காங்கிரஸ், திமுக உறவு தொடரும், மேலும் வலுப்படும் என்று சென்னையில் 09.07.2011 அன்று திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்துப் பேசிய பின்னர் மத்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறினார்.
மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, 08.07.2011 அன்று சென்னை வந்தார். வங்கி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விட்டு இரவு ராஜ்பவனில் தங்கினார். 09.07.2011 அன்று காலை 10 மணிக்கு கோபாலபுரத்தில் உள்ள திமுக தலைவர் கருணாநிதி வீட்டுக்கு வந்தார். அவரை முன்னாள் அமைச்சர்கள் தயாநிதி மாறன், டிஆர்.பாலு, துரைமுருகன், பொன்முடி ஆகியோர் வரவேற்று அழைத்துச் சென்றனர். தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு, மத்திய அமைச்சர் நாராயணசாமி ஆகியோர் பிரணாப்புடன் வந்தனர். பின்னர் கருணாநிதியை பிரணாப் முகர்ஜி சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு ஒரு மணி நேரம் நடந்தது.
சந்திப்புக்கு பிறகு நிருபர்களிடம் பிரணாப் முகர்ஜி கூறியதாவது:
தமிழகத்துக்கு வரும்போதெல்லாம் மூத்த அரசியல் தலைவர் கருணாநிதியை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசுவது வழக்கம். அரசியல் சூழ்நிலை பற்றி இருவரும் ஆலோசனை நடத்துவோம். அதன்படி இப்போது தமிழகம் வந்துள்ளேன். தமிழக சட்டசபை தேர்தலுக்கு பிறகு முதல்முறையாக வந்திருக்கிறேன். எனவே, கருணாநிதியை சந்தித்து பேசினேன்.
நாட்டில் தற்போது நிலவும் அரசியல் சூழ்நிலை பற்றி இருவரும் பேசினோம். கருத்துக்களை பரிமாறிக் கொண்டோம். காங்கிரஸ், திமுக உறவு தொடருமா, தொடராதா என்று பல யூகங்கள் தற்போது வெளியிடப்படுகின்றன. அவர்களுக்கு நான் ஒன்றை தெரிவித்துக் கொள்கிறேன். காங்கிரஸ், திமுக கூட்டணி தொடர்ந்து இருக்கிறது. இந்த உறவு மேலும் வலுப்படுத்தப்படும். கூட்டணி தொடரும்.
இவ்வாறு பிரணாப் முகர்ஜி கூறினார்.
மத்திய அமைச்சரவையில் செய்யப்பட உள்ள மாற்றம் குறித்தும் திமுக சார்பில் மேலும் இருவர் மத்திய அமைச்சரவையில் இடம்பெறுவது குறித்தும் இருவரும் பேசியதாக கூறப்படுகிறது.
No comments:
Post a Comment