கோவையில் திமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்ட ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
திமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம், கோவை சிங்காநல்லூர் விஜயா டிரேடு பேர் காம்ப்ளக்ஸ் வளாகத்தில் வரும் 23, 24ம் தேதிகளில் நடக்கிறது. முதல்நாள் செயற்குழு, அடுத்த நாள் பொதுக்குழு கூட்டம் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் தற்போது தொடங்கி உள்ளன. வளாகத்தில் மொத்தம் 4 பிரமாண்ட அரங்குகள் உள்ளன.
இதில் 100 அடி அகலம், 200 அடி நீளம் கொண்ட ஒரு அரங்கு கூட்டம் நடத்த தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியில் 30 அடி நீளம், 30 அடி அகலத்துக்கு மேடை அமைக்கப்படுகிறது. அரங்கம் முழுவதும் கார்பெட் விரிக்கப்பட்டு, குளுகுளு வசதி செய்யப்படுகிறது. மொத்தம் 2,500 பேர் அமர முடியும்.
இதே அளவுக்கு உள்ள மற்றொரு அரங்கில் உணவுக்கூடம் அமைக்கப்படுகிறது. இது, 2 பிரிவாக பிரிக்கப்பட்டு உணவு வகைகள் பரிமாறப்படுகிறது. இவ்வளாகத்தில் 7 ஏக்கர் பரப்பளவில் காலியிடம் உள்ளது. இவை அனைத்திலும் கார் மற்றும் இருசக்கர வாகன பார்க்கிங் வசதி செய்யப்படுகிறது. இங்கு மேடான பகுதி சீரமைக்கப்படுகிறது.
இந்த பணிகளை மாவட்ட திமுக செயலாளர் பொங்கலூர் பழனிச்சாமி, திமுக உயர்நிலை செயல்திட்ட குழு உறுப்பினர் மு.ராமநாதன், மாநகர செயலாளர் வீரகோபால், துணை மேயர் கார்த்திக், மாநகர திமுக பொருளாளர் நாச்சிமுத்து, மாநகர துணை செயலாளர் பைந்தமிழ்பாரி, மாவட்ட துணை செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, இளைஞர் அணி அமைப்பாளர் முருகவேல், அமுதஜோதி ராஜேந்திரன், கோவை சுரேஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் 06.07.2011 அன்று பார்வையிட்டனர்.
இதுபற்றி பொங்கலூர் பழனிச்சாமி கூறுகையில், “பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்துக்கான அனைத்து ஏற்பாடுகளும் முழு வீச்சில் நடந்து வருகிறது. இன்னும் ஒரு வார காலத்துக்குள் அனைத்து ஏற்பாடுகளும் முடிவடைந்து விடும்” என்றார்.
No comments:
Post a Comment