கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Friday, July 1, 2011

லோக்பால் வரம்புக்குள் பிரதமரை சேர்க்க வேண்டும் என்று கூறியது ஏன்? - கலைஞர் விளக்கம்


தி.மு.க. தலைவர் கலைஞர் வெளியிட்டுள்ள கேள்வி, பதில் அறிக்கையில் கூறியிருப்பதாவது:


கேள்வி: லோக்பால் மசோதாவில் பிரதமரைச் சேர்க்கக் கூடாது என்று ஜெயலலிதா பேட்டியில் சொல்லியிருக்கிறாரே?


பதில்: டெல்லியிலிருந்து திரும்பிய என்னிடம் மத்திய அரசு நாடாளுமன்றத்தில் கொண்டு வர நினைக்கும் "லோக்பால்'' மசோதா பற்றி தி.மு.கழகத்தின் நிலைப்பாடு என்ன என்று கேட்டபோது; "ஏற்கனவே தி.மு.க. ஆட்சி சில ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற போதே, இது போன்ற ஒரு சட்டம் ஊழல் ஒழிப்பு சட்டம் மாநில அளவில் தமிழக அரசினால் கொண்டு வரப்பட்டது. அந்த சட்டத்தில் முதல் அமைச்சரையும் இணைத்து, முதல் அமைச்சர் உட்பட அனைவரையும் அந்த சட்டத்தின் கீழ் குற்றஞ்சாட்டலாம், அவர்கள் மீது வழக்கு போடலாம் என்று உரிமை கொடுக்கப்பட்டிருந்தது; அதுதான் தி.மு.கழகத்தின் நிலை.


இப்போது டெல்லியில் என்ன முடிவெடுக்கிறார்கள் என்று தெரியவில்லை. தெரிந்த பிறகு அதைப்பற்றி சொல்கிறேன்'' என்று கூறினேன்.


செய்தியாளர்கள் தொடர்ந்து, ஊழல் எதிர்ப்பு சட்டத்தில் முதல் அமைச்சரை தமிழகத்திலே சேர்த்ததைப்போல, பிரதமரும் லோக்பால் மசோதாவிலே சேர்க்கப்பட வேண்டும் என்பது தான் உங்களுடைய கருத்தா என்று கேட்டதற்கு; "அதுபற்றி உங்கள் ழூகத்திற்கே விட்டு விடுகிறேன். நாங்கள் கொண்டு வந்த சட்டத்தில் முதல் அமைச்சரைத் சேர்த்துத்தான் சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியிட்டோம். இப்போது என்ன செய்ய வேண்டும் என்பதை உங்கள் ழூகத்திற்கே விட்டு விடுகிறேன் என்று கூறினேன்.


இதைத்தான் ஒரு சில ஏடுகள் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் முடிவுக்கு மாறாக எதிர்மறையாக ஒரு கருத்தினை நான் தெரிவிப்பதைப்போல எழுதியிருந்தார்கள்.


தமிழக முதல் அமைச்சர் லோக்பால் மசோதாவில் பிரதமரை சேர்க்கக்கூடாது என்று கருத்து சொல்கிறார். அவருடைய நெருங்கிய தோழமைக் கட்சிகளில் ஒன்றான இந்திய கம்ழூனிஸ்டு கட்சியின் அதிகாரபூர்வமான ஏடான "ஜனசக்தி''யில் வெளிவந்துள்ள ஒரு பெட்டிச்செய்தியில், லோக்பால் சட்டத்தில் விசாரணை வரம்பிற்குள் பிரதமரும் நீதிபதியும் வர வேண்டும் என்று அன்னா அசாரே கூறுவதற்கு முன்பே; டாக்டர் அம்பேத்கர், ஹிரேன் முகர்ஜி, ஏ.பி.பரதன், பிரகாஷ்காரத் என பலரும் கூறுவது, ஏறத்தாழ இந்தியாவில் அனைத்துக் கட்சிகளும் கூறுவதாக எழுதியுள்ளது.


நான் பிரதமரையும் அந்த வரம்பிற்குள் சேர்க்க வேண்டுமென்று சொன்னது, நாம் "அதற்காக பயப்படவில்லை, தெளிவாக இருக்கிறோம் என்று உலகத்தின் முன்பு தெளிவாக்குவதற்கு அது பயன்படுமே என்பதால்தான்''. எனது இந்தக்கருத்து எந்த அடிப்படையிலே சொல்லப்பட்டதோ, அதே அடிப்படையிலேதான் நேற்றையதினம் பிரதமர் கூட லோக்பால் மசோதாவில் பிரதமரை சேர்ப்பது குறித்து தனக்கு எந்தவிதமான ஆட்சேபணையும் இல்லை என்று தெரிவித்திருக்கிறார்.


அதே காரணத்திற்காகத்தான் தி.மு.கழக அரசு இதற்கான சட்டத்தை கொண்டு வந்தபோது, முதல் அமைச்சரையும் அந்த வரம்பிற்குள் கொண்டுவர வேண்டுமென்று நானே முன்வந்து தெரிவித்தேன். உறவுக்கு கை கொடுப்போம்; உரிமைக்கு குரல் கொடுப்போம்'' என்ற கழகத்தின் நீண்ட நாள் முழக்கத்தை நினைவுபடுத்துகிறேன்.

கேள்வி: கடந்த தி.மு.க. ஆட்சியில் காவல் துறையினர் ஏவல் துறையாக இருந்ததால் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது என்றும், தற்போது அ.தி.மு.க. ஆட்சியில் காவல்துறையினருக்கு பாதுகாப்பு தரப்படும் என்றும் முதல் அமைச்சர் ஜெயலலிதா செய்த அறிவிப்பு பற்றி?


பதில்: முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் அறிவிப்பு வந்து இன்னும் ஒரு மாதம் கூட முடியவில்லை. காவல்துறையை எந்த அளவிற்கு அ.தி.மு.க. ஆட்சி மதித்தது, மதிக்கிறது என்பதற்கு, இரண்டு உதாரணங்களை கூறினால் போதுமென நினைக்கிறேன். முதல் அமைச்சர் ஜெயலலிதா டெல்லிக்கு செல்வதையொட்டி அந்த கட்சியினர் இரவு கொடி கட்டிவிட்டு, ஒரு ஓட்டலில் சென்று உணவருந்தி கொண்டிருந்தார்கள். அப்போது நள்ளிரவு ஆகி விட்டதால், அந்த வழியாக வந்த போலீஸ் துணை கமிஷனர் ஒருவர் அந்த ஓட்டலை மூடச்சொல்ல, அதற்கு அ.தி.மு.க.வினர் நாங்கள் ஆளுங்கட்சி என்று மிரட்டியதால், அந்த அதிகாரி அவர்களை காவல் நிலையத்தில் கொண்டு போய் விட்டு விட்டுச்சென்றுவிட்டார்.


அந்த செய்தியைக்கேள்விப்பட்ட ஆளுங்கட்சி சட்டப்பேரவை உறுப்பினர் ஒருவரும், மற்றும் அமைச்சரே ஒருவரும் அந்த காவல் நிலையத்திற்கே சென்று "நாங்கள் யார் தெரியுமா?'' என்று அதிகார தோரணையில் கேட்டு, காவல் நிலையத்தில் இருந்த ஆளுங்கட்சியினரையெல்லாம் எந்தவித அனுமதியுமின்றி அழைத்துச்சென்றுவிட்டனர். அது மாத்திரமல்ல; அடுத்த நாளே அவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்துச்சென்ற காவல் துறையின் துணை கமிஷனர் "பட்டாலியனுக்கு'' மாற்றப்பட்டு விட்டார்.


அதன் தோழமை கட்சியான தே.மு.தி.க.வை சேர்ந்த ஒரு சட்டப்பேரவை உறுப்பினர், சேலம் மாவட்டம் ஓமலுநுர் காவல் நிலையத்திற்கு சென்று மிரட்டிய செய்தியும் ஏடுகளில் வந்துள்ளது.

கேள்வி: 2006 ம் ஆண்டு முதல் 2011 ம் ஆண்டு வரையிலான தி.மு.க. ஆட்சியின் நிர்வாக திறமையின்மை காரணமாக தமிழ்நாட்டின் கடன் சுமை ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் அதிகரித்து விட்டதாக முதல் அமைச்சர் ஜெயலலிதா குற்றஞ் சாட்டியிருக்கிறாரே?


பதில்: 2006 ம் ஆண்டு தி.மு.க. பொறுப்புக்கு வருவதற்கு முன்பாகவே, அதாவது 31 3 2006 அன்றே, தமிழக அரசின் மொத்தக்கடன் பொறுப்பு ரூபாய் 57 ஆயிரத்து 457 கோடி ரூபாயாகும்.


அதாவது அ.தி.மு.க. ஆட்சியிலேயே அந்த அளவிற்கு கடன் சுமையை வைத்திருந்தார்கள். அந்த கடன் தொகை தான் தற்போது ஒரு லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இன்னும் சொல்ல வேண்டுமேயானால் ஜெயலலிதா ஆட்சியிலே இருந்த போது மாநில மொத்த உற்பத்தி மதிப்பில் 22.29 சதவிகிதம் அளவிற்கு கடன் சுமை வைத்திருந்தார். தி.மு.க. ஆட்சியில் கடன் சுமை மாநிலத்தின் மொத்த உற்பத்தி மதிப்பில் 19.58 சதவிகிதம் தான்.


தி.மு.க. அரசின் மீது ஜெயலலிதா இந்த அளவிற்கு குறை கூறிய போதிலும், இந்தியாவின் நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி 9 4 2011 அன்று சென்னையிலே கூறும்போது, "இந்தியாவில் நிதி ஒழுங்கையும், நிலைத்தன்மையையும் திருப்திகரமாக கடைப்பிடித்து வரும் ஒரு சில மாநிலங்களுள் தமிழகமும் ஒன்றாகும். தமிழக அரசின் கடன் அளவு, பரிந்துரைக்கப்பட்ட அளவை விட மிகவும் குறைவாகவே உள்ளது. இந்திய ரிசர்வ் வங்கியிலிருந்து ஒரு நாள் கூட தன் கணக்கில் பணம் இல்லாமல், கூடுதல் வரைவுத் தொகையை ஓவர்டிராப்ட்டை தமிழக அரசு பெற்றதில்லை'' என்று கழக அரசின் நிதி மேலாண்மை குறித்துப் பாராட்டி சொல்லியிருக்கிறார்.

எனவே ஜெயலலிதா உண்மையான புள்ளி விவரங்களை அறிந்த பின்னர் குற்றஞ்சாட்டுவது அவர் தற்போது வகிக்கும் பொறுப்புக்கு அழகாகும்.

கேள்வி: முதலமைச்சர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு இழுத்துக் கொண்டே போகிறதே?
ஜெ. மீதான சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணையில் சசிகலாவின் வழக்கறிஞர் எம்.எஸ். கந்தசாமி கடந்த 3ம் தேதி தாக்கல் செய்த மனுவில் வழக்கின் சாட்சியான ஆடிட்டர் பாலாஜியை மறு விசாரணை நடத்த அனுமதி கோரியிருந்தார். அந்த மனுவினை பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் ஏற்கனவே தள்ளுபடி செய்தது.
அதனை எதிர்த்து சசிகலா தரப்பில் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அதன் மீதான விசாரணை நீதிபதி கே. என். கேசவநாராயணா முன்னிலையில் 27&6&2011ல் நடந்தது. சசிகலா தரப்பில் வக்கீல் உதயஹொல்லா வாதிட்டிருக்கிறார்.
அந்த நிலையில் சொத்துக்குவிப்பு வழக்கில் அரசு தரப்பு சிறப்பு வழக்கறிஞராகச் செயல்பட்டு வரும் வி.எஸ். ஆச்சார்யா ஆஜராகி, உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்படி பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்திற்கு வழக்கு மாற்றப்பட்டு என்னைச் சிறப்பு வழக்கறிஞராக கர்நாடக மாநில அரசு நியமித்துள்ளது. ஆனால் தற்போது இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஜெயலலிதா மீண்டும் தமிழக முதல்வராகப் பதவி யேற்ற பிறகு, லஞ்ச ஒழிப்புத் துறையின் வழக்கறிஞரை மாற்றியுள்ளார்.
எனவே எந்தக் காரணத்துக்காக உச்ச நீதிமன்றம் வழக்கை பெங்களூருக்கு மாற்றியதோ, அந்த நோக்கம் சீர்குலைந்து விடும். மேலும் விசாரணை சுதந்திரமாகவும், நேர்மையாகவும் நடக்க இடையூறு இருப்பதால் மறு விசாரணைக்கு அனுமதி அளிக்கக் கூடாது, என்னையும் இந்த வழக்கில் வழக்கறிஞராகச் சேர்க்க வேண்டும் என்று விரிவாக வாதிட்டார். அதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி விசாரணையை ஜூலை 4ம் தேதிக்கு ஒத்திவைத்திருக்கிறார். மற்றொரு வழக்கு 1993&94ம் ஆண்டுக்கான செல்வ வரிக் கணக்கை ஜெயலலிதா தாக்கல் செய்யவில்லை என்று வருமான வரித் துறை சார்பில் குற்றம் சாட்டப்பட்டது. இது குறித்து பொருளாதார குற்றங்களுக்கான எழும்பூர் கூடுதல் தலைமை பெரு நகர நீதி மன்றத்தில் வருமான வரித் துறை சார்பில் 1997ம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டது. வழக்கு தொடர்ந்து 13 ஆண்டுகள் ஆகின்றன. இந்த வழக்கிலிருந்து தன்னை விடுவிக்கக் கோரி ஜெ. தாக்கல் செய்த மனுவை, 8&7&2010ல் முதன்மைப் பெருநகர நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனை எதிர்த்து கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சென்னை உயர் நீதி மன்றத்தில் ஜெயலலிதா மனு தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், செல்வ வரி கணக்கை தாக்கல் செய்யக் கூடாது என்று தான் வேண்டுமென்றே எந்தத் தவறும் செய்யவில்லை. குறிப்பிட்ட தேதிக்குள் செல்வ வரி கணக்கை தாக்கல் செய்யவில்லை என்றால், தனக்கு விளக்க நோட்டீஸ் அனுப்பி தன் தரப்பு கருத்தை தெரிவிக்க உரிய வாய்ப்பு தரப்பட்டிருக்க வேண்டும். ஆனால் வருமான வரித் துறை சார்பில் அத்தகைய விளக்க நோட்டீஸ் எதுவும் தரவில்லை. எனவே வேண்டுமென்றே எந்தத் தவறும் செய்யாததால், இந்த வழக்கிலிருந்து தன்னை விடுவிக்க வேண்டும் என்று ஜெயலலிதா வலியுறுத்தியிருக்கிறார்.
இந்த மனு மீது விசாரணை நடத்திய நீதிபதி பி.ஆர். சிவகுமார், செல்வ வரி கணக்கை தாக்கல் செய்யக் கூடாது என்று வேண்டுமென்றே ஜெயலலிதா எதுவும் செய்யவில்லை என்பது தெரிகிறது.
எனவே இந்த வழக்கிலிருந்து அவர் விடுவிக்கப்படுகிறார். இந்த வழக்கு தொடர்பாக பொருளாதார குற்றங்களுக்கான எழும்பூர் தலைமைப் பெருநகர நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவும் ரத்து செய்யப்படுகிறது என்று தீர்ப்பளித்திருக்கிறார்.

இவ்வாறு தி.மு.க. தலைவர் கலைஞர் அறிக்கையில் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment