கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Friday, July 8, 2011

சமச்சீர் கல்வி மட்டுமே தரம் மிக்கது! -ஜெனிபர்


ரணச் செய்தி போலுள்ளது சமச்சீர் கல்வி தடுக்கப்பட்டுள்ள செய்தி. மேல்தட்டு சமூகத்தினரின் அனைத்து விதமான தடை களையும் கடந்து, கிராமத்து ஏழைக் குழந்தைகளுக்கு இலவசப் பாடநூல் என்ற பெயரிலான பழைய பாடத்திட்டம், பல நேர்மறையான மாற்றங்களுடன் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு, சமச்சீர் கல்விமுறையாக மாற்றியமைக்கப்பட்டது. வாய்ப்புகள் மறுக்கப்பட்ட குழந்தைகளின் ஆற்றல் வெளிப்படும்படியாகவும், மேலை-கீழை நாட்டுக் கல்வி முறைகளின் வார்ப்புகளான முன்னேறிய மாணவர்களுடன் அறிவுத் திறனில் சமமான வளர்ச்சியைப் பெறும் வகையில் சமச்சீர் கல்விமுறை அமைக்கப்பட்டது. இத்தகைய முற்போக்கான கல்விமுறை, தற்போது உயிருடன் புதைக்கப்பட்டுள்ளது.

திடீரென்று எதுவும் நடப்பதில்லை என்பதே இயங்கியல். ஆனால், திடீரென்று(?) கட்டாயமாக வழங்கப்பட்டிருக்கும் இந்த வெத்து வெட்டு விடுமுறையால் எந்தப் பயனுமில்லை. "முந்தைய அரசின் கொள்கை முடிவுகளில் மாற்றம் கூடாது' என உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்திருந்தும்- அவற்றையெல்லாம் அலட்சியப்படுத்திவிட்டு, சர்வாதிகாரமாக முடிவெடுத்துள்ளது அ.தி.மு.க. அரசு.

மெட்ரிக் புத்தக அச்சிடலுக்கான முன் தயாரிப்பு வேலைகள்- கல்வி வியாபார மையங்களுக்கும், தற்போதைய ஆளும் கட்சிக்குமான புரிந்துணர்விற்கான சான் றாக விளங்குகின்றன. மக்களின் கல்விக் கொள்கைகளைத் தீர்மானிப்பது - மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசா? இல்லை, கல்வி வியாபாரிகளா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இதனால் நாளை என்ன நடக்குமோ என்ற பதற்றம், மன உளைச்சல், குழப்பம், போன்ற உணர்வுகளோடு - பெற்றோர்களும், மாணவர்களும், ஆசிரியர்களும் திகைத்து நிற்கின்றனர்.

கல்வி என்பது ஒரு மனிதனின் ஆற்றல் களை வெளிக்கொணர்ந்து, மனித வளத்தை மேம்படுத்தி, அதன் மூலம் சமூகத்தை ஒழுங்கு படுத்துவதாக இருக்க வேண்டும். ஆனால், இன்றைய கல்விமுறை ஏற்றத்தாழ் வான சமூக அமைப்பை நியாயப்படுத்துவ தாக உள்ளது. மேலும் இது, சமூக பொருளா தாரத்தில் முன்னேறியவர்களின் தனி உடைமை ஆகிவிட்டது. மிகப் பெரும் பான்மையான ஏழை மாணவர்களை பாதிப்பது மட்டுமின்றி, உயர் வர்க்க மாணவர் களையும் கூட இது விட்டுவைக்கவில்லை, இன்றைய கல்விமுறை.எதார்த்த வாழ்விலுள்ள சமூக அவலங்களி லிருந்து அவர்களை அந்நியப்படுத்துவதாக உள்ளதால், அந்த மாணவர்களுக்கும் எதார்த்த நிலையைப் புரிந்து கொண்டு ஆக்கப்பூர்வமாக சமூகத்தை மாற்றியமைக்க வாய்ப்பின்றி - மனிதவள மேம்பாடு பின்னடைவை சந்திக்கிறது.

தொல்காப்பியர் காலத்திலேயே (கி.மு.4- கி.பி.1.2) "உயர்குடிப் பிறந்தவர்களுக்கே கல்வி' என்ற நிலை இருந்தது. பின்பு வந்த சங்க மருவிய காலத்தில் தோன்றிய திருக்குறளிலும், நாலடியாரிலும் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. இருந்தபோதும் இடைக் காலத்தில் வர்ணாசிரம அடிப்படைக் கல்வியே தீவிரப்படுத்தப்பட்டது என்று வரலாற்றுச் சான்றுகளிலிருந்து அறிகிறோம். வட மொழிக்கும், வேதகல்விக்கும் அடித்தள மிட்டது சோழப் பேரரசு. அதன் விளைவாக கல்வி என்பது அடிப்படை உரிமை என்றில் லாமல், பிறப்பின் அடிப்படையிலான சாதிய சமூகச் சூழல்களே கல்வி கற்பதற்கான அடிப் படை உரிமையும் தகுதியுமாக ஆகிப்போனது.
பிறரைச் சுரண்டாத, நேர்மையான, நீதியான கல்வி என்பதே சமச்சீர் கல்வியின் பொருள். இந்த வகைப்பட்ட சமத்துவ கல்விச் சிந்தனை அதன் உண்மையான பொருளில் அணுகப்படுகிறதா?
தொடக்கக் கல்விதான் ஒரு மாணவனின் அடிப்படை. அரசின் கல்விக் குறிக்கோள் மற்றும் செயல்திட்டங்கள்: 6 முதல் 14 வயதுடைய அனைத்துக் குழந்தைகளுக்கும் இலவச கட்டாயக் கல்வி, (இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 21-ஆவது பிரிவு எண் 45), விரும்பத்தக்க தரமான கல்வி, குழந்தைகளின் உணர்வு வளம், சமூக மற்றும் உடல் வளம், இவற்றோடு அறிவாற்றல் திறமைகளை மேம்படுத்துதல், அவர்களின் சமூக உணர்வை உறுதி செய்தல், அனைத்துப் பாலின மற்றும் சமூக இடைவெளிகளைப் போக்குதல் போன்றவையாகும்.

அதன்படி, குழந்தைகளை மையமாகவும், அவர்களின் தனித்திறன்களை அடிப்படை யாகவும் கொண்டு, குழந்தைகளின் தன் முனைப்பு, படைப்பாற்றல், ஒருமைப்படுத்துதல் மற்றும் தன்னம்பிக்கை போன்றவற்றை வளர்த்து, மகிழ்வுடன் கற்கச் செய்யும் ஊக்கு விப்பு மையங்களாக தொடக்கப் பள்ளிகளை மாற்றிவிட்டதாகவும், செயல்முறைக் கற்றல் முறையினை 5-6 ஆண்டுகளாக நடைமுறைப் படுத்தியதன் மூலம் அதன் இலக்கை அடைந்துவிட்டதாகவும் முந்தைய தி.மு.க. அரசு கூறுகிறது.

தமிழகத்தைப் பொருத்தவரை, வெவ்வேறு வாரியங்களின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள நான்குவகை கல்வி முறைகள்: மாநிலவாரிப் பள்ளிகள் - 82%, மெட்ரிகுலேசன் பள்ளிகள் - 16%, ஓரியண்டல் (கீழ்த்திசை கல்விமுறை) பள்ளிகள் மற்றும் ஆங்கிலோ - இந்தியன் பள்ளிகள் - 2% போன்றவை செயல்படுகின்றன. அவை தமக்கென்று தனிப்பட்ட பாடத்திட்ட முறைகளையும், பாடநூல்களையும், தேர்வுத் திட்டங்களையும், அமைப்புமுறை மற்றும் கட்டண விதிமுறைகளையும் கொண்டுள்ளன. இப்பள்ளிகளின் கல்விமுறைகளினால் பள்ளி நடைமுறைச் செயல்பாடுகளும் வேறு படுகின்றன. ஆகவே, சமூக நீதியை உறுதி செய்யும் வகையில், இம்மாநிலத்திலுள்ள அனைத்து மாணவர்களுக்கும் நான்குவகை கல்வித்திட்டங்களின் சிறப்புக் கூறுகளை உள்ளடக்கிய - தரமான கல்வியை வழங்கு வதற்காக, பள்ளிக் கல்வியில் சமச்சீரான முறையை உருவாக்குவதற்காக ஏற்படுத்தப்பட்ட கல்விமுறையே சமச்சீர் கல்வி முறையாகும்.

சமச்சீர் கல்வி முறை 1837-இல் அமெரிக்காவின் மாசாசூட்ஸ் பகுதியில் மாநிலக் கல்வி வாரியத்தின் செயலராக இருந்த ஹராஸ்மேன் என்பவரால் அறிமுகப் படுத்தப்பட்டது. பொதுப் பள்ளிகளில் இலவசக் கல்வியை அளிப்பதன் மூலம் மாணவர் சேர்க்கையை அதிகரித்தல், உண்மை யான ஜனநாயகக் கல்வி வழங்குதல் போன்றவை மூலம் - சமூகப் பிளவுபடுத்தலை சரி செய்யவும், நாட்டில் ஒருமைப்பாட்டு சிந்தனையை உருவாக்கவும் இக்கல்வி முறை அமெரிக்காவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் அடிப்படை முக்கியத்துவத்தினை உணர்ந்த ஒடுக்கப்பட்ட மக்களின் தலைவரும், டாக்டர் அம்பேத்கரின் முன்னோடியுமான மகாத்மா ஜோதிபாபுலே, இம்முறையை நடைமுறைப்படுத்தும்படி ஆங்கில அதிகாரி களிடம் வலியுறுத்திப் போராடியுள்ளார்.

இக்கல்வி முறையை 1964 - 66-இல் ஆய்வு செய்த கோத்தாரி கல்விக்குழு, ""இன்றைய கல்விமுறையால் சமூகப் பிளவுகளை சரிப் படுத்த முடியாது'' என்று கூறி, சமச்சீர் கல்வி முறையையே அதற்கான தீர்வாக மத்திய அமைச்சரவையிடம் முன் வைத்தது. அதன் விளைவாக, 1968-இல் மத்திய அமைச்சரவை அதற்கான கொள்கை முடிவிற்கு ஒப்புதல் அளித்தது. அதன் நீட்சியாக 1986-லும், 1992-லும் இதுபற்றி நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு, அறிமுகப்படுத்த முனைந் தது. 1988 -இல் கூடிய CABE (Central Advisory Board Education) என்ற மத்திய அரசின் ஆலோசனைக் குழு, சமச்சீர் கல்வி முறை பற்றி விவாதிப்பதற்காக நியமிக்கப் பட்ட குழு, பத்தாண்டு செயல் திட்டத்தை வரையறுத்தது. 1990-இல் மீண்டும் ஓர் ஆய்வுக்குழு ஆச்சார்ய ராமமூர்த்தி என்பவரின் தலைமையில் மறுவிவாதம் செய்ததுவரின் தலைமையில் மறுவிவாதம் செய்தது. மீண்டும் 2006-இல் பாரதிதாசன் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் எஸ்.முத்துக்குமரன் தலைமை யில் சமச்சீர் கல்வி ஆய்வுக்குழு அமைக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக முன்னாள் மாநகராட்சி ஆணையர் விஜயகுமார் என்பவர், சமச்சீர் கல்வி செயல் பாட்டுக் குழுவின் தலைவராக நியமிக்கப் பட்டார். இக்கல்வி முறையினை 7.12.09 அன்று தி.மு.க. அரசு தமிழகத்தில் செயல்படுத்த முடிவு செய்தது.

சமச்சீர் கல்விமுறையை நடைமுறைப் படுத்துவதற்காக தமிழ்நாடு சமச்சீர் பள்ளிக் கல்வி முறைச் சட்டம் 2010-ஆம் ஆண்டு இயற்றப்பட்டது. அதன்படி, தமிழ்நாட்டில் இயங்கும் அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் தனியார் சுயநிதிப் பள்ளிகள் அனைத்துக்கும்- ஒரே மாதிரியான, சிறந்த தரம் உடைய பாடத்திட்டம், பாடநூல் மற்றும் தேர்வுமுறையைப் பின்பற்றுவதற்கான அரசாணையை இயற்றியுள்ளது. அதன்படி, மாநில பொதுக்கல்வி வாரியம் அமைக்கப்பட்டு, அதன் ஒப்புதலுடன் வகுக்கப்பட்டுள்ள பொதுப் பாடத்திட்டம் அனைத்து வகுப்புகளுக்கும் விரிவு படுத்தப்பட்டுள்ளது. அதேபோல் பள்ளிக் கட்டணத்தை முறைப்படுத்தும் வகையில் 7.12.09 அன்று அதற்கான சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.

மாநில, மாவட்ட, வட்டார, துணை வட்டார அளவில் நடைபெற்ற கருத்தரங்கு களில் மாநில முழுவதும் 32 மாவட்டங்களிலிருந்து 4,088 கல்வியாளர்களிடமிருந்து கருத்துகள் பெறப்பட்டன. அவற்றை ஆராய்ந்து வரைவுப் பாடத்திட்டம் இறுதி செய்யப்பட்டது. அதன்படி, பாடநூல்கள் அனைத்தும் ஆற்றல்மிக்க கல்வியாளர்கள், சிறந்த கல்வி வல்லுநர்கள் மற்றும் தரமான கல்வி ஆய்வாளர்களைக் கொண்டு எழுதப்பட்டு இறுதி செய்யப்பட்டுள்ளன. பள்ளிக் கல்வித் துறையில் உள்ள 10 இணை இயக்குநர்கள் தலைமையில் பாடநூல்கள் எழுதும் பணி தொடங்கியது.

அவர்களுள் டெல்லி என்.சி.இ.ஆர்.டி "நேஷனல் யுனிவர்சிடி. பார் எஜுகேஷன் அண்ட் பிளானிங் அட்மினிஸ்ட்ரேஷன்' குழுவைச் சேர்ந்தவர்களும் அடங்குவர். அதற்கென நடைபெற்ற பயிற்சிப் பட்டறையில் பாடத்திட்டம், கல்வியாளர்கள் கட்டணம், பாடநூல்கள் அச்சிடும் செலவு என்பதில் சுமார் 1000 கோடி வரை செலவிடப்பட்டுள்ளது. ("தினகரன்', 24.5.11). இலவசப் பாடநூல்களான 4 கோடியே 49 லட்சம் நூல்களை அச்சடிக்கும் பொறுப்பு தமிழ்நாடு பாடநூல் கழகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

அதன்படி, 2010 - 11-ஆம் ஆண்டுக்கான 620.20 லட்சம் எண்ணிக்கையிலான பாட நூல்கள், ரூ.7102.20 லட்ச தோராய மதிப் பீட்டில் அச்சடிக்கப்பட்டுள்ளன. 1 முதல் 12-ஆம் வகுப்பிற்கான பாடநூல்களை தமிழ் நாட்டுப் பாடநூல் கழகம் www.textbooksonline.tn.nic.in என்ற தளத்திலிருந்து இலவசமாகப் பதிவிறக்கம் செய்யும் வகையில் தமிழ், ஆங்கிலம், சிறுபான்மை மொழிகளான தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் உருது உட்பட 6 மொழிகளில் 540 பாடநூல்கள் வெளியிடப்பட்டுள்ளன. 2010 - 11-இல் முதலாம் வகுப்பிற்கு 61 லட்சம் பாடநூல்களும், ஆறாம் வகுப்பிற்கு 84 லட்சம் பாடநூல்களும் வழங்கப்பட்டன. இதற்கான பள்ளிக் கல்விக்காக 2010-11-ஆம் ஆண்டுக்கான மொத்த ஒதுக்கீடு 10147.56 கோடிகள் என்று அரசு சொல்கிறது.

சமச்சீர் கல்விமுறையினால் கிராமப்புற ஏழை மாணவர்கள், தலித், பழங்குடி மாணவர்கள் மற்றும் உடல் மற்றும் மனரீதியாக பாதிக்கப்பட்டுள்ள சிறப்புத் திறன்கள் பெற்றுள்ள மாணவர்களின் ஆற்றல் மேம்படும். மேலும், மொழி அகராதிகளின் பயன்பாடு அதிகரித்து, அதன் விளைவாக பயிற்சி மொழி பயன்பாட்டு எல்லைகள் விரிவுபடும். அதன் மூலம் அவை சமூகத் தேவையாகப் பரிணாமம் பெறும். பயிற்றுமொழி ஆற்றலை வளர்ப்பது, நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6 சதவிகித வளர்ச்சிக்கான தீர்மானகரமான சக்தியாக விளங்க வாய்ப்புகளை ஏற்படுத்துகிறது.

கல்வி தரும் மதிப்பீடுகளும், அறிவும் ஒரு பண்டமாகப் போய்விட்ட நிலையில், கிராமத்துக் குழந்தைகளுக்கு ஆரோக்கியமான கல்விச் சூழல் உறுதிப்படுத்தப்படுகிறது. ஏனெனில், பெரும்பாலும் கிராமப்புறத்து கூலி வேலை செய்யும் பெற்றோர்கள், அதி காலையிலேயே வேலைக்குச் சென்று இரவில் வீடு திரும்பும் நிலையே இன்றும் உள்ளது. அவர்கள் தமது அறியாமையினால் தமது குழந்தைகளின் கல்வியில் போதிய கவனம் செலுத்துவதில்லை. அத்தகைய மாணவர் களுக்கெல்லாம் பள்ளியில் நடைபெறும் கல்விச் செயல்பாடுகளே அவர்களின் அதிகபட்ச கல்வி வாய்ப்புகளாக உள்ளன.

கல்வி பொதுமைப்படுத்தப்படுவதால், ஏழை மாணவன் சி.பி.எஸ்.சி. மாணவனுடன் இணைந்து கல்வி கற்க முடியும். இதனால் அவர்களிடையே செயற்கையாக ஏற்படுத்தப்பட்டுள்ள சாதிய, வர்க்க வேறு பாடுகளின் இடைவெளி குறைந்து, நல்லிணக்கம், புரிதல், நட்பு, ஒருமைப்பாட்டுணர்வு போன்றவை சமூக மதிப்பீடுகளாக எழுச்சி பெறும் சூழல் ஏற்படுகின்றன.

குறைபாடுகள் என்று இத்திட்டத்தில் எதுவுமே இல்லை என சொல்லிவிட முடியாது. எழுத்து மற்றும் அச்சுப்பிழைகள் நீங்கலாக, தற்போதைய சாதிய சமூக ஏற்றத்தாழ்வினை எவ்விதத்திலும் இப்பாடங்கள் விமர்சிக்க வில்லை. அதன்மீது எதிர்வினையாற்றுவதற்குப் பதிலாக, மவுனமே சம்மதம் என்பதுபோல் அதனைக் கட்டிக்காக்கும் கருவிகளாக உள்ளன. பழைய பாடத்திட்டத்தின் நீட்சியாக, சாதிய அமைப்பு முறைகளைத் தகர்ப்பதற்கான எவ்வித வீரிய விதைகளையும் சூல்கொள்ளாமல் உருவாக்கப்பட்டிருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது. அவை நிச்சயமாக மாற்றப்பட வேண்டியவை என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

"யுனெஸ்கோ' அறிக்கையில் சொல்லப்படும் கல்வியின் இரு மிக முக்கிய தூண்களான - வாழ்வதற்கான கல்வி; இணைந்து வாழ் வதற்கான கல்வி என்பதில் புரிதல் தேவைப் படுகிறது. ஒரு மனிதனுள் புதைந்துள்ள ஆற்றலை வெளிக்கொணர்ந்து, சமூகப் பொறுப் புணர்வுடன் செயல்படவைப்பது வாழ்வதற் கான கல்வி என்றால், தனிமனித வேறுபாடு களான ஏற்றத்தாழ்வு போன்ற குறுகிய மனோபாவங்களைத் தகர்த்து, அமைதியான வாழ்விற்காக அவனை உருவாக்குவதே சக மனிதனுடன் இணைந்து வாழ்வதற்கான கல்வியாக இருக்கிறது.

வணிகமயமாகிவிட்ட ஏகாதிபத்திய உலகமய சூழலில், புரட்சிகரமான மாற்றங் களை ஏற்படுத்தும் நேர்மையான அறிவைத் தரவல்ல, பகுத்தறிவு மதிப்பீடுகள் தரக்கூடிய கல்விமுறையே - சமூக முன்னேற்றத்தின் இயங்கு சக்தியாகும். உண்மை, நேர்மை, இரக்கம் போன்ற மதிப்பீடுகளிலும், மதச் சார்பின்மை, ஜனநாயகம், சமத்துவம் போன்ற மதிப்பீடுகளிலும் ஆழமான கவனம் கொள்ளா விட்டால், சமூகச் சக்கரத்தைப் பின்னோக்கி இழுக்கும் பிற்போக்கு சக்திகளுக்கு உந்து சக்தியாகிவிடும்.

பொதுமக்களாலும், ஏழை மாணவர் களாலும் வரவேற்கப்பட்ட சமச்சீர் கல்வி முறையை உயர் மற்றும் உச்ச நீதிமன்றங்களும் சரியான கல்விமுறை என ஏற்றுக் கொண்டு தீர்ப்பளித்துள்ளன. சமச்சீர் கல்வி தொடர்வ தால் ஏற்படும் கட்டணக் குறைப்பால் கட்டணக் கொள்ளையடிக்க முடியாததால், மேலும் பல பள்ளிகளை இழுத்து மூட நேரும் என்ற அச்சத்தில், திரைமறைவு செயல்களை படிப்படியாக அரங்கேற்றி வருகின்றன மெட்ரிக், சி.பி.எஸ்.சி. மற்றும் ஆங்கிலோ- இந்தியன் போன்ற தனியார் பள்ளிகள். முன்பே கூறியபடி, இங்கு பெருவாரியாகப் படிக்கும் ஆதிக்கசாதிக் குழந்தைகள் ஒடுக்கப் பட்ட சமூகக் குழந்தைகளுக்குச் சமமாவதை அவர்களால் ஏற்றுக் கொள்ள முடியாத பார்ப்பனிய மனோபாவமே இதன் ஊற்றுக்கண்.

அதிகார ஆதிக்க வேட்கை வெறியுடன் பணவேட்டைக்காகப் பயணிக்கும் இந்த தனியார் கல்வி வணிகக் கூடங்களால், தற்போது அரசு மேல்நிலை மற்றும் உயர் நிலைப் பள்ளி மாணவர்கள் - மாநில அள விலும், மாவட்ட அளவிலும் முதலிடம் பெறுவதை சகித்துக் கொள்ள முடியவில்லை. சாணி மற்றும் சுள்ளி பொறுக்கிக் கொண்டு, டீ ஆற்றிக் கொண்டு, கூலி வேலை செய்து கொண்டு குடும்பத்தையும் காப்பாற்றிக் கொண்டு அதிக நுண்ணறிவுத்திறன் (200% - 300%) பெற்றுள்ளவர்களின் படைப்பாற்றல் திறனுக்கு முன், வெறும் 50 சதவிகிதம் நுண்ணறிவுடன் ஏ.சி. காரில் பயணித்தும் ஓப்பீட்டளவில் சமமாகவோ, குறைவாகவோ மதிப்பெண் பெறுவதை இவர்களால் சீரணிக்க முடிவதில்லை. தேவைதான் அறிவின் நுழை வாயில் என்பது புரியாமல், அரசுப் பள்ளிகளின் சாதனைச் செய்திகளை இருட்டிப்பு செய்வதில் இவர்கள் தோற்றுப்போய் வருகின்றனர். நாளிதழ்களில் இடம் பெறும் வண்ணம் தமது மாணவர்களை 100 சதவிகிதம் தேர்ச்சி காட்டி தரவரிசையில் கொண்டு வரவும், அதிக மதிப் பெண்கள் பெற வைக்கவுமான அசிங்கங்களை இவர்கள் அரங்கேற்றி வருகின்றனர்.

ஓரியண்டல், ஆங்கிலோ இந்தியன் பள்ளி களில் மட்டுமிருந்த பயிற்றுவித்தல் முறை, இப்போது மெட்ரிகுலேஷன் பள்ளிகளையும் தொற்றிக் கொண்டது. புரிகிறதோ, இல்லையோ பக்க எண் உட்பட வார்த்தைக்கு வார்த்தை உருப்போடும் பயிற்சியே இங்கு கல்வி அறிவாகக் கருதப்படுகிறது. எந்த அளவு என்றால், 99 சதவிகிதம் மதிப்பெண்கள் பெற்றிருந்தாலும் குறைந்துவிட்ட அந்த 1 சதவிகிதம் மதிப்பெண்ணுக்காக விரக்தியின் விளிம்பிற்கே போகும் மனோபாவமே உருவாக்கப்படுகிறது. மூளையின் சிந்தனைத் திறனற்று, அனிச்சையாக தேர்வுத்தாளில் மறுபதிவு செய்யும் கற்றல்- பயிற்றுவிப்பு முறையே வெற்றிப் பெற்ற முறையாக ஏற்றுக் கொள்ளப்படுகிறது.

ஒரு சிறந்த குடிமகனாக மாறவேண்டிய வனது ஆளுமைகளும், மனவெழுச்சிகளும் சிதைக்கப்படுவது பற்றி அரசோ, சமூகமோ, ஆசிரியர்களோ, பெற்றோர்களோ கவனம் கொள்வதில்லை. அவர்களின் கவலை எல்லாம் கைநிறைய சம்பளம் வாங்க ஏதுவானதொரு பட்டம். அதற்கு விலையாக பெற்றோரின் பாசம். குழந்தைகளின் அன்புத்தேவைகள் கூட தியாகக் கணக்கில் சேர்த்துக் கொள்ளப் படுகின்றன.

தமது குழந்தைகளின் தனித்திறன் விருப்பம், ஆற்றல் போன்றவை புறக்கணிக்கப்பட்டு, சூதாட்டத்தில் கட்டியப் பந்தயப் பணம் போன்று பணவேட்டையால் கல்வி வணிக மையங்கள் மீது மட்டுமே நம்பிக்கையை முதலீடு செய்யும் பல குழந்தைகள் விடுதிகளில் தனித்து விடப்படுகின்றனர். அதிக மதிப்பெண் பெற்று சிறந்த மாணவரென தமது வாழ்நலன் களுக்கு முரணான தமது வாழ்நலன்களுக்கு முரணான மதிப்பீடுகளுடன் உருவெடுக்கும் போதுதான், பெற்றோர்கள் விழிபிதுங்கி நிற்கின்றனர்.

பெரும்பாலும் 9 மற்றும் 11 வகுப்புப் பாடங்கள் தொடப்படாத பக்கங்களாய் - அரசு பொதுத் தேர்வு என்ற போரில் பங் கெடுக்கும்படியான-எந்திர வீரனை தயாரிக்கும் தொழிற்சாலைகளே பெரும்பாலான பள்ளிக் கூடங்கள். ஒரு சீரான முன்னேற்றத்தில் செல் வதற்கான வாய்ப்புகளின்றி, கூடுதல் மதிப் பெண்கள் பெறும் நோக்கத்திற்காக 8 லிருந்து 10-ஆம் வகுப்பிற்கோ, 10 லிருந்து 12-ஆம் வகுப்பிற்கோ தாவும்போது, அது ஒரு குறை வளர்ச்சி குழந்தையையே பெற்றெடுக்கும்.

இந்நிலையில், பேராசிரியர் சிட்டிபாபு அறிக்கையில் கூறப்பட்டுள்ள பள்ளிக் கட்டடங்களுக்கான நில அளவையை ரத்து செய்யும்படியும், கோவிந்தராஜன் கமிட்டி யின்படி முன்வைக்கப்பட்ட கட்டண விதி முறைகளை ரத்து செய்யும்படியும், தனியார் பள்ளிகளின் கட்டண நிர்ணயிப்பில் அரசு தலையிடக்கூடாது என்றும், சமச்சீர் கல்வித் திட்டத்தை நடைமுறைப்படுத்தக்கூடாது என்றும், தனியார் பள்ளி நிர்வாகிகள் சங்கக் கூட்டமைப்புத் தலைவர் கிறிஸ்துதாஸ் வலி யுறுத்துவதிலிருந்து - அ.தி.மு.க அரசு யாருக் கானது என்பது விளங்கும்.

ஒரு கல்வித்திட்டம் என்பது கல்வி அறிவுள்ள கல்வியாளர்களால் மட்டுமின்றி, நேர்மையான சமூக உணர்வுள்ள அறிவுஜீவி களாலும் வகுக்கப்படும் போதுதான்-அது சமூக ஏற்றத்தாழ்வுகளைப் போக்கும் வகையில் செயல்படுத்தப்படும் ஒரு வலுவான கருவியாக மாறும். ஆனால், ஆசிரியர்கள் எவ்விதமான சமூக சிந்தனையுமற்று, குதிரைக்கு கடிவாளம் போட்டுவிட்டதைப்போல தமக்குத் தரப்பட்ட பாடத்திட்டம், கல்விமுறை குறித்த தீர்க்கமான சிந்தனையுமின்றி செயல்படுவது மட்டுமே அவர்களின் பொதுப்புத்தியாக இருக்கிறது.

சாதி-தீண்டாமை ஒழிப்பு பற்றி வேறு வழியின்றி உறுதிமொழியிலும், அவ்வப் போது பாடங்களிலும் கற்பிக்க நேரிடும் ஆசிரியர்கள் சாதி தீண்டாமைக்கு எதிராக எதிர்வினையாற்றுவதில்லை. சொல்லப் போனால், "சாதி இரண்டொழிய வேறில்லை' - என கற்பிக்கும் ஆசிரியர்கள் பலர், தமது சொந்த சாதி மனோபாவத்தையே உயர்த்திப் பிடிப்பதன் மூலம் - சாதி அமைப்பு முறை யினை கட்டிக்காத்து வளர்த்தெடுப்பதன் மூலம் சாதியத்தின் பங்காளிகளாகவே ஆகி விடுகின்றனர். ஆகவே, சமூகப் போராட்டங் களுக்காக தமது ஆற்றலைத் திரட்டுவதில் வலுவிழந்து போகின்றனர். அவர்களது அறிவின் தேவையே தவறாகப் பயன்படுத்தப் படுகிறது. தமது சுயசிந்தனை மற்றும் செயல் பாட்டுக்கு இடம் கொடுக்காமல் ஆளும்அரசின் அங்கமாகப் போய்விடுவதால், அங்கே அறிவுத் தற்கொலையே நிகழ்கிறது.

மனிதனுடைய வாழ்நிலையே அவனது உணர்வைத் தீர்மானிக்கிறது என்பதே மார்க்சியப் பார்வை. வருமானத்தில் தன்னிறைவு அடைந்துவிட்ட ஆசிரியர்களின் பொதுவான போராட்டங்களாக - பெரும் பாலும் பொருளாதாரப் போராட்டங்களே உள்ளன. அவர்களது குழந்தைகளில் 90 சதவிகிதம் பேர் மாநிலவாரி பள்ளிகளில் பயில்வதில்லை. அவர்களது உயர்நடுத்தர வர்க்க சிந்தனையால்தான் வணிகக் கல்வி மையங்களுக்கு எதிராக வீரியமான போராட் டங்களை அவர்கள் கையிலெடுப்பதில்லை. சமச்சீர் கல்வித்திட்டத்தை இவ்வாண்டு குழிதோண்டிப் புதைத்ததற்கு - தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் சங்கத்தைத் தவிர, வேறு சங்கங்கள் தமது தீவிரமான கண்டனத்தைப் பதிவு செய்யவில்லை. கருத்து விமர்சனங் களுக்குகூட மாநிலத் தலைமைகளின் அசைவுகளுக்காக காத்திருக்கின்றனர். கோடை விடுமுறையிலும் கூட பல்வேறு பிரச்சினைகளுக்காகப் போராடிய ஆசிரியர் அமைப்புகள், இது குறித்து தக்க கவனம் கொள்ளாமல் சடங்குத் தனமாக கருத்துகளை வெளியிடுகின்றனர்.

ஒருவேளை அடுத்த கல்வியாண்டில் சில மாற்றங்களுடன் சமச்சீர் கல்வி நடைமுறைப் படுத்தப்பட்டாலும் கூட, இன்றைய நவீன அறிவியல் யுகத்தில் ஒரு கணநேரத்திலான மாற்றம் கூட தீர்மானகரமான சக்தியாகும் போது, ஓராண்டு கால மாணவர்களின் முன்னேற்றத்தை மறுப்பதற்கான தார்மீக நியாயங்கள் என்ன? வீணடிக்கப்பட்டுள்ள மக்களின் இந்த 200 கோடி ரூபாய்க்கும் மேற்பட்ட வரிப்பணத்தில் மக்களின் எத்தனையோ வாழ்வுத் திட்டங்கள் அழிக்கப்படுகின்றன. ""அரசு என்ற அமைப்புதான் மிக அதிகமாக மனித உரிமைகளை மீறுகிறது'' என்ற ஐக்கிய நாடுகள் அவையின் கூற்று கவனிக்கத் தக்கது. நடந்து முடிந்த தேர்தல், நுட்பமான எச்சரிக்கைப் பாடங்களைக் கொண்டுள்ளது. பணிவோடு பாடம் கற்றுக்கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயம். மாற்றம் என்ற விதியைத் தவிர, அனைத்தும் மாறும்.

நன்றி:
புனித பாண்டியன், ஆசிரியர்- தலித் முரசு & நக்கீரன் பொதுஅறிவு உலகம் .

No comments:

Post a Comment