கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Thursday, July 7, 2011

சமச்சீர் கல்வி பிரச்னையில் மாணவர்கள் எதிர்கால நலனை உயர் நீதிமன்றம் காப்பாற்றும் - திமுக தலைவர் கருணாநிதி நம்பிக்கை


சமச்சீர் கல்வி பிரச்னையில் மாணவர்களின் எதிர்கால நலனை சென்னை உயர் நீதிமன்றம் காப்பாற்றும் என்று திமுக தலைவர் கருணாநிதி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதி 06.07.2011 அன்று வெளியிட்ட அறிக்கை.
2006ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் அறிக்கையில் அனைத்துப் பள்ளிகளிலும் ஒரே தரமான கல்வி வழங்கிடும் சமச்சீர் கல்வி முறையை தமிழக மக்கள் அனைவருக்கும் வழங்கிட வழி அமைப்போம் என்று திமுக அறிவித்திருந்தது. அதன் அடிப்படையில், சமச்சீர் பள்ளிக் கல்வி முறையை நடைமுறைப்படுத்துவதற்காக தமிழ்நாடு சமச்சீர் பள்ளிக் கல்வி முறைச் சட்டம் 2010ல் இயற்றப்பட்டது
சமச்சீர் கல்வி முறை 2010&11ம் கல்வி ஆண்டு முதல் தமிழகத்திலுள்ள அனைத்துப் பள்ளிகளிலும் 1 மற்றும் 6ம் வகுப்புகளில் நடைமுறைப்படுத்தப்பட்டது. அத்துடன் புதிய பாடநூல்களும் தயாரித்து வழங்கப்பட்டு, ஓராண்டு அந்த மாணவர்களும் அதனைப் படித்து முடித்து விட்டனர்.
2011&2012ம் ஆண்டு கல்வி ஆண்டு முதல் சமச்சீர் கல்வி முறையை மேலும் தொடர்ந்து நடைமுறைப்படுத்துவதற்கு ஏதுவாக எஞ்சிய 2, 3, 4, 5, 7, 8, 9 மற்றும் 10ம் வகுப்புகளுக்கான பாடப்புத்தகங்கள் ரூ.200 கோடி செலவில் அச்சிடப்பட்டு, மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டும் விட்டன.
இந்த வகுப்புகளுக்கான பாட திட்டம் கல்வி வல்லுநர்களால் தயார் செய்யப்பட்டு பொதுமக்கள், பெற்றோர் மற்றும் மாணவர்க ளுக்கு தெரிவிக்கும் வகையில் பள்ளிக் கல்வித்துறை வலை தளத்தில் வெளியிடப்பட்டது.
சமச்சீர் கல்வி சட்டத்தை தள்ளுபடி செய்யக் கோரி, ஒரு சில தனியார் பள்ளிகள் மற்றும் சங்கத்தினரால் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகளில் 30&4&2010ல் வழங்கப்பட்ட தீர்ப்பாணையில், தமிழக அரசால் பிறப்பிக்கப்பட்ட இச்சட்டம் செல்லத்தக்கது என நிலைநிறுத்தம் செய்யப்பட்டது. சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பாணைக்கு இடைக்கால தடை வழங்கக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு வழக்குகள் தொடரப்பட்டு, அந்த வழக்குகளும் தள்ளுபடி செய்யப்பட்டன.
சமச்சீர் கல்வித் திட்டம் குறித்து அதிமுகவின் தற்போதைய முக்கிய கூட்டணி கட்சிகளில் ஒன்றான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 24&5&2011ல் விடுத்துள்ள அறிக்கையில், சமச்சீர் கல்வி முறையை இந்த ஆண்டு நிறுத்தி வைத்திருப்பதும்,
ஸீ200
கோடிக்கு மேல் செலவிட்டு அச்சிடப்பட்டுள்ள பாடப் புத்தகங்கள் முழுமையாக கைவிடப்படுவதும் மாணவர்கள் மத்தியில் குழப்பத்தையும், ஆசிரியர்கள், கல்வியாளர்கள் மத்தியில் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது என்று தெரிவித்துள்ளது.
அதிமுகவின் மற்றொரு தோழமைக் கட்சியான இந்திய கம்யூனிஸ்ட் கட்சி விடுத்துள்ள அறிக்கையில், சமூக நீதியை நிலைநாட்டுவதற்காக கல்வித்துறையில் சமச்சீர் கல்வித் திட்டம் கொண்டு வரப்பட்டது. தமிழக அரசு அதனை தள்ளிவைப்பதாக அறிவித்திருப்பது விவாதத்தை கிளப்பியுள்ளது என்று குறிப்பிட்டிருப்பதையும், அதிமுகவின் மற்றொரு தோழமைக் கட்சியான அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி, தரமான கல்வியுடன் கூடிய சமச்சீர் கல்வி திட்டத்தை தொடர்ந்து வலியுறுத்துவோம் என்று கூறியிருப்பதையும், இந்த நேரத்தில் நினைவு கூர்வது பொருத்தமானதாகும்.
சமச்சீர் கல்வித் திட்டம் குறித்து அதிமுக அரசின் முடிவை எதிர்த்து வழக்கறிஞர் கே.ஷியாம் சுந்தர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொது நல மனுவின் மீது நீதியரசர்கள் எஸ்.ராஜேஸ்வரன், கே.பி.கே.வாசுகி ஆகியோர் கூறும்போது, சமச்சீர் கல்விச் சட்டத்தின் நோக்கம் மிகத் தெளிவானது. சிறந்த வல்லுநர்களைக் கொண்ட ஆய்வுக்குழு விரிவாக ஆராய்ந்து சமச்சீர் கல்வி முறையை அமல்படுத்த பரிந்துரை செய்துள்ளது.
அந்தக் குழுவின் பரிந்துரைகளை எளிதாகப் புறக்கணித்து விட முடியாது. இது தவிர, ஏற்கெனவே பெரும் தொகை செலவிடப்பட்டுள்ள நிலையில், மேலும் பெரும் தொகையை செலவிடுவது அவசியம்தானா? இவைப்பற்றி யெல்லாம் அட்வகேட் ஜெனரல் அரசுக்கு தக்க ஆலோசனைகளை வழங்க வேண்டும்.
மேலும், ஏற்கனவே அமலில் உள்ள ஒரு சட்டத்தை இந்த நீதிமன்றத்தால் உறுதிப்படுத்தப்பட்ட சட்டத்தை, அமைச்சரவைக் கூட்டத்தின் கொள்கை முடிவு மூலம் நிறுத்தி வைக்க முடியுமா என்ற கேள்விகளுக்கெல்லாம் தமிழக அரசின் சார்பில் விரிவான பதில் மனுத்தாக்கல் செய்யப்பட வேண்டும் என்று தெரிவித்து, அதிமுக அரசின் சமச்சீர் கல்வி தொடர்பான திருத்தச் சட்டத்தை நிறுத்தி வைத்தது.
இந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதி மன்றத்தில் தமிழக அரசு சார்பில் மேல் முறையீடு செய்தபோது, நீதியரசர்கள் பி.எஸ்.சவுகான், சுதந்திரகுமார் அளித்த தீர்ப்பில், 1 மற்றும் 6ம் வகுப்புகளுக்கு கடந்த ஆண்டு கொண்டு வரப்பட்ட சமச்சீர் கல்வி தொடர்ந்து அமல்படுத்தப்பட வேண்டும். அதை இடையில் நிறுத்தினால் குழப்பம் ஏற்படும்.
2 முதல் 5ம் வகுப்பு வரையும், 7ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரையும் சமச்சீர் கல்வியை அமல்படுத்துவது குறித்து ஆராய நிபுணர் குழு நியமிக்கப்படுகிறது. இந்த நிபுணர் குழு தனது அறிக்கையை 2 வார காலத்தில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். உயர் நீதிமன்றம், இந்த வழக்கின் முக்கியத்துவம் கருதி தினமும் விசாரணை நடத்தி ஒரு வார காலத்துக்குள் தீர்ப்பளிக்க வேண்டும். என்று கூறியது.
இந்த தீர்ப்பின்படி, அதிமுக அரசு கல்வியாளர்கள் குழு ஒன்றை அமைத்தது. அந்த குழுவில் சமச்சீர் கல்விக்கு எதிரானவர்களே இடம் பெற்றிருக்கிறார்கள் என்ற கருத்து பலராலும் சொல்லப்பட்டது. அதைப்பற்றியெல்லாம் ஆட்சியாளர்கள் கவலைப்படாமல், அந்த குழுவைக் கொண்டே அறிக்கை தயார் செய்து, நேற்றைய தினம் அந்த அறிக்கை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அந்த அறிக்கை அவர்கள் எதிர்பார்த்தபடியே, அவர்களின் நோக்கத்தையொட்டியே சமச்சீர் கல்வி முறை ஏற்கத்தக்கது அல்ல என்றும், கிராமப்புற, நகர்ப்புற மாணவர்கள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் சமச்சீர் கல்வி இல்லை என்றும், சமச்சீர் கல்வி பாடப்புத்தகங்கள் அவசர கோலத்தில் தயாரிக்கப்பட்டது என்றும், பாடங்கள் ஒன்றுக்கு ஒன்று தொடர்பு இல்லாமல் உள்ளது என்றும், முரண்பட்ட பல காரணங்களையெல்லாம் சொல்லி, எப்படியாவது சமச்சீர் கல்வி முறையை நடைமுறைப்படுத்த விடாமல் செய்வதற்கான முயற்சியிலே அதிமுக ஆட்சியாளர்கள் ஈடுபட்டுள்ளார்கள். அந்த அறிக்கையை சென்னை உயர் நீதிமன்றம் விசாரித்து முடிவைத் தெரிவிக்கவுள்ளது.
சமச்சீர் கல்வி முறை பல்வேறு குழுக்களால் பல ஆண்டுகளாக பரிசீலனை செய்யப்பட்டு, பாடதிட்டங்கள் முறைப்படி வகுக்கப்பட்டு நடைமுறைக்கு வந்த திட்டமாகும். அதை எப்படியாவது கெடுக்க ஆட்சிக்கு வந்திருப்போர் முயற்சிப்பதை ஏற்கனவே உயர் நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் உணர்ந்துதான் தங்களது கருத்தை தெரிவித்திருக்கின்றார்கள். இதையெல்லாம் சீர்தூக்கிப் பார்த்து சென்னை உயர் நீதிமன்றம் இதற்கான தீர்ப்பை இறுதி தீர்ப்பாக வழங்கி, மாணவர்களின் எதிர்கால நலனைக் காப்பாற்றுவார்கள் என்று பெரிதும் நம்புகிறேன்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

1 comment:

  1. வணக்கம் எனக்கு மாணவர் நலனில் அண்ணவும் கலைஞரும் என்னும் தலைப்பில் ஒரு கட்டுரை வேண்டும் அதை இதனுடன் இணையுகள்

    ReplyDelete