அலைக்கற்றை முறைகேடு தொடர்பான வழக்கில் கைதாகி திகார் சிறையில் உள்ள மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழியை மத்திய அமைச்சரும் அவரது சகோதரருமான மு.க.அழகிரி திங்கள்கிழமை (ஜூலை 4) சந்தித்தார்.
அவருடன் திமுகவின் முன்னாள் அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, திருப்பத்தூர் எம்.எல்.ஏ. பெரியகருப்பன் ஆகியோரும் கனிமொழியை சந்தித்தனர்.
கனிமொழியை சந்திப்பதற்காக திமுக முன்னாள் அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் ஆகியோரும் செவ்வாய்க்கிழமை (ஜூலை 5) தில்லி வந்துள்ளனர். அவர்கள் கனிமொழியை நீதிமன்றத்திலோ, திகார் சிறையிலோ புதன்கிழமை (ஜூலை 6) சந்திக்கக் கூடும் என்று தெரிகிறது.
அலைக்கற்றை வழக்கை விசாரித்து வரும் சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் கோடைகால விடுமுறை முடிந்து திங்கள்கிழமை (ஜூலை 4) தொடங்கியது.
மத்திய தொலைத் தொடர்புத் துறை முன்னாள் அமைச்சர் ஆ. ராசா, கனிமொழி, கலைஞர் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் சரத்குமார், ஸ்வான் டெலிகாம் நிறுவன மேம்பாட்டாளர் ஷாஹித் உஸ்மான் பல்வா உள்ளிட்ட 14 பேர் திங்கள், செவ்வாய் ஆகிய இரு நாள்களும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி. சைனி முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர்.
கனிமொழிக்கு ஆதரவாக அவரது கணவர் அரவிந்தன், திமுக மகளிர் அமைப்பின் பிரதிநிதிகள் கடந்த இரண்டு வாரங்களாக நீதிமன்றத்துக்கு வந்த வண்ணம் உள்ளனர்.
No comments:
Post a Comment