கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Sunday, July 24, 2011

கருணாநிதி தலைமையில் பொதுக்குழு கூடியது : முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம் - கோவையில் திமுகவினர் திரண்டனர்






திமுக பொதுக்குழு கூட்டம், கட்சித் தலைவர் கருணாநிதி தலைமையில் கோவையில் 24.07.2011 அன்று காலை கூடியது. முன்னணி நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இதில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தமிழகம் முழுவதும் இருந்து வந்திருந்த பொதுக்குழு உறுப்பினர்கள், காலை 8.30 மணியில் இருந்தே அரங்கத்துக்கு வரத்துவங்கினர். அழைப்பிதழ் உள்ளவர்களிடம் கையெழுத்து பெறப்பட்டு, பின்னர் பொதுக்குழு அரங்குக்குள் அனுமதிக்கப்பட்டனர். முன்னாள் அமை ச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள், எம்.பி., எம்எல்ஏக்கள், மத்திய அமைச்சர்கள் என அடுத்தடுத்து வந்தனர். 9.45 மணிக்கு அன்பழகன், மு.க.ஸ்டாலின், மத்திய அமைச்சர்கள் அழகிரி, பழனிமாணிக்கம், முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதிமாறன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் வந்தனர். காலை 10.25 மணிக்கு கருணாநிதி வந்தார். அரங்கம் அருகே திருச்சி ரோட்டில் திரண்டிருந்த தொண்டர்கள், கருணாநிதியை வாழ்த்தி கோஷமிட்டனர். அவர்களை பார்த்து கருணாநிதி கையசைத்தவாறே சென்றார்.
பின்னர், 10.30 மணிக்கு கருணாநிதி தலைமையில் பொதுக்குழு கூட்டம் தொடங்கியது. பொங்கலூர் பழனிச்சாமி வரவேற்று பேசினார். கருணாநிதி துவக்க உரையாற்றினார். அதைத் தொடர்ந்து கட்சி நிர்வாகிகள் தங்கள் கருத்துக்களை தெரிவித்து பேசினர். கட்சி அமைப்பை வலுப்படுத்துவது, திமுகவினர் மீது அதிமுக அரசு தொடர்ந்து பொய் வழக்குகள் போடுவதை கண்டித்தும், அந்த வழக்குகளை சட்ட ரீதியாக சந்திப்பது குறித்தும் பலர் கருத்து தெரிவித்தனர். அதிமுக அரசை கண்டித்து ஆகஸ்ட் 1&ம் தேதி கட்சித் தலைமை அறிவித்துள்ள அறப்போராட்டத்தை தீவிரமாக நடத்துவது குறித்தும் விவாதிக்கப்பட்டது.

இதையடுத்து பொதுக்குழுவில் 25 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதன் விவரம் வருமாறு:
* சட்டசபை தேர்தலில் 39.44 சதவீதம் வாக்குகளை திமுக பெற்றுள்ளது. ஒரு கோடியே 45 லட்சம் வாக்குகளை திமுக தலைமையிலான கூட்டணி பெற்றுள்ளது. பொய் பிரசாரங்களுக்கு எதிராக இந்த கூட்டணிக்கு நம்பிக்கையோடு வாக்களித்த அனைவருக்கும் பொதுக்குழு நன்றி தெரிவிக்கிறது.

* அறிவாற்றல் மிகுந்த கருணாநிதியின் வாழ்வு, வாழ்க்கை லட்சியம், ஆர்வம், உழைப்பு, முயற்சி, அறப்போராட்டம், தியாகம், கலைத்துறை பணி, சட்டமன்ற பணி, முதல்வராக ஆற்றிய அருந்தொண்டு நிறைவேற்றிய சாதனைகள் எல்லாம் திமுகவின் குறிக்கோளை அடைய கருணாநிதியால் மேற்கொள்ளப்பட்டது என்பதை நாடறியும். திராவிட இயக்கத்தின் தனிப்பெரும் தலைவரான கலைஞரின் தொண்டு தொடரவும், தொடர் வழிகாட்டவும் அவர் பல்லாண்டு காலம் நலத்துடன் மகிழ்ந்து வாழ இப்பொதுக்குழு அவருக்கு வாழ்த்துக்களை தெரிவிக்கிறது.

* அடுக்கடுக்கான மக்கள் பிரச்னை இருக்கும்போது அவற்றை புறந்தள்ளிவிட்டு எதிர்க்கட்சிகளை பழிவாங்குவதையே முக்கிய பணியாக கொண்டு பொய் வழக்குகளை புனைந்தும், மிரட்டியும் திமுகவை வலுவிழக்க செய்ய அதிமுக அரசு முயற்சிக்கிறது. ஆதாரமற்ற நிலையில் இந்த அரசு ஏவிவிடும் ஜனநாயக விரோத, சட்ட முரணான அடக்குமுறைகளை தமிழ் மக்கள் உணர்வுபூர்வமாக ஒன்றுபட்டு கண்டனம் தெரிவிக்க முன்வர வேண்டும். இந்த அராஜக முறையை எதிர்ப்பதில் திமுக உறுதியோடு இருக்கும். பொய் வழக்குகளை கண்டித்து ஆகஸ்ட் 1&ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.

* 2ஜி அலைக்கற்றை விவகாரத்தில் இந்திய தலைமை தணிக்கை அதிகாரி அறிக்கையின் அடிப்படையில் சிபிஐ வழக்கு பதிவு செய்து தொடர்புடையவர்கள் என கருதப்பட்டவர்களை கைது செய்துள்ளார்கள். 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை தற்போது நடைபெறுகிறது. அதுபோன்று நாடாளுமன்ற பொதுக்கணக்கு குழு விசாரித்துக்கொண்டிருக்கிறது.
2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பாக நியமிக்கப்பட்ட உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி சிவராஜ்பாடீல் தலைமையிலான ஒரு நபர் குழுவும் விசாரித்து அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
உச்சநீதிமன்றம் 2ஜி அலைக்கற்றை தொடர்பாக 2001ம் ஆண்டில் இருந்து விசாரிக்க வேண்டும் என்று சிபிஐக்கு உத்தரவிட்டுள்ளது.இக்காலத்தில் பாரதிய ஜனதா கட்சியை சார்ந்தவர்களும், மற்றவர்களும் தொலைதொடர்புத்துறை அமைச்சர்களாக இருந்திருக்கிறார்கள்.
2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு கொள்கை யாரால் முதன்முதலாக உருவாக்கப்பட்டது. பின்னர் யாரால் அக்கொள்கை மாற்றம் செய்யப்பட்டது.
கொள்கை உருவாக்கப்பட்டதற்கும், மாற்றப்பட்டதற்கும் அமைச்சரவையின் ஒப்புதல் தரப்பட்டுள்ளதா என்பதற்கான முழு விபரம் கிடைக்காத சூழ்நிலையில் நாடாளுமன்ற குழுவின் விசாரணை முடிவுபெறாத நிலையில் எதிர்க்கட்சிகள் எழுப்பிய எதிர்ப்பினையொட்டி இந்த துறையின் அமைச்சராக இருந்த ராசா பதவி விலகினார்.
அதற்குப்பிறகு ஒரு சில ஏடுகளில் இப்பிரச்னை எழுப்பப்பட்டதன் அடிப்படையில் இந்த துறையில் ஏற்கனவே அமைச்சராக இருந்த தயாநிதிமாறன், நீதிமன்றத்தில் நாங்கள் குற்றமற்றவர் என்பதை நிரூபிப்போம் என்று கூறி பதவி விலகியிருக்கிறார்கள். இப்பிரச்னைக்கு விரைவில் நீதிமன்றத்தில் நல்ல தீர்ப்பு கிடைக்குமென பொதுக்குழு நம்புகிறது.

* இந்திய தலைமை தணிக்கை அதிகாரி குறிப்பிட்ட ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி அலைக்கற்றை இழப்பு குறித்தும்மற்ற விவரங்கள் குறித்தும் விசாரணை நடக்கிறது. இந்த பிரச்னைக்கு சற்றும் தொடர்பிலாத கலைஞர் தொலைக்காட்சி நடத்திய கொடுக்கல், வாங்கல் வர் போன்ற கடன் பிரச்னைகள் வேறு. ஆனால் டிவி நிர்வாகத்தில் கனிமொழி 20 விழுக்காடு பங்குக்கு உரியவர் என்ற முறையில் குற்றமாக கருதி கனிமொழியும், நிர்வாக இயக்குநர் சரத்குமாரும் வெளியில் வருவதை சிபிஐ கடுமையாக ஆட்சேபித்து தொடர்ந்து சிறைத்தில் வைத்திருப்பது நியாயத்துக்கு புறம்பானதாகும்.
* லோக்பால் சட்டத்திற்கு முன்னோடியாக, கடந்த 1973ல் கருணாநிதி முதல்வராக இருந்தபோது பொது வாழ்வில் ஈடுபட்டோர் லஞ்ச ஊழல் குற்றத் தடுப்பு சட்டத்தை செயல்படுத்தினார். லஞ்ச, ஊழல் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் 7 ஆண்டு சிறை தண்டனை வழங்கவும், பொய்யான தகவல் அளித்திருந்தால் 3 ஆண்டு ஜெயில் தண்டனையும் விதிக்க அச்சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டது. மேலும் இந்த சட்டத்தில் முதல்வர் முதல் கீழ் மட்டத்தில் மாநகராட்சி உறுப்பினர் வரை இச்சட்டத்தின் கீழ் அடங்குவர் என சட்டம் கொண்டு வரப்பட்டது.
இந்த சட்டத்தை அப்போதைய ஜனசங்க தலைவராக இருந்த எல்.கே. அத்வானி,பாராட்டினார். நாட்டுக்கே வழி காட்டும் வகையில் இந்த சட்டத்தை கருணாநிதி கொண்டு வந்தார் என்பதை சுட்டிககாட்டி அவர் வழி நடத்தும் திமுக, லோக்பால் சட்டத்தில் பிரதமரையும் சேர்க்கவேண்டும்
* கிராமப்புற மாணவர்கள், நகர்ப்புற மாணவர்கள் வசதி படைத்த மாணவர்கள், ஏழை, எளிய மாணவர்கள் என்ற நிலை வேறுபாடுகளை அகற்றி திமுக ஆட்சியில் கொள்கை முடிவு எடுக்கப்பட்டு, சமச்சீர் கல்வி 2010 கல்வியாண்டு முதல் தமிழகத்தில் ஒன்று மற்றும் ஆறாம் வகுப்பு நடைமுறைப்படுத்தப்பட்டு, புதிய பாடநூல் வழங்கப்பட்டது. 2011 கல்வியாண்டில் சமச்சீர் கல்வி முறையில் இதர வகுப்புகளுக்கான பொதுப்பாடத்திட்டம் உருவாக்கப்பட்டு பாடநூல் அச்சிடப்பட்டது. இந்த சமச்சீர் கல்வி முறையை எதிர்த்து உயர்நீதி மன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசு பிறப்பித்த சட்டம் செல்லும் என்று கடந்த 2010 ஏப்ரல் 30ல் உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அப்போதே உச்சநீதிமன்றத்தின் மேல்முறையீடு செய்யப்பட்ட வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டன.இவ்வாறு அரசின் கொள்கை என்ற முறையில் நீதிமன்றங்கள் அளித்த தீர்ப்பின் வகையிலும் சமச்சீர்கல்வி உறுதி செய்யப்பட்டுள்ளது.
நடப்பு கல்வியாண்டில் எஞ்சிய வகுப்புகளுக்கு ரூ.200 கோடி செலவில் புத்தகங்கள் அச்சிடப்பட்டு மாவட்டங்களுக்கும் அனுப்பப்பட்டது.
பொதுமக்கள் பெற்றோர் மாணவர்களுக்கு தெரிவிக்கும் வகையில் இணையதளத்தில் வெளியிடப்பட்டது. இந்நிலையில், சட்டத்திருத்தம் என்ற பெயரில் சமச்சீர் கல்வியை குழிதேண்டி புதைக்க முயற்சிப்பதும் பொதுமக்களையும் மாணவர்களையும் ஏமாற்றும் காரியம். இது பள்ளி மாணவர்கள் மத்தியில் குழப்பத்தை உருவாக்கி படிப்பை பாழாக்கும் செயல் என்று இப்பொதுக்குழு அறிவிக்கிறது. இருளிலும் ஒரு ஒளியாக சென்னை உயர்நீதிமன்றம் திமுக அரசு கொண்டு வந்த சமச்சீர் கல்விக்கு பாதுகாப்பாக சமச்சீர் கல்விக்காக அண்மையில் அளித்துள்ள மகத்தான தீர்ப்பு மனக்கவலையை போக்கும் மருந்தாக அமைகிறது. , அதனை ஏற்க வேண்டுமென்று தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சி தலைவர்களும் கல்வியாளர்கள் பலரும் அதிமுக அரசுக்கு வேண்டுகோள் விடுத்தும் அதை ஏற்காமல் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது என்பது யாரையும் மதிக்காத செயல் என்பதை இப்பொதுக்குழு சுட்டிக்காட்டுகிறது. அதற்கு தகுந்த பாடம் கற்பிக்கத்தக்க வகையில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பில் உயர்நீதிமன்ற தீர்ப்பிற்கு தடை விதிக்க முடியாது என்றும் ஆக.2ம் தேதிக்குள் சமச்சீர் கல்வி பாடபுத்தகங்களை விநியோகிக்க வேண்டுமென்றும் கூறியிருப்பதை இப்பொதுக்குழு வரவேற்கிறது. உச்சநீதிமன்ற உத்தரவை அவமதிக்கின்ற அளவிற்கு ஜெயலலிதா அரசு சமச்சீர் பாடப்புத்தகங்களை இதுவரை வழங்காமலும் இணையதளத்தில் இருந்து சமச்சீர் கல்வி பாடப்புத்தகங்களை நீக்கம் செய்திருப்பதும் இப்பொதுக்குழு வன்மையாக கண்டிக்கிறது.
* இலங்கை தமிழர்களுடைய பிரச்னைகளுக்காக தொடர்ந்து குரல் கொடுத்துப் போராடிக்கொண்டிருக்கும் ஒரே இயக்கம் தி.மு.கதான். டி.ஆர்.பாலு, எம்.பி., அவர்கள் தலைமையில் இலங்கை தமிழர்களின் இன்னல் போக்கிடுவதற்கான ஐக்கிய முற்போக்கு கூட்டணியிலே உள்ள தமிழகத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு, இலங்கை சென்று அங்கே முகாம்களில் அவதியுறும் தமிழர்களைக் கண்டு ஆறுதல் கூறியதோடு, இலங்கை அதிபரையும் கண்டு முகாம்களில் துயரத்திற்கு உள்ளாகி இருக்கும் தமிழர்கள் தங்கள் சொந்த வாழ்விடங்களுக்கு விரைவிலேயே செல்வதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு வலியுறுத்தியதன் அடிப்படையில், ஏறத்தாழ 1 லட்சத்து, 25 ஆயிரம் இலங்கை தமிழர்கள் தங்கள் சொந்த வாழ்விடங்களுக்கு திரும்பவும், அவர்களது நல்வாழ்வுக்கான உதவிகள் இலங்கை அரசால் வழங்கப்படவும், மத்திய அரசு இலங்கை அரசினை வலியுறுத்துமென்றும்; ஏற்கனவே உறுதியளித்தபடி இலங்கை தமிழர்கள் சிங்களவர்களைப் போல சம உரிமை பெற்று வாழ்வதற்கேற்ற வழிவகை காண வேண்டும் என்றும்; அதிகார பகிர்வு மேற்கொள்வது ஒன்றுதான் நிரந்தர, நிம்மதியான சகவாழ்வுக்கு வழி வகுத்திடும் என்பதால், அதற்குரிய அரசியல் தீர்வினைக் காண தேவையான முயற்சிகள் அனைத்தையும் மத்திய அரசு விரைவில் மேற்கொண்டு ஆவன செய்யவேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.
தலைவர் கலைஞர் முதலமைச்சராக இருந்தபோதும், இல்லாதபோதும் இந்திய அரசை வலியுறுத்தி தமிழ் ஈழ மக்களுக்கு குறைந்தபட்சம் சம உரிமையாவது வழங்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறார். இதற்கான அரசியல் நிர்பந்தத்தை மத்திய அரசு இலங்கை அரசுக்கு உருவாக்க வேண்டும் என்பதை பிரதமரை சந்திக்கும்போது நேரிடையாகவும், கடிதங்கள் மூலமாகவும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தும் இதுநாள் வரை எந்த பயனும் ஏற்படவில்லை.
இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட போர்க்குற்றங்கள் பற்றிய ஐக்கிய நாடுகள் அவையின் விசாரணைக் குழு அறிக்கையில் காணப்படும் போர்க்குற்றங்களுக்கான பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றதத்தில், இந்த கொடுஞ்செயலுக்குக் காரணமானவர்களைத் தண்டிக்க உரிய நடவடிக்கைகளை எடுப்பதற்கு மனித உரிமையை போற்றுகின்ற இந்தியா உட்பட அனைத்து நாடுகளும் முன் வரவேண்டும் என்று இப்பொதுக்குழு வலியுறுத்துகின்றது. ஈழத்தமிழர்களின் உரிமை காத்திட அவர்களிடம் வாக்கெடுப்பு நடத்தி ஓர் அரசியல் தீர்வுக்கு வழி காணவேண்டும் என இப்பொதுக் குழு கேட்டுக்கொள்கிறது.
* திமுகவின் அனைத்து மட்டங்களிலும் செயல்படும் முறை குறித்தும், மேலும் வலுவாகவும், கட்டுபாட்டுடனும் செயல்படுவதற்குரிய கட்சி அமைப்பில் மாற்றங்கள் செய்ய ஜூலை 15க்குள் கருத்துக்களை அனுப்பிவைக்கும்படி வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்தது.
இது தொடர்பாக அமைப்பு முறையில் மாற்றம் தேவை, தேவையில்லை என்பது குறித்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட விளக்க கடிதங்கள் வந்துள்ளன. கருத்துக்களை ஆய்வு செய்து அமைப்பு சட்ட திட்டத்தில் இணைத்து செயல்பட்டால் மேலும் கட்சி வலுப்பெறும்.
திராவிட இன எழுச்சி என்னும் குறிக்கோளை எட்டும் வகையில் தலைமைக்கு வந்துள்ள கடிதங்களை கட்சி சட்ட திட்டங்கள், கொள்கை குறிக்கோளுக்கு அடித்தளமாக பயன்படுத்தப்படும்.கடிதங்களின் கருத்துக்களை ஆராய்ந்து அமைப்பு முறைகளை ஒழுங்குபடுத்த கழக அமைப்பு முறை ஆலோசனைக்குழு அமைக்க முடிவு செய்யப்பட்டது. இந்த குழுவில் எம்.பி டி.கே.எஸ் இளங்கோவன், பொன்.முத்துராமலிங்கம், ஜி.எம்.ஷா, கு.பிச்சாண்டி, முகமது சகி, வி.பி.ராஜன், பாஸ்கர் சுந்ரம் ஆகிய 7 பேர் கொண்ட குழு நியமிக்கப்படுகிறது.
இக்குழுவினர் விவாதித்து விரைவில் வழங்கிடும் புதிய சட்ட திட்டம் வகுப்பதற்கான வழிமுறைகள் அடுத்து நடைபெறும் பொதுக்குழுவில் வைத்து ஒப்புதல் பெறப்படும்.
* கச்சத்தீவிற்கு தமிழக மீனவர்கள் தடை ஏதுமின்றிச் செல்வதற்கும், அதனையொட்டிய இடங்களில் இழந்த உரிமையைக் கைக்கொள்வதற்கும், மீட்டெடுப்பதற்கும், கச்சத்தீவினை இந்தியாவிற்கே திரும்பப் பெறுவதற்கும் உரிய சட்ட நடவடிக்கைகளை மேலும் காலதாமதமின்றி மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய அரசை இப்பொதுக்குழு வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.


இலங்கைக்குத் தாரை வார்க்கப்பட்ட கச்சத்தீவை மீட்பதற்குப் போராடுவேன் என்று சபதம் செய்துவிட்டு, பத்தாண்டு காலம் ஆட்சியிலே இருந்தவர் கச்சத்தீவை மீட்பதற்கு எந்தவித முயற்சியும் மேற்கொள்ளாமல் சட்டப்பேரவையில் இப்போது தீர்மானம் கொண்டு வந்திருக்கும் சந்தர்ப்பவாதப் போக்கினை தமிழக மக்களுக்கு இந்தப் பொதுக்குழு சுட்டிக் காட்டுகிறது

* உண்மையான நில அபகரிப்பாளர்கள் மீது எடுக்கும் சட்டப்படியான நடவடிக்கையை வரவேற்பதோடு, 2006ம் ஆண்டிற்கு முந்தைய காலகட்டங்களில் நடைபெற்ற நில அபகரிப்பு மோசடிகள் மீதும், பாரபட்சமற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் 13&5&2&2010ல் தெரிவிக்கப்பட்டபடி, சிறுதாவூர் தலித் மக்களிடம், மோசடியாக பறிக்கப்பட்ட அவர்களின் நிலத்தை அவர்களுக்கே திருப்பி வழங்கிட வேண்டும் என்ற கோரிக்கையையும், சிறுதாவூர் நில அபகரிப்பு பற்றி விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட கமிஷன் அறிக்கையில் கண்டுள்ள விவரப்படி, அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலத்தையும் மீண்டும் தலித்துக்களுக்கு வழங்க வேண்டும்.
* நாடாளுமன்றம், சட்டமன்றங்களில் மகளிர் உரிமை பெறுவதை மேலும் காலம் தாழ்த்தாமல் 33 சதவீத இடஒதுக்கீடு மகளிர்க்கு அளிக்கும் சட்டத் திருத்தத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.
* மத்திய அரசு உடனடியாக டீசல், பெட்ரோல், காஸ் மற்றும் மண்ணெண்ணை ஆகியவற்றின் விலைகளைக் குறைக்க வேண்டும் என்று இப்பொதுக்குழு கேட்டு கொள்கிறது.
* சேது சமுத்திர திட்டம் தொடர்பான வழக்கை விரைந்து நடத்தி முடித்து, சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்.
* தமிழக அரசு 4200 கோடி ரூபாய்க்கு வரி விதிப்பு செய்தது. உயர்த்தப்பட்ட வரிகளை கைவிடவேண்டுமென்று வலியுறுத்துகிறது.

* திராவிட முன்னேற்றக்கழக ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்டுள்ள தலைமைச் செயலகத்தைப் பயன்படுத்திக் கொள்ள முன்வராமல், போலியான கற்பனை கலந்த காரணத்தைக் கூறி, செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்கே மாற்றியிருப்பதும், புதிய தலைமைச் செயலகக் கட்டுமானப் பணிகளை நிறுத்தி வைத்திருப்பதும், அ.தி.மு.க அரசின் �வெறுப்பு அரசியல்� என்பதை இப்பொதுக்குழு சுட்டிக்காட்டி கண்டிக்கிறது.

* செம்மொழி மையத்தினுடைய �பாவேந்தர்� செம்மொழித் தமிழாய்வு நூலகத்தை இரவோடு இரவாக அப்புறப்படுத்திய நடவடிக்கையின் மூலம் ஜெயலலிதா தமிழ்ச் செம்மொழிக்கே விரோதமானவர் என்பதை நிரூபித்துள்ளார்.
* திருச்சி, கோவை, திருநெல்வேலி, மதுரை என்று நான்கு இடங்களில் அண்ணா தொழில்நுட்பப் பல்கலைக் கழகங்கள் புதிதாக கழக ஆட்சியில் தொடங்கப்பட்டன. சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தை நிர்வாகச் சுமை மிகுந்த பழைய நிலைக்கே கொண்டு வர முடிவெடித்திருப்பதாகச் சொல்வது மாணவர்களின் எதிர்காலத்தையும், உயர் கல்வியின் தரத்தையும், ஆராய்ச்சியின் தரத்தையும் நாசமாக்கி அழித்திடும் தவறான முயற்சி என்பதை இந்தப் பொதுக்குழு சுட்டிக்காட்டுகிறது.

* திராவிட மொழி குடும்பத்தின் மூத்த மொழியும் கலை இலக்கிய பண்பாடும் வளமும் நிறைந்த செம்மொழியான தமிழ் மொழியை, மத்திய ஆட்சி மொழிகளில் ஒன்றாக அறிவிக்க வேண்டும் என்று இந்த பொதுக்குழு மத்திய அரசை வலிறுத்தி கேட்டு கொள்கிறது.
* தமிழ் உள்ளிட்ட மாநில ஆட்சி மொழிகளை உயர் நீதிமன்ற மொழியாக பயன்படுத்த மத்திய அரசு முன் வரவேண்டும் என வேண்டுகோள் விடுத்து பிரதமருக்கு கடிதமும் எழுதியுள்ளார். நீதிமன்ற நடவடிக்கைகளும் தீர்ப்புகளும் தமிழ் உள்ளிட்ட அனைத்து மாநில ஆட்சி மொழிகளிலும் வெளியிடப்படுவதை, அனைத்து உயர் நீதிமன்றங்களிலும் நடைமுறைப்படுத்த வேண்டுமென்று மத்திய அரசை இந்த பொது குழு மீண்டும் வலியுறுத்தி கேட்டு கொள்கிறது.
* தமிழகத்தில் மீண்டும் மேலவை வருவதற்கான தீர்மானம் தமிழக சட்ட பேரவையிலும் , பாராளுமன்றத்திலம் நிறைவேற்றப்பட்டு, மேலவை வருவதற்கான ஏற்பாடு தீவிரமாக நடந்து கொண்டிருந்த நேரத்தில், தமிழகத்தில் பல ஆண்டுகளாக செயல்பட்டு வந்த மேலவையை கலைப்பதற்கு காரணமாக இருந்த அ.தி.மு.கவினால் தமிழகத்தில் மீண்டும் மேலவை வருவதை பொறுத்து கொள்ள முடியவில்லை. அவ்வப்போது ஆழ்ந்த கருத்துகளை வழங்கி அரசு நடத்திட உதவியதையும் கருத்தில் கொண்டு மேலவையை மீண்டும் கொண்டு வருவது என தி.மு.க அரசு முடிவெடுத்து அதற்கான முயற்சியில் முனைப்போது ஈடுபட்டது. இந்த ஒரே காரணத்திற்காக மேலவை கொண்டு வர தேவையில்லை என அ.தி.மு.க அரசு குறுகிய எண்ணத்தோடு எடுத்துள்ள முடிவை பொது குழு வன்மையாக கண்டிக்கிறது.

* திமுக ஆட்சியில் அமைக்கப்பட்ட நீதியரசர் ராஜமன்னார் குழு அறிக்கையை திமுக சார்பில் முரசொலிமாறன், இரா.செழியன் ஆகியோரைக் கொண்ட குழு ஆய்வு செய்து, தனது கருத்துக்களை தெரிவித்தது. அதன் அடிப்படையில் தான் 1974 ஏப்ரல் 14ம் தேதி அன்று வரலாற்றுச் சிறப்புமிக்க, �மாநில சுயாட்சித் தீர்மானம்� தமிழக சட்டமன்றத்தில் முதலமைச்சர் கலைஞரால் முன்மொழியப்பட்டு, நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கும் அனுப்பப்பட்டது.
மாநிலத்தில் சுயாட்சியும் மத்தியில் கூட்டாட்சியும் ஆக்கப்பூர்வமாக உருவாகி, கூட்டாட்சி அமைப்பு வலுப்பெற, இந்தி அரசமைப்புச் சட்டத்தில் தேவையான திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என இப்பொதுக்குழு மத்தியஅரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.
* முல்லை பெரியாறு அணை பிரச்னையில் தமிழகத்தின் உரிமைகளை நிலை நாட்டிட மத்திய அரசு துணை நின்று நியாயத்தை நிலை நாட்ட வேண்டும் என்றும் இப்பொதுக்குழு மத்திய அரசை கேட்டு கொள்கிறது.

* நாடு விடுதலை பெற்ற பின் இந்தியாவிலேயே முதன் மாநிலமாக கழக அரசால் 1971ம் ஆண்டு குடிசை மாற்று வாரியம் உருவாக்கப்பட்டு, அடிக்கடி தீ விபத்துக்கு ஆளாகும் குடிசை வீடுகளுக்கு பதிலாக மாடி வீடுகள் கட்டி தரப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக தமிழகம் முழுவதும் மனித நேய அடிப்படையில் ஏழை எளிய மக்கள் வசிக்கும் 21 லட்சம் குடிசை வீடுகளுக்கு பதிலாக கான்கிரீட் வீடுகள் கட்டி தரும் கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தை அறிவித்து முதல் கட்டமாக 2250 கோடி ரூபாய் செலவில் குடிசை வீடுகளுக்கு பதிலாக 3 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டி முடிக்க திட்டமிடப்பட்டது.
ஆறாண்டு காலத்தில் தமிழகத்தில் குடிசைகளே இல்லாத வாழ்விடங்கள் அமைக்கும் வாய்ப்பை இத்திட்டத்தின் மூலம் கழக அரசு உருவாக்கியது. மேலும் பேரூராட்சிகளிலும், நகர் புறங்களிலும் வாழும் ஏழை எளிய மக்களுக்கான வீடு கட்டும் திட்டம் பற்றியும் கலைஞர் அரசு அறிவிப்பு செய்து அதனை நடைமுறைப்படுத்தவும் திட்டமிட்டது.
வாழ்வுரிமைக்கு ஆதாரமான நிரந்தர கான்கிரீட் வீடுகளை தமிழக மக்களுக்கு வழங்கப்படுவதற்கு திமுக அரசு திட்டமிட்டது. மாறாக இந்த மகத்தான திட்டத்தை கைவிட்ட ஜெயலலிதா, அரசின் நடவடிக்கையை பொதுக்குழு வன்மையாக கண்டிக்கிறது



என்பது உள்பட 25 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


பொதுக்குழு முடிவுகளை அறிந்துகொள்ளும் ஆர்வத்தில் அரங்குக்கு வெளியே ஆயிரக்கணக்கான திமுகவினர் திரண்டிருந்தனர். அந்தப் பகுதியே மாநில மாநாடு நடப்பதுபோல காட்சி அளித்தது.

No comments:

Post a Comment