கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Monday, July 18, 2011

நடப்பு ஆண்டிலேயே அனைத்து வகுப்புகளிலும் சமச்சீர் கல்வியை அமல்படுத்த ஐகோர்ட் உத்தரவு


அதிமுக அரசு நிறைவேற்றிய சமச்சீர் கல்வி சட்டத் திருத்த மசோதாவை ரத்து செய்து சென்னை ஐகோர்ட் 18.07.2011 அன்று தீர்ப்பளித்தது. சமச்சீர் கல்வியை அனைத்து வகுப்புகளுக்கும் இந்த ஆண்டிலேயே அமல்படுத்த வேண்டும் என்றும் வரும் 22&ம் தேதிக்குள் அனைத்து பள்ளிகளுக்கும் சமச்சீர் கல்வி பாட புத்தகங்களை அனுப்ப வேண்டும் என்றும் அரசுக்கு நீதிபதிகள் அதிரடியாக உத்தரவிட்டனர்.
தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் மாநில பாட திட்டம், ஆங்கிலோ இந்தியன், மெட்ரிகுலேஷன், ஓரியன்டல் என்று பல்வேறு பாட திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வந்தன. எல்லாருக்கும் ஒரே மாதிரியான கல்வி கிடைக்கும் வகையில் சமச்சீர் கல்வி சட்டம் கடந்த ஆட்சியில் கொண்டு வரப்பட்டது. இந்த சட்டத்தை எதிர்த்து மெட்ரிகுலேஷன் பள்ளிகள் தொடர்ந்த வழக்குகளை விசாரித்த ஐகோர்ட் மற்றும் சுப்ரீம் கோர்ட் இரண்டும், தமிழக அரசு கொண்டுவந்த சமச்சீர் கல்வி சட்டம் செல்லும் என தீர்ப்பளித்தன.
இதைத் தொடர்ந்து 1, 6&ம் வகுப்புகளுக்கு சமச்சீர் பாட திட்டம் கடந்த ஆண்டே அறிமுகப்படுத்தப்பட்டது. மற்ற வகுப்புகளுக்கு இந்த கல்வி ஆண்டு முதல் சமச்சீர் கல்வி அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்காக ரூ.200 கோடி செலவில் புதிய பாட புத்தகங்கள் அச்சிடப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டது. இந்நிலையில், ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. அதிமுக அரசு பொறுப்பேற்றதும் அமைச்சரவை கூடி சமச்சீர் கல்வி நிறுத்தப்படுவதாக அறிவித்தது. இதையடுத்து, சட்டசபையில் உடனடியாக சமச்சீர் கல்வி திருத்த சட்டம் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டது.
இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை சென்னை ஐகோர்ட் விசாரித்து, சமச்சீர் கல்வி திருத்த சட்டத்துக்கு இடைக்கால தடை விதித்தது. தடையை நீக்கக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு அப்பீல் செய்தது. இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட், 1 மற்றும் 6&ம் வகுப்புகளுக்கு இந்த ஆண்டு சமச்சீர் கல்வி தொடர வேண்டும் என உத்தரவிட்டது. மற்ற வகுப்புகளுக்கு சமச்சீர் கல்வி குறித்து உயர்நிலை கமிட்டி அமைத்து ஆய்வு செய்து, அறிக்கையை 3 வாரத்தில் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும். அந்த அறிக்கையின் மீது சென்னை ஐகோர்ட் ஒரு வாரத்தில் விசாரணை நடத்தி தீர்ப்பு அளிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.
அதன்படி, தலைமைச் செயலர் தலைமையில் 9 பேர் கொண்ட கமிட்டியை தமிழக அரசு நியமித்தது. இந்த உயர்நிலை கமிட்டி கூடி விவாதித்து அறிக்கை தயாரித்தது. சமச்சீர் கல்விக்காக உருவாக்கப்பட்ட பாட புத்தகங்கள் தரமற்றவை. இந்த புத்தகங்களை பயன்படுத்தினால் மாணவர்களின் கல்வித் தரம் பாதிக்கப்படும் என அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. இந்த அறிக்கை ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து, இரு தரப்பு வக்கீல்களின் வாதங்கள் முடிந்து, கடந்த வாரம் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், இந்த வழக்கில் 18.07.2011 அன்று பகல் 12.47 மணிக்கு தீர்ப்பு வாசிக்கப்பட்டது. தலைமை நீதிபதி இக்பால் மற்றும் நீதிபதி சிவஞானம் அளித்த தீர்ப்பில் கூறியிருப்பதாவது:
தமிழக அரசு கொண்டு வந்த சமச்சீர் கல்வி திருத்த சட்டம் சட்டவிரோதமானது. இந்திய அரசியல் சட்டம் பிரிவு 14க்கு எதிரானது. எனவே அந்த திருத்த சட்டம் செல்லாது. அதை ரத்து செய்கிறோம்.
சட்டத் திருத்தம் கொண்டு வந்து பழைய பாடதிட்டம் தொடரும் என அறிவித்தது மாணவர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. எந்த புத்தகம் படிக்க வேண்டும் என தொடர்ந்து மாணவர்கள் குழப்பத்தில் உள்ளனர். எனவே, இந்த கல்வியாண்டில் 2, 3, 4, 5 மற்றும் 7, 8, 9, 10&ம் வகுப்புகளுக்கு சமச்சீர் கல்வியை உடனே அமல்படுத்த வேண்டும்.
இதற்காக அச்சிடப்பட்ட புத்தகங்களில் மாற்றம் தேவைப்பட்டாலோ அல்லது கூடுதல் பாடம் சேர்க்க விரும்பினாலோ தனியாக ஒரு புத்தகமாக அச்சடித்து அதை கூடுதல் புத்தகமாக 3 மாதத்திற்குள் தர வேண்டும். உச்ச நீதிமன்றம் உத்தரவின்படி தமிழக அரசு அமைத்த உயர்மட்ட கமிட்டியின் அறிக்கை ஏற்புடையதாக இல்லை. சமச்சீர் கல்வி விவகாரத்தில் அரசு அதிகார வரம்பு மீறி அவசர அவசரமாக செயல்பட்டுள்ளது. இதனால் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ள னர். மாணவர்கள் நலன் கருதி அரசு சமச்சீர் கல்வியை உடனே அமல்படுத்த நடவடிக்கை எடுக்கும் என்று நம்புகிறோம்.

சமச்சீர் கல்வி திட்டத்தை தள்ளிவைத்து பழைய பாடத்திட்டம் கொண்டு வந்தால் 1 கோடி மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள். அவர்களின் நலன் தான் முக்கியம். சமச்சீர் கல்வி விவகாரத்தில் அரசின் செயல்பாடுகளினால் கடந்த ஓரு மாதமாக மாணவர்கள் எந்த புத்தகமும் படிக்காமல் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த ஒரு மாதமாக மாணவர்கள் எந்த புத்தகம் படிக்க வேண்டும் என்ற குழப்பத்தில் உள்ளனர். எனவே அச்சடிக்கப்பட்டு தயாராக உள்ள சமச்சீர் கல்வியை இந்த ஆண்டு அமல்படுத்துவது தான் நியாயமானது என்று நாங்கள் கருதுகிறோம்.

இவ்வாறு நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.

தீர்ப்பு அறிவிக்கப்பட்டவுடன் தமிழக அரசு சார்பாக அட்வகேட் ஜெனரல் நவநீதகிருஷ்ணன் எழுந்து, 'சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்வதற்கு வசதியாக தீர்ப்பை நிறுத்தி வைக்க வேண்டும்’ என்றார். அதை ஏற்க மறுத்த நீதிபதிகள், ‘தீர்ப்பை நிறுத்தி வைக்க முடியாது. தனியாக மனு தாக்கல் செய்யுங்கள். அப்போது முடிவு எடுக்கலாம்’ என்றனர்.

வழக்கு மதியத்திற்கு தள்ளிவைக்கப்பட்டது. அப்போது நீதிபதிகள் முன்பு அட்வகேட் ஜெனரல் ஆஜராகி, புதிய மனு தாக்கல் செய்ய விரும்பவில்லை. தீர்ப்பு நகலை இன்றே தர வேண்டும் என்றார்.
இதை கேட்ட நீதிபதிகள், சமச்சீர் கல்வியை உடனே அமல்படுத்த வேண்டும், தீர்ப்ப நகலை உடனே பெற்றுக்கொள்ளலாம் என்றார்.

சமச்சீர் கல்வி பிரச்னையால் ஜூன் 1&ம் தேதிக்கு பதிலாக 15 நாட்கள் தாமதமாக பள்ளிகள் திறக்கப்பட்டன. ஆனாலும், எந்த பாட திட்டம் என்பது தெரியாததால் கடந்த ஒரு மாதமாக பள்ளிகளில் மாணவ, மாணவிகள் படிக்க முடியாமல் தவித்தனர். அவர்களுக்கு வாழ்வியல் பயிற்சிகள் அளிக்கப்பட்டு வந்தது. மாணவர்களை பல இடங்களுக்கு அழைத்துச் சென்று செயல்விளக்கங்களை அளித்தனர். இதனால், 2 மாதங்கள் வீணடிக்கப்பட்டுவிட்டன.
இப்போது சமச்சீர் கல்வியை அமல்படுத்த வேண்டும் என ஐகோர்ட் அதிரடியாக உத்தரவிட்டுள்ளதால் மாணவர்களும் பெற்றோரும் நிம்மதி அடைந்துள்ளனர். ஐகோர்ட் தீர்ப்பை பல தரப்பினரும் மகிழ்ச்சியுடன் வரவேற்றுள்ளனர்.

எஸ்எஸ்எல்சி மாணவர்கள் உற்சாகம்
கடந்த ஆண்டில் 1, 6 ஆகிய வகுப்புகளில் சமச்சீர் கல்வி அமல்படுத்தப்பட்டது. 10&ம் வகுப்பு வரை மற்ற வகுப்புகளுக்கு இந்த ஆண்டு சமச்சீர் கல்வி அமல்படுத்தப்படும் என திமுக அரசு அறிவித்திருந்தது. இதனால், பொதுத்தேர்வு எழுதவுள்ள 10&ம் வகுப்பு மாணவர்கள், சமச்சீர் கல்வி திட்ட பாடங்களை கடந்த மே மாதமே வெப்சைட்டில் டவுன்லோடு செய்து படிக்கத் தொடங்கினர். இந்நிலையில், அதிமுக அரசு சமச்சீர் கல்வியை ரத்து செய்வதாக அறிவித்ததால் மாணவ, மாணவிகள் அதிர்ச்சி அடைந்தனர். பொதுத் தேர்வு எழுதவுள்ள நிலையில் எந்த பாடத்தை படிப்பது என தெரியாமல் குழப்பத்தில் தவித்தனர்.
இப்போது சமச்சீர் கல்வியை அமல்படுத்த ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே, இந்தப் பாடங்களை ஓரளவு படித்து முடித்துள்ள 10&ம் வகுப்பு மாணவர்கள், ஐகோர்ட் தீர்ப்பால் உற்சாகம் அடைந்துள்ளனர்.

சமச்சீர் கல்வி வழக்கில் மெட்ரிக் பள்ளிகள் கோரிக்கை - நீதிபதிகள் நிராகரித்தனர் :

சமச்சீர் கல்வி குறித்த வழக்கில் மெட்ரிக்குலேஷன் பள்ளிகளின் கோரிக்கையை நீதிபதிகள் நிராகரித்தனர்.
இதுகுறித்து நீதிபதிகள் அளித்த தீர்ப்பில் கூறியிருப்பதாவது:

சமச்சீர் கல்வியை கடந்த அரசு அவசர அவசரமாக கொண்டு வந்தது என்று அரசு சார்பிலும் மெட்ரிக்குலேசன் பள்ளிகள் சார்பிலும் கருத்து கூறப்பட்டது.
இதனால் நாங்கள் கடந்த ஆண்டு நடத்தப்பட்ட சமச்சீர் வழக்கின் கோப்புகளை ஆராய்ந்து பார்த்தோம். அதில் இருந்து பார்க்கும்போது மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் தரப்பில் கூறிய கருத்து ஏற்புடையது இல்லை என்று கருதுகிறோம். அவர்கள் கூறியபடி சமச்சீர் கல்வி அவசர அவசரமாக கொண்டு வரப்படவில்லை.
சமச்சீர் கல்வியை ஆய்வு செய்ய டாக்டர் முத்துக்குமார் தலைமையில் கமிட்டி அமைக்கப்பட்டு, அந்த கமிட்டி அனைத்து அம்சங்களையும் ஆராய்ந்து பார்த்துள்ளது என்று தெளிவாக தெரிகிறது. அரசு தாக்கல் செய்த பதில் மனுவில் கடந்த அரசின் செயல்பட்டினால் 200 கோடி ரூபாய்க்கு சமச்சீர் பாடப்புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டதால் அரசு பணம் வீணடிக்கப்பட்டுள்ளது என்று கூறியதை ஏற்க முடியாது.
புதிய அரசு ஆட்சிக்கு வந்ததும் எடுத்த அவசர முடிவை ஏற்க முடியாது என்று கூறியிருந்தனர்.

பழைய பாடப்புத்தகம் அச்சிடும் பணி நிறுத்தப்படுமா?

சமச்சீர் கல்வி தொடர்பான வழக்கில் உயர் நீதிமன்றம் 18.07.2011 அன்று வழங்கிய தீர்ப்பை அடுத்து, பழைய பாடத்திட்ட புத்தகங்கள் அச்சிடுவதை நிறுத்துவதா, வேண்டாமா என்று அரசு 19.07.2011 அன்று முடிவு எடுக்க உள்ளது.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், அரசின் அங்கீகாரம் பெற்று மாநில பாடத் திட்டத்தை பின்பற்றும் சுயநிதி பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு ஆண்டுதோறும் இலவச பாடப் புத்தகம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் 2008&2009ம் ஆண்டில் 6 கோடியே 28 லட்சம் மாணவர்கள் பயன்பெற்றனர். 2009&2010ம் ஆண்டில் 6 கோடியே 65 லட்சம் மாணவர்கள் பயன் பெற்றனர்.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவியர் பயன்பெறும் வகையில் கடந்த ஆண்டு 6 கோடியே 20 லட்சம் புத்தகங்கள் அச்சிடப்பட்டன. இந்த ஆண்டு 1 மற்றும் 6ம் வகுப்பு தவிர மற்ற வகுப்புகளில் சமச்சீர் கல்வி முறை நடைமுறைக்கு வருவதை அடுத்து 7 கோடி புத்தகம் அச்சிடத் திட்டமிடப்பட்டது.
கடந்த ஆண்டு 1 மற்றும் 6ம் வகுப்புகளில் மட்டும் சமச்சீர் கல்வி அறிமுகமானது. இதற்காக 1 கோடியே 16 லட்சம் புத்தகங்கள் அச்சிடப்பட்டன. அவற்றில் 81 லட்சம் புத்தகங்கள் இலவசமாக வழங்கப்பட்டன. இந்த புத்தகங்களை 43 அச்சகங்கள் அச்சடித்து கொடுத்தன.
இது மாணவர்களிடம் அதிக வரவேற்பை பெற்றது. இந்த ஆண்டு 1 மற்றும் 6ம் வகுப்பு தவிர மற்ற வகுப்புகளில் சமச்சீர் கல்வி முறை நடைமுறைக்கு வரும் என்று கடந்த அரசு அறிவித்து இருந்தது. இதற்காக 197 தலைப்புகளில் பாடப்புத்தகங்கள் எழுதப்பட்டுள்ளன. தமிழ் வழி, ஆங்கில வழியிலான புத்தகங்கள் அனைத்தும் ஏப்ரல் மாதமே அச்சிட்டு முடிக்கப்பட்டது. 1 மற்றும் 6 வகுப்புகளுக்கான புத்தகங்கள் 1 கோடியே 33 லட்சம் புத்தகங்களும், 2 முதல் 10ம் வகுப்பு வரை 6 கோடி புத்தகங்கள் அச்சிடப்பட்டுள்ளன. இந்த புத்தகங்கள் மொத்தம் 7 கோடி தேவை.
ஆனால் புதிய அரசு பொறுப்பேற்றதும் சமச்சீர் கல்வி புத்தகங்களை அச்சிடுவதை நிறுத்த உத்தரவிட்டதால் 6 கோடி புத்தகம் மட்டுமே அச்சிட்டு முடித்துள்ளனர். இது மொத்த தேவையில் 90 சதவீதம். இதனால் இன்னும் 1 கோடி புத்தகம் அச்சிட வேண்டியுள்ளது. இதுதவிர மற்ற மொழிப் பாடப்புத்தகம் 50 லட்சம் அச்சிட வேண்டும். இந்நிலையில், அதிமுக அரசு பழைய பாடப்புத்தகங்கள் 5 கோடி வரை அச்சிட ஆர்டர் கொடுத்தது. இதை 150 பதிப்பகங்கள் அச்சிட்டு வந்தன.
இதற்காக தமிழ்நாடு பேப்பர் லிமிடெட் 14 லட்சம் டன் பேப்பர் சப்ளை செய்தது. ரூ.100 கோடியில் புத்தகம் அச்சிடும் பணி தொடங்கியதில் இருந்து இதுவரை 50 சதவீதம் புத்தகங்கள் அச்சிடப்பட்டுள்ளது. இப்போது சமச்சீர் கல்வி குறித்த தீர்ப்பு வந்துள்ளது. இதையடுத்து பழைய பாடத்திட்ட புத்தகம் அச்சிடுவதை நிறுத்துவதா வேண்டாமா என்று இன்னும் அரசு தரப்பில் முடிவு எடுக்கவில்லை. 19.07.2011 அன்று முடிவு எடுப்பார்கள் என்று தெரிகிறது.
ஏற்கெனவே அச்சிட்டு முடித்த சமச்சீர் கல்வி புத்தகங்கள் ஒவ்வொரு மாவட்டத்திலும் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. அவற்றை பள்ளிகளுக்கு சப்ளை செய்வது தொடர்பாகவும் இன்று முடிவு எடுக்கப்படும் என்று தெரிகிறது. அரசு உத்தரவு வழங்கியதும், புத்தகங்கள் விரைவாக பள்ளிகளுக்கு சப்ளை செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment