திமுக செயற்குழு கூட்டத்தில் பங்கேற்க திமுக தலைவர் கருணாநிதி 23.07.2011 அன்று கோவை வருகிறார்.
சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு திமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் கோவை திருச்சி ரோடு, சிங்காநல்லூர் அருகே அண்ணா வளாகத்தில் நடக்கிறது. கட்சி அமைப்புகளில் மாற்றம் கொண்டு வருதல், அதிமுக அரசு பொறுப்பேற்றவுடன் திமுகவினர் மீது அடுத்தடுத்து வழக்கு போட்டு கைது செய்வது உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பிரச்னை குறித்து செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில் விவாதிக்கப்படுகிறது.
பொதுக்குழு கூட்டத்தில் 1950 பேரும், செயற்குழு கூட்டத்தில் 200 பேரும் பங்கேற்கின்றனர். பொதுக்குழுவில் பங்கேற்க சிறப்பு அழைப்பாளர்கள் 200 பேருக்கும் அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. செயற்குழு கூட்டம் 23.07.2011 அன்று மாலை 4 மணிக்கு திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் நடக்கிறது. இதில், பொது செயலாளர் அன்பழகன் உட்பட கட்சியின் தலைமைக்கழக நிர்வாகிகள், மத்திய அமைச்சர்கள், எம்பி, எம்எல்ஏக்கள், மாவட்ட செயலாளர்கள், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்கின்றனர்.
பொதுக்குழு கூட்டத்தில் விவாதிக்கப்படவேண்டிய விஷயங்கள் குறித்து செயற்குழுவில் இறுதி செய்யப்படுகிறது. 24.07.2011 அன்று காலை 10 மணிக்கு பொதுக்குழு கூட்டம் நடக்கிறது. இதில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகின்றன. இதற்காக, திமுக தலைவர் கருணாநிதி சேரன் எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் 23.07.2011 அன்று காலை 5.30 மணிக்கு கோவை வருகிறார்.
செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டங்கள் நடப்பதை ஒட்டி தமிழகம் மட்டுமில்லாமல் ஆந்திரபிரதேசம், கர்நாடகம், கேரளா, புதுவை, மும்பையில் இருந்தும் திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களும் கோவையில் குவிந்து வருகின்றனர். திமுக தலைவர் கருணாநிதியை வரவேற்று மாநகரம் முழுவதும் திமுக கொடிகள் கட்டப்பட்டுள்ளன.
18 ஆண்டுக்கு பின்...
கடந்த சில ஆண்டுகளாக திமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டங்கள் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடத்தப்பட்டு வருகிறது. கடைசியாக கோவையில் கடந்த 1993ம் ஆண்டு செயற்குழு கூட்டம் நடந்தது. தற்போது 18 ஆண்டுக்கு பின்னர் மீண்டும் கோவையில் திமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் நடைபெறுவது தொண்டர்கள் மத்தியில் உற்சாகத்தையும், ஆர்வத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
No comments:
Post a Comment