா சிறப்பு விருந்தினராக கலந்துகொள்கிறார். உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இக்பால் மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகள் இந்த விழாவில் கலந்துகொள்கிறார்கள்.
ஊழல் வழக்கில் குற்றவாளி, குற்றவாளி கூண்டில் ஏற இருக்கும் நிலையில், விழா மேடையில், நீதிபதிகளுக்கு சமமாக அமரலாமா? இதை நீதிபதிகள் அனுமதிக்கலாமா? அனுமதித்தால் அவர் மீதுள்ள வழக்கு விசாரணையின் போக்கு மாற வாய்ப்புள்ளது என்று வக்கீல்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதை தடுக்க வலியுறுத்தி, உயர் நீதிமன்ற இளம் வக்கீல்கள் கூட்டமைப்பை சேர்ந்த வக்கீல்கள் தலைமை நீதிபதியிடம் 15.07.2011 அன்று மதியம் மனு கொடுக்கச் சென்றனர். தலைமை நீதிபதி இல்லாததால் பதிவாளர் ஜெனரல் விமலாவிடம் மனு கொடுத்தனர்.
பின்னர் பிரதான வாயில் அருகே ஆர்பாட்டம் நடத்தினர். இதனால், அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற வக்கீல்கள் கூறியதாவது:
வரும் 27ம் தேதி நேரில் ஆஜராகி குற்றவாளிக்கூண்டில் நிற்கப் போகிறார். ஒருவருடன் நீதிபதிகள் மேடையில் அமர்வது தவிர்க்கப்பட வேண்டும்.
ஊழல் வழக்கு நிலுவையில் உள்ள ஒருவர் நீதிபதிகளுடன் ஒரே மேடையில் அமர்வது ஒரு தவறான முன்னுதாரணமாக அமைந்து விடும். இதைக் கண்டித்து ஆர்பாட்டம் நடத்தினோம். ஜெயலலிதாவுடன் நீதிபதிகள் இந்த விழாவில் ஒரே மேடையில் அமரக்கூடாது என்று வலியுறுத்தி ஜனாதிபதி, பிரதமர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, உச்ச நீதிமன்ற நீதிபதிகள், உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி, மற்றும் நீதிபதிகள் ஆகியோருக்கு மனு அனுப்பியுள்ளோம்.
இவ்வாறு வக்கீல்கள் கூறினார்.
வக்கீல்களின் இந்த போராட்டத்தால் உயர் நீதிமன்ற வளாகத்தில் வக்கீல்களிடையே திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
ஊழல் வழக்கில் சம்மன் பெற்ற ஜெயலலிதாவுடன் நீதிபதிகள் அமர்வது தவறான முன்னுதாரணம் :
உயர் நீதிமன்ற வளாகத்தில் 16.07.2011 அன்று நடைபெறவுள்ள மாற்றுமுறைத் தீர்வு மையத்தின் அடிக்கல் நாட்டு விழாவில் ஜெயலலிதா கலந்து கொள்வதற்கு வக்கீல்கள் எதிர்ப்பு தெரிவித்து தலைமை நீதிபதியிடம் மனு கொடுத்துள்ளனர்.
உயர் நீதிமன்ற இளம் வக்கீல்கள் கூட்டமைப்பை சேர்ந்த வக்கீல்கள் இளம்பரிதி, ராஜ்குமார், ஜெயப்பிரகாஷ், சுகேந்திரன் உள்ளிட்ட ஏராளமான வக்கீல்கள் 15.07.2011 அன்று உயர் நீதிமன்ற பதிவாளர் ஜெனரல் விமலாவிடம் மனு கொடுத்தனர். மனுவில் கூறியிருப்பதாவது:
நீதித்துறைதான் நாட்டை ஒளிமயமாக மாற்றுகிறது. கிரேக்க, ரோமானிய இதிகாசங்களிலும் இப்படித்தான் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியர்களின் வாழ்க்கையில் மரியாதையும் நீதியும் பிரிக்க முடியாதவைகளாக உள்ளன. மனு சாஸ்திரத்திலும் இதேதான் கூறப்பட்டுள்ளது.
கடந்த 14ம் தேதி உயர் நீதிமன்றம் வெளியிட்டுள்ள அறிக்கையில், உயர் நீதிமன்ற வளாகத்தில் மாற்றுமுறை தீர்வு மையத்தின் கட்டிடத்துக்கான அடிக்கல் நாட்டு விழா 16ம் தேதி (இன்று) காலை 10.30 மணியளவில் நடைபெறுவதாக கூறப்பட்டுள்ளது.
இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக மாநிலத்தின் முதல்வர் ஜெயலலிதா கலந்துகொள்வதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. விழா அழைப்பிதழ்களும் அச்சிடப்பட்டு முக்கிய பிரமுகர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது.
ஜெயலலிதா கடந்த 1991 முதல் 1996 வரை முதல்வராக இருந்தபோது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக, அவர் மீது சொத்து குவிப்பு வழக்கு தொடரப்பட்டது. உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் அந்த வழக்கில் பொங்களூரில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வருகிறது.
ஜெயலலிதா மீதான வழக்கின் விசாரணை தமிழகத்தில் நடைபெற்றால், விசாரணை நேர்மையாக நடைபெறாது என்ற காரணத்தினாலும், அதிகாரத்தை பயன்படுத்தி வழக்கின் போக்கை அவரால் மாற்ற முடியும் என்ற காரணத்தினாலும்தான் வழக்கு விசாரணை பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. அந்த வழக்கில் வரும் 27ம் தேதி ஜெயலலிதா ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
குற்றம் சாட்டப்பட்டு நீதிமன்றத்தான் சம்மன் அனுப்பப்பட்டுள்ள ஒருவர், முதலமைச்சரக இருந்தாலும்கூட உயர் நீதிமன்ற வளாகத்தில் நடைபெறும் விழாவில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள், உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோர் அமர்ந்திருக்கும் மேடையில் அவர்களுக்கு சமமாக மேடையில் அமர்ந்தால், சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்குக்கு அது தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தி விடும்.
நீதிபதிகள் அமரும் மேடையில் குற்றம் சாட்டப்பட்டவரும் அமர்வது ஏற்கக்கூடியதாக இருக்காது.
அந்த மேடையில் குற்ற வழக்கு நிலுவையில் உள்ள முதல்வருடன் அமர்வதை உச்ச நீதிமன்ற நீதிபதிகளும், உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியும் தவிர்க்க வேண்டும்.
சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றுவரும் வழக்கு இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அதாவது ஜெயலலிதாவிடம் நீதிபதி கேள்வி கேட்கும் நடைமுறை வந்துள்ள நிலையில் நீதித்துறையின் மாண்பை காக்க வேண்டியது தர்மமாகும். கறைபடிந்த அரசியல்வாதிகளுடன் ஒரே மேடையில் நீதிபதிகள் அமர்வது நல்ல நடைமுறை அல்ல.
எனவே, இந்த மனுவை பரிசீலித்து தற்போது எழுந்துள்ள இந்த அசாதாரணமான சூழலை தவிர்க்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு ஜனாதிபதி, பிரதமர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, நீதிபதி சதாசிவம், உச்ச நீதிமன்ற நீதிபதிகள், உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஆகியோருக்கும் அனுப்பப்பட்டுள்ளதாக வக்கீல்கள் தெரிவித்தனர்.
பெங்களூர் வரும் ஜெயலலிதாவுக்கு பாதுகாப்பு ஏற்பாடு ரெடி :
“சொத்து குவிப்பு வழக்கு விசாரணைக்காக ஜெயலலிதா பெங்களூர் வந்தால் உரிய பாதுகாப்பு அளிக்கப்படும்” என்று பெங்களூர் சட்டம் ஒழுங்கு போலீஸ் கமிஷனர் சுனில்குமார் தெரிவித்தார்.
இது தொடர்பாக 15.07.2011 அன்று அவர் அளித்த பேட்டி:
மும்பை குண்டுவெடிப்பை தொடர்ந்து பெங்களூர் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.
பெங்களூரின் பாதுகாப்புக்காக கமாண்டோ போலீசார் உஷார்நிலையில் இருக்கிறார்கள். கம்ப்யூட்டர் மென்பொருள் நிறுவனங்கள், தொழில்நுட்ப நிறுவனங்களின் பாதுகாப்பு அதிகாரிகளை உஷாராக இருக்கும்படி கூறி இருக்கிறோம். .
பெங்களூர் நகரில் சட்டம் & ஒழுங்கு சிறப்பாக இருக்கிறது. தினமும் பெரிய பெரிய தலைவர்கள் பெங்களூர் வந்து செல்கிறார்கள். அவர்களுக்கு தகுந்த பாதுகாப்பு அளிக்கப்படுகிறது. அதுபோல், தனி நீதிமன்ற விசாரணையில் ஆஜராக தமிழக முதல்வர் ஜெயலலிதா வந்தால், தகுந்த பாதுகாப்பு வழங்கப்படும். ஆனால், பெங்களூர் தனி நீதிமன்றத்தில் அவர் ஆஜராவது தொடர்பாக இதுவரை எங்களுக்கு அதிகாரப்பூர்வ தகவல் வரவில்லை.
இவ்வாறு அனில் குமார் கூறினார்.
இவ்வாறு அனில் குமார் கூறினார்.
ஜெயலலிதாவிடம் நீதிபதி கேட்கும் கேள்விகள் 25ம் தேதி முடிவாகும் :
சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவிடம் கேட்கப்பட வேண்டிய கேள்விப் பட்டியல் குறித்து 25ம் தேதி முடிவு செய்யப்படுகிறது.
பெங்களூர் தனி நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் சொத்துக் குவிப்பு வழக்கில் தமிழக முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் 27ம் தேதி ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அன்றைய தினம் சிஆர்பிசி 313&1&பி பிரிவின் கீழ் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும்.
இதற்கிடையே, ஜெயலலிதா தரப்பில் தனி நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் சிஆர்பிசி 313&5ல் செய்யப்பட்ட திருத்தத்தின்படி, அவரிடம் கேட்க வேண்டிய கேள்விகளின் பட்டியல் அரசு வழக்கறிஞருடன் ஆலோசித்து தயாரிக்க கோரப்பட்டது.
அரசு வழக்கறிஞர் ஆச்சார்யாவின் அலுவல் மற்றும் சொந்த வேலை காரணமாக அது குறித்து ஆலோசிக்க இந்த மாதம் 25ம் தேதி வரை அனுமதி அளிக்கலாம் என கூறப்பட்டது.
இதை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது.
No comments:
Post a Comment