கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Sunday, July 10, 2011

திமுகவினர் மீது பொய் வழக்கு : தமிழக அரசுக்கு கருணாநிதி கண்டனம்


அ.தி.மு.க. ஆட்சியில் காலையில் ஒரு வழக்கு மாலையில் ஒரு வழக்கு போடுவதால் தி.மு.க.வினர் மீது போடப்படும் வழக்குகளில் வழக்கறிஞர் அணிசார்பில் அவர்களுக்கு உதவவேண்டும் என்று கருணாநிதி கூறியுள்ளார்.

தி.மு.க. தலைவர் கருணாநிதி 09.07.2011 அன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

நகர்ப்புறங்களில், பட்டிதொட்டிகளில் ஆங்காங்கு பரவிக் கிடக்கின்ற கழக அமைப்புகளில் விரிசல் உண்டாக்க வேண்டுமென்பதற்காகவும், அந்த அமைப்புகளை நடத்துகின்ற கழகத் தோழர்களிடத்தில் பீதியை உண்டாக்க வேண்டுமென்பதற்காகவும், இப்போது நடைபெறுகின்ற அ.தி.மு.க. ஆட்சியில் நாள்தோறும் காலையிலே ஒன்று, பிற்பகலிலே ஒன்று, மாலையில் ஒன்று என்று வழக்குகள் போடப்பட்டு வருகின்றன.

தி.மு.க. ஆட்சியில் இது போன்ற தவிர்க்க முடியாத வழக்குகளைப் போடுவதாக இருந்தாலும் - அன்றைக்கு இருந்த காவல் துறையினர், உடனடியாக அந்தப்பணிகளுக்கு பாய்ந்து செல்லாமல், கூடுமானவரையில் அவர்களுக்கு நேரம் கொடுத்து ஒரு முறைக்கு இருமுறை எச்சரித்து அதற்குப் பிறகே நடவடிக்கைகளில் ஈடுபட்டார்கள். அதுதான் அப்போது இருந்த கழக அரசும், அதனுடைய துறைகளில் ஒன்றான காவல் துறையும் விரும்பியது, அதையே கடைப் பிடித்தது.

திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் இப்போது நடைபெறுவதைப் போல நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக எதிர்க்கட்சிக்காரர்களை, குறிப்பாக அ.தி.மு.க.வினரை கைது செய்யும் காரியங்கள் - அவர்கள்மீது எண்ணற்ற வழக்குகள் போடப்பட்டது உண்டா என்றால் இல்லை. ஆனால், இப்போது நடப்பது ஜனநாயக ஆட்சியா - அல்லது நெருக்கடி கால ஆட்சி முறையா என்பதே புரியாத அளவிற்கு போலீசாருடைய கெடுபிடிகள், கட்சிக்காரர்கள் மீது போடப்படுகின்ற பொய் வழக்குகள் இவைகள் எல்லாம் நாள்தோறும் நம்மைச் சுற்றி நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இது நம்முடைய கழகத்தை, கழகத் தோழர்களை பயமுறுத்துவதற்காக, பீதியடையச் செய்வதற்காக இந்த அரசாங்கம் கையாளுகின்ற தந்திரமாகும்.


இதற்கு அஞ்சுகின்ற செயலாளர்கள் வெளியூர்களுக்குப் போய்விடுகிறார்கள் அல்லது உள்ளூரிலிருந்தே சிரமப்படுகிறார்கள். குறிப்பாக திருச்சி நகரில் விரைவில் இடைத்தேர்தல் வருவதை மனதிலே கொண்டு அங்குள்ள கட்சியினர் மீது ஏதாவதொரு பொய் வழக்கினைச் சுமத்திட காவல் துறையினரை இந்த ஆட்சியினர் ஏவி விட்டிருக்கின்றார்கள்.

நம்முடைய கழகத் தோழர்களுக்கு பாதுகாப்பாக கழகத்தின் சட்டத்துறையினுடைய துணை உண்டு என்பதை எடுத்துக்காட்டுவதற்காக நம்முடைய கழகத்தில் வழக்கறிஞர்கள் அணி என்று ஒன்று அமைக்கப்பட்டிருக்கின்றது. அந்த அணி இப்போது பணியாற்றுகிறதா இல்லையா என்பது நான் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டிய ஒன்றாக இருக்கின்றது. அந்த அணி தலைமைக் கழகத்திலே செயல்படுவதாகக் கூறப்படுகிறது. அந்த அணியின் செயலாளர்களை இதுபோன்ற வழக்குகளில் சிக்க வைக்கப்படுகின்றவர்கள் உடனடியாகத் தொடர்பு கொண்டு அவர்கள் மூலமாக சட்டத்தின் நேர்மையை நிலைநாட்ட வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.

சட்டம் எல்லோருக்கும் பொதுவானது. அதை தங்கள் கையிலே எடுத்துக் கொண்டு எதிர்க்கட்சிகளை அடக்கி விடலாம் என்று கருதுகின்ற எந்த ஆட்சியும் மக்களால் ஆதரிக்கப்படக் கூடியதாக இருந்ததில்லை, இருக்க முடியாது. எனவே கழக நண்பர்கள், தொண்டர்கள் கழகத்தின் செயல்வீரர்கள், கழகத்தின் பல்வேறு அமைப்புகளின் செயலாளர்கள் ஆங்காங்கு நடை பெறுகின்ற இதுபோன்ற போலீசாருடைய அத்து மீறல்களை - கட்டுப்பாடற்ற, கடுமையான நடவடிக்கைகளைத் தடுத்து - அவர்கள் தாங்களே சட்டத்தைக் கையிலே எடுத்துக் கொள்ளாமல் சட்ட வல்லுநர்களுடைய துணையை நாடுவதற்கு முன்வருகின்ற வகையில் கழக வழக்கறிஞர்கள் அணி செயல்பட வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.

கடந்த ஒரு வார காலமாக தமிழகத்தில் நடைபெறுகின்ற இந்த அக்கிரமங்களையெல்லாம் நாம் கண்டு பாதிக்கப்படுகின்ற தோழர்களுக்கு பரிகாரம் காண வேண்டும், துணை நிற்க வேண்டும் என்பதற்காக நம்முடைய கழக வழக்கறிஞர்கள், கழகத்தினர் மீது போடப்படுகின்ற வழக்குகளையெல்லாம் சந்தித்து, கழக வழக்கறிஞர் அணியின் சார்பாக அவர்களுக்கு உதவி புரியவேண்டும் என்று சொல்லியிருக்கிறேன். அவர்களும் அந்த முயற்சியிலே ஈடுபடுவார்கள் என்று நம்புகிறேன். ஆம்; நம்பியிருக்கிறேன்!

இப்போதும் நான் பாதிக்கப்படுகின்ற நம்முடைய கழகத் தோழர்கள் உடனடியாக தலைமைக் கழகத்துடன் தொடர்பு கொண்டு தலைமைக் கழகத்திலே யாராவது வழக்கறிஞர்கள் அணியின் சார்பாக இருப்பார்களேயானால் அவர்கள் மூலம் உடனடி நடவடிக்கை எடுப்பதற்கு முன் வரவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இதுபோன்ற தகவல்களை உடனடியாக ஆராய்ந்து நடவடிக்கை எடுக்க நான் தலைமைக்கழகத்திலே இன்று முதல் எந்த நேரமும் இருப்பேன் என்ற உறுதியையும் தெரிவித்துக் கொண்டு - உடனடியாக என்னை கடிதம் மூலமும், தொலைபேசி மூலமும் தொடர்புகொண்டு ஆங்காங்கு நடைபெறுகின்ற அத்து மீறல்கள் எதுவாயினும் அது பற்றிய விவரங்களைத் தெரிவிக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு கூறியுள்ளார்.

23ல் ஆலோசனை :
கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி மாவட்ட திமுக வக்கீல்கள் ஆலோசனைக் கூட்டம் வரும் 23ம் தேதி நடக்கிறது.

இது தொடர்பாக திமுக சட்டத்துறை செயலாளர் ஆர்.எஸ்.பாரதி 09.07.2011 அன்று வெளியிட்ட அறிக்கை:
கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த கழக வக்கீல்களின் ஆலோசனைக் கூட்டம் வரும் 23ம் தேதி காலை 11 மணிக்கு நடைபெறுகிறது.
கோவை மாநகர் திருச்சி ரோட்டில் சிங்கா நல்லூர் உழவர் சந்தை அருகில் உள்ள அண்ணா வளாகத்தில் நடக்கும் இந்த கூட்டத்திற்கு பொங்கலூர் பழனிச்சாமி, சாமிநாதன், என்.கே.கே.பி.ராஜா, ராமச்சந்திரன் மற்றும் சட்டத்துறை இணைச் செயலாளர்கள், வக்கீல்கள் ரவி, கிரிராஜன், தலைமைக் கழக வக்கீல்கள் எம்.தண்டபாணி, இ.பரந்தாமன், கே.எஸ்.ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள்.எனவே, கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகரி மாவட்டங்களுக்கு உட்பட்ட கழக வக்கீல்கள் அனைவரும் இந்த கூட்டத்தில் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

1 comment:

  1. நமது,தி.மு.கழகத் தலைமைக் கழக வழக்கறிஞர் திரு இ.பரந்தாமன் அவர்களது பேட்டியை தொலைக்காட்சிகளில் நான் பார்த்து இருக்கிறேன். எனக்கு அவரைத் தொடர்பு கொண்டு பேச ஆவல்.சென்னை அறிவாலயத்திற்கு மின் அஞ்சல வாயிலாக தொடர்புகொண்டு, திரு இளமுகில் மணி அவர்களுக்கு,வழக்கறிஞர் திரு இ.பரந்தாமன் அவர்களது கைப்பேசி எண்ணையோ, மின்-அஞ்சல் முகவரியையோ அனுப்பித்தர வேண்டியும், எனக்கு இதுவரை எந்த பதிலும் காணோம். மனதுக்கு வேதனியாக இருக்கிறது. யாராவது உதவ முடியுமா? நன்றியுடன்: எல்.கே.மதி நிறை செல்வன், சென்னை-600 015.
    எனது மின்-அஞ்சல் முகவரி: mathiniraichelvan@gmail.com

    ReplyDelete