தமிழ் திரைப் படங்களுக்கு கேளிக்கை வரிவிலக்கு எப்படி அளிக்கப்படுகிறது என்பது குறித்து முதல்வர் கருணாநிதி விளக்கம் அளித்துள்ளார்.
இது குறித்து முதல்வர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழில் பெயர் வைக்கப்படும் படங்களுக்கு மட்டுமே கேளிக்கை வரிவிலக்கு அளிக்கப்படும் என்று அரசின் சார்பில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. கூடுமான வரையில் பெயர்ச் சொல்லாவது தலைப்பாக கொண்டுள்ள படங்களுக்கு வரிவிலக்கு அளிக்கப்படுகிறது. உதாரணமாக ‘சிவாஜி’, ‘ஏகன்’, ‘பாஸ்(எ) பாஸ்கரன்’, ‘கோவா’, ‘எந்திரன்’ போன்ற படங்களை கூறலாம்.
ஆனால் இந்த துறையில் அறிமுகமாகி படங்களின் தயாரிப்பாளராகவும் அல்லது படங்களுக்கு இயக்குனராகவும் கதை, உரை யாடல் எழுதுபவராகவும் வளர தலைப்பட்டுள்ள சில கலைஞர்கள், கேளிக்கை வரி விலக்குக்கான அரசின் நிபந்தனையை புரிந்து கொள்ளாமல் உள்ளனர். வேண்டுமென்றே திட்டமிட்டு, திரைப்பட தலைப்புகளில் அறவே தமிழ்மொழி அல்லாத பெயர்களை சூட்டுகின்றனர். அவற்றுக்கு கேளிக்கை வரிவிலக்கு உண்டென்று பிரசாரம் செய்கின்றனர்.
அதன் அடிப்படையில் இரண்டு தரப்பினர் விவாதித்துக் கொண்டு, அவர்களில் ஏதோ ஒரு தரப்பினருக்கு வரிவிலக்கு விவகாரத்தில் அரசு துணை இருப்பது போன்ற ஒரு செய்தியை, அரசியல் நோக் குடன் வெளியிட்டு வருவது இப்போது வழக்கமாகியுள்ளது.
திரைப்படங்களின் பெயர் தமிழில் உள்ளதா என்பதை முடிவு செய்து அறிவிக்க, தமிழிக அரசின் வணிகவரித் துறை செய லாளர், தமிழ் வளர்ச்சித் துறை செயலாளர், தமிழ் வளர்ச்சித் துறை இயக்குனர் ஆகிய அதிகாரிகள் கொண்ட ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. அக்குழுவின் சார்பில் முடிவெடுக்கப்பட்டு அறிவிப்பதற்கு முன்பு, சில படங்களுக்கு அந்த விதிகளை மீறி வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக வருகிற செய்திகளுக்கு அரசு பொறுப்பல்ல.
அந்த குழு ஒப்புக்கொள்ளாத எந்தவொரு பெயரையும் திரைப்படங்களுக்கு வைத்து வெளியிடப்படுமேயானால், வரிவிலக்கு பற்றி கூறுவதற்கு அந்த பட தயாரிப்பாளர்களுக்கு உரிமை கிடையாது. அவர்கள் முழு வரியையும் செலுத்தியே ஆக வேண்டும். தமிழக அரசு வழங்கும் வரிவிலக்கு பற்றி மட்டுமே இந்த விளக்கமாகும். எந்தவொரு படத்தையும் வெளியிடுவதற்கான அனுமதியை மத்திய அரசின் தணிக்கை போர்டுதான் வழங்கும்.
இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment