கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Saturday, July 16, 2011

மெட்ரிகுலேஷன் பாடத்தில் ஆயிரம் குறைகளைக் காட்டவா? - கல்வியாளர் வசந்தி தேவி சுரீர்...


''ஏழை மற்றும் கிராமப்புற மாணவர்களைக் கேவலப்படுத்தி​விட்​டது தமிழக அரசின் சமச்சீர்க் கல்விக்கான ஆய்வுக் குழு!'' - ஆதங்கமும், வேதனையும் ஒருசேரப் பொங்குகிறது மூத்த கல்வியாளரும் முன்னாள் துணை வேந்தருமான வசந்திதேவியின் குரலில்!

சமச்சீர்க் கல்வி தொடர்பான விவாதங்கள் நீதிமன்றத்தில் அனல் பறக்கும் நேரத்தில், அவரை சந்தித்தோம். ''நீதிமன்ற விசாரணை நடந்துகொண்டு இருக்கும்போதே, புத்தகங்களை அச்சடித்து நீதிமன்றத்தின் கண்டனத்துக்கு உள்ளாகி இருக்கிறது தமிழக அரசு. இப்படி ஓர் அறிக்கையை அரசு நியமித்த குழுவினர் கொடுப்பார்கள் என்று நீதிமன்றமே எதிர்பார்க்கவில்லை. அரசு மீது நம்பிக்கைவைத்து, நீதிமன்றம் அரசையே ஒரு குழு அமைக்கச் சொன்னது. ஆனால், சமச்சீர்க் கல்வித் திட்டத்தை எதிர்த்தவர்களைக்கொண்டே, குழு அமைத்தது அரசு. அதனால்தான், இப்படி ஒரு மோசமான அறிக்கையை அவர்கள் தாக்கல் செய்து இருக்கிறார்கள்.

'இந்தப் பாடத் திட்டத்தைக் கற்றுக்கொள்ள முடியாது. நகர்ப்புற, வசதியான மாணவர்களால் மட்டுமே முடியும்...’ என்றெல்லாம் அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளார்கள். இன்று குறைந்த வசதிகளை மட்டுமேகொண்டு, 100 சதவிகிதம் தேர்ச்சி பெறும் கிராமப்புறப் பள்ளிகளை நான் காட்டவா? மொத்தத்தில் இது பாடத் திட்டம் தொடர்பான பிரச்னையே இல்லை. கல்விக் கட்டணக் கொள்ளை அடிக்கும் கும்பலுக்கும் - நியாயமான, சமச்சீரான கல்வி வேண்டும் என்பவர்களுக்குமான போராட்டம் என்பதுதான் உண்மை!

மத்திய அரசின் கட்டாயக் கல்வி சட்டம், 'ஒவ்வொரு பள்ளியும் அருகில் இருக்கும் பகுதியைச் சேர்ந்த ஏழை, ஒடுக்கப்பட்ட மற்றும் பின்தங்கிய மாணவர்களுக்காக, பள்ளியில் 25 சதவிகிதம் இடஒதுக்கீடு செய்ய வேண்டும்’

என்கிறது. இதைக் கடுமையாக எதிர்க்கின்றன மெட்ரிகுலேஷன் பள்ளிகள்.சென்னையில் இருக்கிற ஒரு பள்ளி ஒருபடி மேலேபோய், மிகவும் கண்டனத்துக்குரிய சர்க்குலர் ஒன்றை பெற்றோருக்கு அனுப்பி இருக்கிறது.

அதில், 'மத்திய அரசு சட்டத்தின்படி 25 சதவிகிதம், ஏழை, பாமரக் குழந்தைகளுக்கு இடஒதுக்கீடு செய்தால், உங்கள் குழந்தைகளின் கல்வித் கற்கும் திறன் பாதிக்கும். அவர்களோடு இணைந்து உங்கள் குழந்தைகள் படித்தால், உங்கள் குழந்தைகள் பாழாகிவிடுவார்கள். தகுதியற்ற, ஒழுங்கீனமான குழந்தைகளை உங்கள் குழந்தைகளுடன் ஒன்றாகப் படிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. இதனால், எங்கள் ஆசிரியர்களின் நேரமும் வீணாகிறது. எனவே, இந்த சட்டத்தை எதிர்த்து நீங்கள் போராட்டம் நடத்த வேண்டும்’ என்று குறிப்பிட்டு உள்ளது. இந்தப் பள்ளியின் தாளாளரைத்தான் சமச்சீர்க் கல்வி ஆய்வு கமிட்டியில் தமிழக அரசு நியமித்து உள்ளது. இவர்களிடம் இருந்து நியாயமான அறிக்கையை எப்படி எதிர்பார்க்க முடியும்?

முதலில், நீதிமன்றம் இந்தக் குழுவினரிடம் சமச்சீர்க் கல்வித் திட்டம் வேண்டுமா... வேண்டாமா? என்று கேட்கவில்லை. எந்தப் பாடத் திட்டம் தரமானது என்றுதான் கேட்டது. ஆனால் இவர்களாகவே, 'சமச்சீர் கல்வித் திட்டம் வேண்டாம்’ என்கிறார்கள். அதைச் சொல்லவேண்டியது நீதிமன்றம் மட்டுமே!

தேசியக் கலைத் திட்டத்தில் உள்ள கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கான குழுதான், தேசிய அளவில் பள்ளிக் கல்விக்கான பொதுவான வழிகாட்டுதல்களைக் கொடுக்கிறது. கேரளா மற்றும் இமாசலப் பிரதேசத்தில் இதன் அடிப்படையில் மிகத் தரமான கல்வித் திட்டத்தை போதிக்கிறார்கள். இந்தக் குழுவின் வழிகாட்டுதலைக்கொண்டு சமச்சீர்க் கல்வித் திட்டத்தை உருவாக்கி இருக்கிறார்கள். ஆனால், அதில் உப்புச் சப்பு இல்லாத குறைகளைக் கண்டுபிடித்து உள்ளது அரசின் ஆய்வுக் குழு. மெட்ரி​குலேஷன் பாடத் திட்டத்தில் ஆயிரம் குறைகளையும் ஓட்டைகளையும் நான் கண்டுபிடித்து சுட்டிக் காட்டவா?

'சமச்சீர்க் கல்விப் பாடத் திட்டம், குழந்தைகள் மீதான சுமையை அதிகப்படுத்துகிறது. வயதுக்குத் தகுந்த கல்வி இல்லை’ என்று குறிப்பிட்டு உள்ளனர். மெட்ரிகுலேஷன் பள்ளிகள்தான் 'நீயா... நானா?’ என்ற போட்டியில் குழந்தைகள் மீது அதிகமான சுமையை சுமத்துகின்றன. எட்டாம் வகுப்பில் கற்க வேண்டிய கல்வியை, ஐந்தாம் வகுப்பில் சொல்லிக் கொடுக்கிறார்கள். இப்படிச் சொல்லிக் கொடுப்பதுதான், தரமற்ற கல்வி; திணிக்கப்படுகிற கல்வி. நீங்கள்தான் வயதுக்குத் தகுந்த கல்வியைக் கொடுக்காமல் குழந்தைகளின் மூளைத் திறனை மழுங்கடிக்கிறீர்கள்.

பத்திரிகையாளர் சோ, 'சமச்சீர்க் கல்வித்திட்டத்தை மாட்டு வண்டியுடன் ஒப்பிட்டு’ எழுதி இருக்கிறார். அனைத்துத் துறை வல்லுநர்கள் இணைந்து உருவாக்கியதுதான் சமச்சீர்க் கல்வி. மெட்ரிகுலேஷன் தேர்வுகளில் சாய்ஸ் நிறைய உண்டு. அதனால், அதைக் கற்பிக்கும் ஆசிரியர்களும், 'குறிப்பிட்ட பகுதியை மட்டும் படி’ என்று மாணவர்களுக்கு அறிவுறுத்துகிறார்கள். அதை மட்டுமே படித்து தேர்வு எழுதுகிறான் மாணவன். ஆனால், சமச்சீர்க் கல்வியில் சாய்ஸ் கிடையாது. முழுப் புத்தகத்தையும் படித்து மெத்த அறிவு பெறுகிறான் மாணவன். இப்போது சொல்லுங்கள், மெட்ரிகுலேஷன் பாடத் திட்டம், மாட்டு வண்டியா? சமச்சீர் கல்வி பாடத் திட்டம், மாட்டு வண்டியா?'' கேள்வியுடன் முடிக்கிறார் வசந்திதேவி.

பதிலும் தீர்வும் நீதிமன்றத்தின் தீர்ப்பில் உள்ளது!

- டி.எல்.சஞ்சீவிகுமார் & படம்: சொ.பாலசுப்ரமணியம்

நன்றி : ஜூனியர் விகடன்

No comments:

Post a Comment