கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Friday, July 8, 2011

அனைவருக்கும் கல்வி! - டாக்டர் ச.முத்துக்குமரன்



நாம் சுதந்திரம் பெற்ற பின்னர் நமக்கென்று ஓர் அரசியலமைப்புச் சட்டம் வரையறுத்தபோது குறைந்தபட்சம் எட்டு ஆண்டுகளுக்கு அனைவருக்கும் கல்வி அளிக்க வேண்டும் என்று முடிவெடுத்தோம். இன்று கல்வி பெறுவது ஒவ்வொரு குழந்தையின் உரிமை என்று சட்டமும் இயற்றப்பட்டு 2010 ஏப்ரலில் மாதம் முதல் செயலுக்கும் வந்து விட்டது.

அனைவருக்கும் கல்வி சட்டத்தில் குழந்தை களுக்கு தொடக்கக் கல்வி பெறுவது மட்டுமே உரிமை ஆக்கப்பட்டிருக்கிறது. ஐந்து வயதுக் குட்பட்ட குழந்தைக்குத் தேவையான கல்வி அதில் சேர்க்கப்படவில்லை. மேலும் அனைவரும் கல்வி பெறும் உரிமை சட்டம் என்று இச்சட்டம் பொதுவழக்கில் கூறப்பட்டாலும், இதன் முழுப்பெயர் "அனைவருக்கும் இலவசக் கட்டாய கல்வி பெறும் உரிமைச் சட்டம்' என்பதே.

கட்டாயக் கல்வி என்பதும் அதைப் பெறுவது குழந்தையின் உரிமை என்பதும் ஒன்றுக்கொன்று முரணாகத் தோன்ற வில்லையா? அனைவருக்கும் அவரவர்க்குத் தேவையான கல்வி பெறும் உரிமை என்று தானே இருக்க வேண்டும்? இன்னும் சரியாகச் சொல்வதென்றால் இச்சட்டத்தின் பெயர் கல்வி என்றில்லாது தொடக்கக்கல்வி என்று இருக்கவேண்டும். அனைவருக்கும் கல்வி என்பதில் அனைவருக்கும் தரமான கல்வி என்பது தொக்கி நிற்கிறது. தரம் என்பதில் தேவை என்பதும் அடங்கும். அதாவது தேவையான எண்ணிக்கையில் பயிற்சி பெற்ற ஆசிரியர், தேவையான வசதிகள், தரமான கல்வித் திட்டம், பாட நூல்கள், தேர்வு முறை என்று கல்வி சார்ந்த அனைத்தும் தரமானவையாக இருக்க வேண்டும். பள்ளி குழந்தைகள் வசிக்கும் இடத்திற்கு அருகில் இருக்க வேண்டும்.

இன்று நாம் காண்பது, கேட்பது என்ன? "சென்னை மாநகராட்சி நடத்தும் பள்ளிகளில் பத்து பள்ளிகள் தரம் உயர்த்தப்படும். அங்கு இசை, உடற்பயிற்சி ஆசிரியர்களும் இருப் பார்கள்' என்பது செய்தி (இந்து நாளிதழ் 8.7.10). அப்படி என்றால் இவை அனைத்துப் பள்ளி களிலும் தேவை. ஆனால் இல்லை. அதாவது தெரிந்தே ஒரு சில பள்ளிகள் மட்டுமே தரம் உயர்த்தப்படுகின்றன. மற்றவற்றில் கற்கும் மாணவர்க்கு தரம் குறைந்த கல்வி கற்பிக்கப் படுகிறது. வருங்காலத்திலும் தரம் குறைந்த கல்வியே கற்பிக்கப்படும். அதாவது, என்னென்ன தேவையோ, அவற்றை அனைத்துப் பள்ளிகளிலும் உருவாக்கத் திட்டம் தீட்டி இந்த ஆண்டு இத்தனை பள்ளிகளில் இவை உருவாக்கப்படும் என்று அரசு சொல்லாது. ஒரு சில பள்ளிகளில் மட்டுமே உருவாக்குவது அனைவருக்கும் கல்வி திட்டத்திற்கு முரணானது என்பதில் என்ன ஐயம்?

தமிழ்நாட்டில் மைய கூட்டாட்சி அரசு உதவியுடன் மாதிரிப் பள்ளிகள் தொடங்கப் படுகின்றன. ஒன்றரை கோடிக்கு மேலான எண்ணிக்கையில் பல்லாயிரக்கணக்கான பள்ளிகளில் மாணவர்கள் பயிலும் தமிழ்நாட்டில் 18 மாதிரிப் பள்ளிகள் தொடங்கி அங்கு தேர்வு வைத்து மாணவரைச் சேர்ப்பது என்பது அனைவருக்கும் தரமான கல்வி அளிப் பதற்கு எதிரான செயல் அல்லவா?

முழுமையாக பார்க்கும்போது மாநில அரசும், மைய கூட்டாட்சி அரசும் அனைவரும் தரமான கல்வி பெறுவது அவர்களது உரிமை என்று சொல்லுகின்றன. ஆனால் ஒரு சிலருக்கு மட்டும் உயர்ந்த தரம் அளிக்க முயல் கின்றன. "அடுத்து ஒவ்வொரு நாளும் மூன்று ஆண்டுகளாக மாணவர்களே இல்லாத அரசுப் பள்ளி மூடப்பட்டது. மாணவர்கள் வருகை நின்றது. அரசு பள்ளி மூடப்பட்டது' என்பன போன்ற செய்திகள் (தினமணி 10.7.10; தினமலர் 23.6.10) வெளிவருகின்றன. இவற்றுக்கு ஏன் மாணவர் வரவில்லை? என்பது ஆராயப் பட்டதாகச் செய்திகள் இல்லை.

மேலும், மைய கூட்டாட்சி அரசு மனிதவள மேம்பாட்டு அமைச்சர் "நாட்டுக்கு 12 இலட்சம் ஆசிரியர்கள் தேவை' என்கிறார் (இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் 7.8.10). மாநிலங்கள் ஆசிரியப் பயிற்சி கல்லூரிகள் திறக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறார். ஆனால் அடுத்து வரும் செய்தி "600 ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் மூடப்பட்டன' (இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் 18.8.10). "நாட்டில் இருக்கும் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் மொத்தம் 13,664 என்பதால் 5 சதவீத நிறுவனங்கள் மூடப்பட்டன. இதேபோல பல ஆசிரியர் பயிற்சி கல்லூரிகளும் மூடப்படு கின்றன' (தினமணி 7.4.10). "அதுமட்டுமல்ல. தமிழ்நாட்டில் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் ஆசிரியர் வேலை வேண்டி பதிவு செய்தவர் எண்ணிக்கை மூன்றரை இலட்சம்' (தினமணி 3.6.10). மைய கூட்டாட்சி அரசு தேவையான எண்ணிக்கை ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகளைத் திறக்க என்ன செய்கிறது? மூடிய நிறுவனங்கள் ஏன் மூடப்பட்டன? அவற்றைத் தொடர்ந்து நடத்த என்ன நடவடிக்கை எடுக்கிறது? வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்த ஆசிரியர் பயிற்சி பெற்றவர்களைப் பயன் படுத்திக் கொள்ள என்ன திட்டம் தீட்டி யிருக்கிறது? இவை யாவும் மர்மமாக உள்ளன.

முழுமையாக பார்க்கும்போது அனைவருக்கும் தரமான கல்வி அளிக்கும் சட்டம் இயற்றப்பட்டு செயலுக்கு வந்தாலும், நமது அரசுகளின் செயல்கள் ஒருசிலர் தரமான கல்வி பெறுமாறும், பெரும்பாலானவர் தரமற்ற கல்வியையேத் தொடர்ந்து பெறு மாறும் அமைகின்றன. அனைவருக்கும் அவரவர்க்கு உரிமையான தரமான கல்வி கிடைக்கத் தேவையான திட்டமும் இதுவரை வரையப்படவில்லை; வரைவதற்கான திட்டமும் இல்லை.

அனைவருக்கும் தேவையான தரமான கல்வி அளித்தால்தான் அனைவருடைய திறமைகளும் அவர்களுக்கும் நாட்டுக்கும் பயன் படும் என்பதால் அனைவருக்கும் தேவையான தரமான கல்வியை அளிப்பது மக்களாட்சி நடைபெறும் நாட்டில் ஆட்சியாளரின் கடமை. அக்கடமை நிறைவேற கீழ்க் கண்டவற்றைச் செய்ய வேண்டும்.

பள்ளிக் கல்வி அமைப்பு பள்ளிக்கல்வியின் பயன்கள் பின்வருமாறு உருவாக வழி வகுக்க வேண்டும்: தான் அங்கம் வகிக்கும் சமுதாயத் தின் மற்ற அங்கத்தினருடன் தொடர்பு கொள்ளவும் தானாக தினசரிச் செயல் பாடுகளில் ஈடுபடவும் தேவையான மாநில மொழி அறிவு பெறுதல்; தன் சுற்றத்தாரின், தன் சமுதாயத்தின் பண்பாட்டையும், மரபை யும், அதற்கும் நமது நாட்டின் பண்பாடு, மரபு ஆகியவற்றுடன் உள்ள தொடர்பையும் அறிதல், புரிந்து கொள்ளுதல்; நமது நாட்டுப் பண்பாடு, மரபு ஆகியவற்றுக்கு உலக அளவில் மனித சமுதாயப் பண்பாடு மரபுகள் ஆகியவற்றுடன் உள்ள தொடர்பைப் புரிந்து கொள்ளுதல்; நற்கருத்துகளைக் கற்று சமுதாயத்திற்கு பயனுள்ள நல்லதொரு குடி மகனாக மலர்தல்; வாழ்க்கைக்கு தேவையான பொருள் ஈட்டுவதற்காக ஒரு வாழ்க்கைத் தொழில் கல்வியும் பயிற்சியும் பெறவோ, அல்லது தொழில்நுட்பக் கல்வி கற்கத் தேவை யான அறிவையோ பெறுதல்.

அனைத்துப் பள்ளிகளும் தரமானவையாகவும் குழந்தைகள் வசிக்கும் இடத்திற்கு அருகிலும் அமைந்திருக்க வேண்டும். ஒவ்வொரு பள்ளியும் தனது பகுதியில் வாழும் குழந்தைகள் அனைவரையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். தன்னிடம் சேர்ந்த அனைத்துக் குழந்தைகளும் நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச கல்வித் தகுதியைப் பெறுவது தனது கடமையாகக் கொள்ள வேண்டும். பள்ளியில் சேர்க்கும்போது குழந்தையின் பின்னணிக்குத் தக்கவாறு அதன் அறிவு, வளர்ச்சி இருக்கும் என்பதால் அதனுடைய அறிவு நிலையை அளந்து அறியும் வகையில் தேர்வு நடத்தி அத்தேர்வின் முடிவுக்கு ஏற்ப அதற்குத் தேவையான பயிற்சி அளித்து மற்ற குழந்தைகளுடன் இணைந்து கல்வி கற்கச் செய்ய வேண்டும். அதன்பின்னர் ஒவ்வொரு குழந்தையும் ஒரு நிலையில் தேவையான திறமைகளைப் பெற்ற பிறகு அடுத்த நிலைக் கல்வியை அக்குழந்தைக்கு கற்பிக்க வேண்டும். அதாவது குழந்தைகளின் வயது, எத்தனை ஆண்டுகள் பள்ளியில் படித்தனர் என்பனவற்றைப் பொறுத்து வகுப்புகள் அமைக்காது, எந்த அளவுக்கு திறமைகளைப் பெற்றுள்ளார் களோ அந்த அடிப்படையில் வகுப்புகளைப் பிரிக்க வேண்டும்.

அனைத்துக் குழந்தைகளுக்கும் பொதுவான பாடத்திட்டம், பாடநூல்கள் இருக்க வேண்டும். பாடத்திட்டத்தில் மொழி, கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பாடங்கள் இருக்க வேண்டும். எனினும், அனைத்துக் குழுந்தைகளும் அனைத்துப் பாடங்களிலும் முழுமையாகத் தேற வேண்டும் என்பதில்லை. ஏனெனில் குழந்தைகளுக்கு விருப்பு வெறுப்பு இருக்கும். அவர்கள் விரும்புபவற்றை முழுமை யாகவும், விரும்பாதவற்றில் நல்ல குடிமக்களாக வளரத் தேவைப்படும் குறைந்தபட்ச அளவும் தேறினால் போதுமானது.

பாடத்திட்டத்தில், மொழி, கணிதம், அறிவியல் சமூக அறிவியல் தவிர, கலைகள், உடற்பயிற்சி, சுகாதாரம், சுற்றுச்சூழல், ஒழுக்கக்கல்வி, அமைதிக் கல்வி, வாழ்க்கைத் தொழில் கல்வி, பணி அனுபவக் கல்வி இவை போன்றவையும் இடம் பெற வேண்டும். கலைகளில் பயிற்சியோ அல்லது கலைகளை அனுபவிக்கவோ கற்றவர்தான் முழு மனிதராக பரிணாமிக்க முடியும். உடற்பயிற்சி குழந்தை களின் ஆரோக்கியத்தை வளர்க்கும். சுகாதார அறிவு அவர்கள் தொடர்ந்து ஆரோக்கியமாக வாழ உதவும். ஆரோக்கியத்தைப் பொறுத்தே அவற்றின் பள்ளி வருகை, பள்ளியில் தொடர்ந்து படித்தல், பள்ளிப்படிப்பை முடித்தல் அமையும். பணி அனுபவக் கல்வி பலவிதத் திறமைகளை வளர்த்துக் கொள்ள உதவும். ஆகவே கலைகள், உடற்பயிற்சி, சுகாதாரம், பணி அனுபவக் கல்வி ஆகியவை பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட வேண்டும். சுருக்கமாகச் சொல்வதென்றால், எட்டு ஆண்டுகள் கல்விக் கற்ற இளைஞர் நல்ல குடி மகனாக உருவாகும் வகையில் பாடத்திட்டம் அமைக்கப்பட வேண்டும்.

அடுத்ததாக, சில குழந்தைகளுக்கு தனிப் பட்ட கவனம் தேவைப்படலாம். சில குழந்தை களுக்கு தனிப்பட்ட திறன்களை வளர்த்துக் கொள்ளும் ஆர்வம் இருக்கலாம். ஆகவே ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியப் பகுதியிலும் அல்லது மாவட்டத்திலும் தனிப்பட்ட கவனம் தேவைப்படும் குழந்தைகளுக்கும் தனிப்பட்ட திறன்களை வளர்த்துக் கொள்ள விரும்பும் குழந்தைகளுக்கும் ஏற்ற பள்ளிகள் வேண்டும். எந்த குழந்தைக்கு எந்தவகைப் பள்ளி தேவை என்பதை குழந்தை வசிக்கும் இடத்தில் அமைந்த பள்ளிக்கூடத் தலைமை ஆசிரியர் அந்தப் பகுதி பள்ளி வாரிய அலு வலர், ஆசிரியர் பெற்றோர் கழகத் தலைவர், பெற்றோர் ஆகியோர் அடங்கிய குழு முடிவு எடுத்து அப்பள்ளியில் அக்குழந்தை பயில வழிவகை செய்ய வேண்டும். அத்தகைய பள்ளி யில் கற்பதற்கு ஆகும் செலவை அரசே ஏற்றுக் கொள்ள வேண்டும். தன்னாட்சியுடன் செயல் படும் ஒரு பள்ளிக் கல்வி வாரியம் கல்வியை மேற்பார்வையிட வேண்டும். இத்தகைய கல்வி அமைப்பை உருவாக்கி செயல்படுத்த வேண்டியது ஆட்சியாளரின் கடமை.


நன்றி : நக்கீரன் பொதுஅறிவு உலகம்

No comments:

Post a Comment