கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Friday, July 22, 2011

சமச்சீர்க் கல்வி அழித்தல் கிழித்தல் மறைத்தல் ஆசிரியர் பணி - இரா.உமா


உலகக் கல்வித்துறை வரலாற்றிலேயே முதன்முறையாக,

அ.தி.மு.க. அரசு அறிமுகப்படுத்தியுள்ள

ஆசிரியர்களுக்கான அதிசிறந்த பணிகள்

பாடங்களை அழித்தல், பக்கங்களைக் கிழித்தல், தாள் ஒட்டி மறைத்தல்

ஜுன் 1இல் திறந்திருக்க வேண்டிய பள்ளிகள், 15 நாள்கள் தாமதமாக 15ஆம் தேதி மீண்டும் திறக்கப்பட்டன. பள்ளிக்கு ஆசிரியர்கள் வந்தார்கள், மாணவர்கள் வந்தார்கள். பாடப்புத்தகங்கள் வரவில்லை. பாடமும் நடத்தப்படவில்லை. பாடப்புத்தகங்கள் திருத்தப்படுகின்றன. எனவே அவை வரவில்லை. திருத்தும் பணியில் (அட அதாங்க அழித்தல், கிழித்தல், மறைத்தல்) ஆசிரியர்கள் மும்முரமாக ஈடுபடுத்தப்பட்டிருப்பதால், 1 மற்றும் 6ஆம் வகுப்புகளுக்குப் பாடம் நடத்தப்படவில்லை. உச்சநீதிமன்றமே சொல்லிவிட்டது, பாடத்திட்டம் எது என்பது முடிவாகும்வரை, 2 முதல் 5 மற்றும் 7 முதல் 10 வகுப்புகளுக்குப் பாடம் நடத்த வேண்டாம் என்று. கற்கை நன்றே கற்கை நன்றே, பிச்சை புகினும் கற்கை நன்றே என்று அதிவீரராமபாண்டியர் எழுதிய வெற்றிவேட்கை சொல்கிறது. நாங்கள் ஆடிமுடித்து முடிவு சொல்லும்வரை யாரும் படிக்க வேண்டாம் என அவாள்கள் கட்டளை யிடுகின்றனர்.

சரி, திருத்தும் திருப்பணி எப்படி நடக்கிறது, எதை எதைக் கிழித்திருக்கிறார்கள் என்பதைப் பார்ப்போம். சமச்சீர்க்கல்வி தொடர வேண்டும் என்று உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்றம், தேவைப் பட்டால் பாட நூல்களில் சில பகுதிகளை நீக்கவும், திருத்தவும் அரசுக்கு அதிகாரம் இருக்கிறது என்ற இலவச இணைப்பையும் தந்திருக் கிறது. வேறு வழியின்றி செயல் வேகம் கொண்ட ஜெயலலிதா தலைமையிலான அரசு, உடனடி யாக அனைத்துப் பள்ளிகளுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பியது. தொடக்கக் கல்வி இயக்குநருக்காக என்று குறிப்பிடப்பட்டுள்ள அந்தச் சுற்றறிக்கையில், சமச்சீர்க் கல்வி பாடநூல்களில் பள்ளிகளுக்கு வழங்கும்முன் சரிசெய்யப்பட வேண்டியவை எனத் தலைப்பிட்டு 1 மற்றும் 6ஆம் வகுப்புப் பாடநூல் களில் செய்ய வேண்டிய திருத்தங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.

முதல் வகுப்பு தமிழ்ப் பாடப்புத்தகத்தில் 69,70 ஆகிய இரண்டு பக்கங்களை ‡ தாளினை நீக்குதல் அதாவது கிழித்தல் என்று இருக்கிறது. அப்படி அந்தப் பக்கங்களில் என்ன இருக்கிறது என்றால், பக்கம் 69இல் அழகான ஆப்பிள் பழத்தின் படம் இருக்கிறது. ஆப்பிள்தானே இதை ஏன் கிழிக்க வேண்டும் என்று நமக்குத் தோன்றுகிறது, ஆனால் கருப்புக் கோடும், உள்ளே சிவப்பு வண்ணமுமாக, ஆரியத்திற்கு ஆகாத வண்ணமாக அவர்களுக்குத் தோன்றியிருக்கிறது, எனவே அந்தப் பக்கம் கிழிக்கப்பட்டது. 70ஆம் பக்கத்தில் என்ன இருக்கிறது? ஒன்றுமில்லை, பாவம், அது 69ஆம் பக்கத்திற்கு பின்புறம் இருக்கிறது. அதுதான் காரணம்.

அடுத்து 79, 80ஆம் பக்கங்களும் அதே போல் கிழிக்கப்பட வேண்டும் என்று உள்ளது. காரணம் 80ஆம் பக்கத்தில் தமிழ் மாதங்கள் தையில் தொடங்குகிறது. 80ஆம் பக்கத்திற்கு முன்னால் இருப்பதால் 79ஆம் பக்கமும் புரட்சிக் கவிஞர் பாரதிதாசனின் ஆத்திசூடியோடு கிழித்தெறியப் பட்டுவிட்டது.

ஆங்கிலப் புத்தகத்தில், 53, 54ஆம் பக்கங்கள் முழுவதுமாக நீக்கப்பட வேண்டும் என அந்தப் பட்டியல் சொல்கிறது. இந்த இரண்டு பக்கங்களிலும் அவர்களுக்கு வேண்டாத ஒன்றும் நமக்குத் தெரிந்தவரையில், நாம் தேடியவரையில் இல்லை என்றுதான் தோன்றுகிறது. 53ஆம் பக்கத்தில் புலிபடம் கூட இல்லை, சிங்கம்தான் இருக்கிறது. அதேபோல் 54இல் குறுக்குவாட்டில் நீட்டப்படும் கையின் படம்தான் இருக்கிறது.

அரிச்சுவடி கற்றுக்கொள்ள வரும் முதல் வகுப்புக் குழந்தைகளிடம் இவர்களுக்கு என்ன இவ்வளவு எச்சரிக்கை? அவர்களில் ஞானசம்பந்தர்கள் தோன்றிவிடுவார்கள் என்ற அச்சமோ?

ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை. அப்படி என்னதான் முயன்றாலும் வரலாற்றையும், அதன் பெயராலான போராட்டங் களையும் அடக்கிவிட முடியாது. அதனால்தான், அதற்கு நீரூற்றும் கவிக்கோ அப்துல் ரகுமானின் ‘தாகம்’ கவிதையை 6ஆம் வகுப்புத் தமிழ்ப் பாடநூலில் இருந்து தாளை ஒட்டி மறைக்கச் சொல்லியிருக் கிறார்கள் ஆட்சியில் இருப்போர். 56ஆம் பக்கத்தில் இடம் பெற்றிருக்கும் அந்தக் கவிதை இதோ:

வேலிக்கு வெளியே

தலையை நீட்டிய என்

கிளைகளை வெட்டிய

தோட்டக்காரனே !

வேலிக்கு அடியில்

நழுவும் என் வேர்களை

என்ன செய்வாய்?

அப்படியயன்ன இந்தக் கவிதை மாணவர்களுக்குக் கூடா ஒழுக்க த்தை போதிக்கிறதா அல்லது மதத்தைப் பரப்புகிறதா? யாரும் யாருடைய சுதந்திரத்தையும், உரிமையையும் அடக்குமுறையால் கட்டுப்படுத்திவிட முடியாது என்ற உண்மையை உரைக்கிறது. அதுசரி, விசாரணையே இல்லாமல், எஸ்மா, டெஸ்மாக்களின் மூலம் ஒன்னரை லட்சம் பேரை வீட்டுக்கு அனுப்பிய ஆதிக்கவாதிகளுக்கு, சுதந்திரம், உரிமை பற்றிப் பேசுவதே தீவிரவாதம் எனக் கூச்சலிடும் கூட்டத்திற்கு இக்கவிதை உறுத்தலாகத் தானே இருக்கும் ! எனவேதான் தாள் ஒட்டி மறைத்துவிட்டனர்.

‘தை’ முதல் நாளே தமிழ்ப்புத்தாண்டு தொடக்கம், தை மாதமே தமிழ்ஆண்டின் முதல் மாதம் என்று கலைஞர் தலைமையிலான தி.மு.க. அரசு அறிவித்ததிலிருந்து தைய்யா...தக்கா... என்று குதித்துக் கொண்டிருந்த சோ கூட்டத்திற்கு, இப்போது வந்திருக்கும் அம்மையாரின் ஆட்சி மேடை போட்டுக் கொடுத்திருக்கிறது. 129ஆம் பக்கத்தில் தமிழ்ப்புத்தாண்டுச் சிறப்புக் கையயழுத்து இதழ் தயாரிக்கும் பயிற்சி. அதில் ஒரு கவிதை, தைப் புத்தாண்டே வருக எனத் தொடங்கவேண்டும் என கொடுக்கப் பட்டிருக்கிறது. தமிழ்ப்புத்தாண்டிற்கு எப்போது எல்லைப் பொங்கல் வைக்கலாம் என்று காத்துக் கொண்டிருந் தவர்கள், அந்தத் தாளையே கிழித்து எறியச் சொல்லி விட்டார்கள். வழக்கம் போல அதற்கடுத்துவரும் 130ஆம் பக்கத்தில் இருந்த இரயில்வே படிவம் நிரப்பும் பயனுள்ள பயிற்சியும் போயிற்று.

ஆங்கிலப் புத்தகத்தில் 53, 54ஆம் பக்கங்கள் அடிவாங்கியிருக்கின்றன. அவை நம்முடைய தொன்மைக் கலைகளைப் பற்றிச் சொல்லுகின்றன. அதில் சென்னை சங்கமம் என்ற சொல் இடம் பெற்றிருப்பதும், தமிழர்களின் ஆதி இசைக்கருவியான பறை இடம் பெற்றிருப்பதும் அவர்களை உறுத்தியிருக்கிறது.

மொழிப் பாடத்தில் மட்டுமன்று, அறிவியல், சமூக அறிவியல் என்று ஆட்டுக்கிடைக்குள் நரிக்கூட்டம் புகுந்தது போன்று சகட்டுமேனிக்கு விளையாடியிருக்கின்றனர். அதிகார மர்த்தினி சொல் லியதைவிட, அதிகாரிகள் சற்று அதிகமாகவே பொடி தூவி இருக்கிறார்கள் என்று தெரிகிறது. பாவம் ஆசிரியர்கள்தான் விழுந்து விழுந்து கிழிக்கிறார்கள்.

ஆறாம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்தில் (பக்கம் 35, 82) சூரியன் வருகின்ற இடங்களும், கலைஞர் என்று வருகின்ற இடங்களும் நிரந்தர மார்க்கர் கொண்டு அழிக்கப்பட வேண்டும். 82ஆம் பக்கத்தில் இருக்கின்ற தமிழ்நாடு வரைபடத்தையும் தாள் ஒட்டி மறைக்கச் சொல்லியிருப்பதில்தான் என்ன சூட்சுமம் இருக்கிறது என்று நமக்கு விளங்கவில்லை. ஒருவேளை அதில் கொடநாடு காட்டப்படாதது காரணமாக இருக்கலாம். கலைஞர் மேல்தான் கட்டுக்கடங்காத கோபம், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் அரசியல் வழிகாட்டி அறிஞர் அண்ணாவின் மேல் என்ன கோபம் புரட்சித் தலைவிக்கு? 17ஆம் பக்கத்தில், அனைத்துக் கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம் என்பதை கருப்புமை கொண்டு அழித்துவிடச் சொல்லிவிட்டனர். அவர்களிடம் ஒரு கேள்வி, கட்சியின் பெயரில் இருக்கின்ற அண்ணாவை என்ன செய்யப் போகிறீர்கள்?

இந்த ஆரியக் கூத்து, அறிவியலிலும் தொடர்கிறது. 81ஆம் பக்கத்தில் இடம் பெற்றிருக்கும் சட்டகாந்தம் படத்தின் மீது தாள் ஒட்டச்சொல்லி அறிவுறுத்தப்பட்டுள்ளது. சட்டகாந்தம் என்ன சட்டத்திற்குப் புறம்பானதா? அப்படியயல்லாம் ஒன்றுமில்லை, அது கருப்பு, சிவப்பு நிறத்தில் இருக்கிறது அவ்வளவுதான். காந்தங்களின் துருவங்க ளைக் குறிப்பதற்கு, உலகம் முழுவதும் சிவப்பு நிறம்தான் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. அம்மாவின் அரசியல், உலக அரசியலாக இருக்கிறது போங்கள் !

இந்த அவலங்களை அடுக்கிக்கொண்டே போகலாம். சிலவற்றைச் சொல்லியிருக்கிறோம் நாம். பாடநூல் தயாரிப்புக் குழுவில் இடம்பெற்றிருந்த ஓர் ஆசிரியரிடம் பேசிய போது, ‘கடந்த தி.மு.க. ஆட்சியில், உதயசூரியன் உள்பட எந்த அரசியல் கட்சிகளின் சின்னமும் இடம்பெ றாமல் பார்த்துக் கொள்ளுங்கள் என்று அறிவுறுத்தப்பட்டது. ஆனால் இவர்களோ இவ்வளவு கோண லான பார்வையோடு இருக்கிறார் களே’ என்று சொல்லி வருந்தினார்.

இதைவிடப் பெரிய வேதனை சமச்சீர்க் கல்வியை ஆராய அமைக்கப்பட்டுள்ள நிபுணர்கள் குழுதான். பிற வகுப்புகளுக்கு சமச்சீர்க்கல்வியை நடைமுறைப்படுத்துவது குறித்து ஆராய 9 பேர் கொண்ட நிபுணர் குழுவை அரசு அமைக்க வேண்டும் என்பது உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு. இதில் முதல் ஓட்டை, இந்தக் குழுவை உச்சநீதிமன்றமே அமைத்திருக்க வேண்டும். இரண்டாவது, பாலுக்கு பூனை காவல் என்பதுபோல அரசிடமே குழு அமைக்கச் சொல்லியிருக்கிறது.

அம்மையார் அமைத்திருக்கும் 9 பேர் கொண்ட குழுவில், 6 பேர் பார்ப்பனர்கள். என்ன செய்வது, அவருடைய பார்வைத்திறன் 3 சதவீதத்திற்குள் மட்டும்தான் சுற்றி வருகிறது. அதில் மாநில பிரதிநிதி களில் ஒருவராக நியமிக்கப்பட்டுள்ள லேடி ஆண்டாள் பள்ளியின் ஆலோசகர், விஜயலட்சுமி சீனிவாசன், ' சமச்சீர்க் கல்வி வந்துட்டா, உங்க பிள்ளைங்களுக்குப் பக்கத்துல சேரி பிள்ளைங்க வந்து ஒக்காந்துருவாங்க ' என்று பெற்றோர் களிடம் சொல்லிவருவதாகத் தெரி கிறது. உண்மையாக இருக்கும் வேளையில், தீண்டாமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறைக்கு அனுப்பட வேண்டி யவர் அவர். கோபாலபுரம் டி.ஏ.வி. பள்ளிகள் குழுமத்தின் நிறுவனர் சி. ஜெய தேவ் மற்றும் பத்மா சேஷாத்ரி பாலபவன் பள்ளிகளின் முதல்வர் திருமதி ஒய்.ஜி. பார்த்தசாரதி ஆகிய இருவரும் பணத்தை அள்ளிக் குவித்துக் கொண்டிருக்கும் கல்வி வியாபாரிகள். இவர்களைத் தான் கல்வியாளர்கள் வரிசையில் வைத்திருக்கிறார் சர்ச் பார்க் கான்வென்டின் முன்னாள் மாணவி.

சமச்சீர்க்கல்வியைப் பற்றி நன்கறிந்த அறிஞர்களும், அதற்கான பணிகளில் முனைந்து நின்றவர்களுமான முனைவர் ச. முத்துக்குமரன், பேரா. கல்விமணி, முனைவர் வசந்திதேவி, பேரா.இராசகோபாலன் போன்ற கல்வியாளர்கள், சமச்சீர்க்கல்விக் குழுக்களில் இடம்பெற்றவர்கள் என யாரையுமே இக்குழுவில் சேர்க்காமல் தவிர்த்ததில் இருந்தே அவர்களின் நோக்கம் தெளிவாகப் புரிகிறது. பாடநூல்களின் தரத்தை உயர்த்துவதன்று இவர் களின் நோக்கம். சென்னை உயர்நீதிமன்றம் சொன்னதுபோல, சமச்சீர்க்கல்வியின் மூலச்சட் டத்தைத் திரும்ப பெறுவதும் அல்லது காலவரை யின்றிக் கிடப்பில் போடுவதுமே இந்த அரசின் திட்டம்.

காரணம், தமிழ்நாடு அறிவியல் இயக்கம் நடத்திய ஆய்வு முடிவு, சமச்சீர்க்கல்வி பாடப் புத்தகங்கள் தரமானவைதான் எனத் தெரிவித் திருக்கிறது. பத்தாம் வகுப்பு பாடங்கள் மெட்ரிக் புத்தகங்களைவிட மேம்பட்டவை என்றும், தரமான வடிவமைப்பு, எளிய மொழி நடை, தமிழ், ஆங்கில இலக்கணத்தை மாணவர்களே பங்கேற்றுக் கற்றுக்கொள்ளக் கூடிய உரையாடல் வடிவங்கள் என்று தரமான கல்விக்கான அத்தனை கூறுகளையும் தன்னுள் கொண்டுள்ளன இப்புத்தகங்கள் என ஆணித்த ரமாகக் கூறு கின்றனர் ஆய்வை நடத்திய, கல்வியாளர் இராசகோபாலன், பேரா.கருணா னந்தம் மற்றும் இயக்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் பாலகிருஷ்ணன் ஆகியோர்.

பாடத்திணிப்பும், அதிகப்படியான பாடச் சுமையும் ஒருபோதும் கல்வியின் தரத்தை உயர்த்திவிடாது என்கின்றனர் கல்வியியல் நிபுணர்கள். பழைய பாடமுறையே தொடர வேண்டும் என்பவர்கள், நம்மைக் கல்வியில் முன்னேறாத சமூகமாக வைத்திருக்க முயல்கி றார்கள் என்பது தெளிவாகிறது. ஏற்கனவே நமக்குக் கல்வியை மறுத்த சமூகம்தானே?

அந்தந்தப் பகுதிசார்ந்த அதாவது வட்டார வரலாறுகளையும் பாடங்களோடு இணைத்துக் கொள்ளும் செயல்பாட்டுச் சுதந்திரத்தைப் பள்ளிகளுக்கு வழங்க வேண்டும் என்று முனைவர் ச. முத்துக்குமரன் குழு அறிக்கை சொல்கிறது. காரணம் நம்முடைய சமூக, வரலாற்றுக் கூறுகள் சிதைந்து காணாமல் போய்விடக்கூடாது என்பதற்காக. அந்த அடிப்படையில் பார்த்தால், இன்று தமிழக அரசு அமைத்துள்ள குழுவில், இம்மண்ணின் வரலாற்றோடு தொடர்புடைய கல்வியாளர்கள்தான் அமர்த்தப் பட்டிருக்க வேண்டும். தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன (என்.சி.இ.ஆர்.டி) பிரதிநிதி களுக்கும் தமிழர்களின் வரலாற்றுக்கும், வாழ்வியலுக்கும் என்ன தொடர் பிருக்க முடியும்? தமிழகத்தின் கல்வியைப் பற்றி ஆராயத் தமிழே தெரியாத அணில் சேத்தி போன் றோரை நியமிக்கின்றார்கள் என்றால், இவர்களுக்கு நம் பிள்ளைகளின் மீது என்ன அக்கறை இருக்க முடியும் என்பதை நாம் எண்ணிப் பார்க்க வேண்டும்.

நாடற்ற கூட்டத்திற்கு, ஒரு நாட்டின் பண்பாடு, கலை, கல்வி வளர்ச்சியைப் பற்றி என்ன கவலை? அவர்களுக்கு இது எல்லாமே பிழைப்பு. நமக்கோ வாழ்க்கை.

நன்றி : கருஞ்சட்டைத் தமிழர்

No comments:

Post a Comment