கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Friday, July 8, 2011

வழக்கு நடக்கும் போதே பாட புத்தகங்கள் அச்சிடுவதா? - தமிழக அரசுக்கு ஐகோர்ட் கண்டனம்


சமச்சீர் கல்வி வழக்கில் தீர்ப்பு வராத நிலையில் பழைய பாடத்திட்ட புத்தகங்களை அச்சடிப்பது ஏன்? இது நீதிமன்ற அவமதிப்பு செயலாகாதா? இது நீதிமன்றத்தை கேலிக்கூத்தாக்காதா? என்று உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இக்பால், தமிழக அரசு வக்கீலை பார்த்து கேள்வி எழுப்பி கண்டனம் தெரிவித்தார்.
சமச்சீர் கல்வி தொடர்பான வழக்கு, சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இக்பால் மற்றும் நீதிபதி சிவஞானம் முன்பு 07.07.2011 அன்று விசாரணைக்கு வந்தது. தமிழக அரசு சார்பாக உச்ச நீதிமன்ற மூத்த வக்கீல் பி.பி.ராவ், அட்வகேட் ஜெனரல் நவநீதகிருஷ்ணன், உச்ச நீதிமன்ற வக்கீல் குரு.கிருஷ்ணகுமார் ஆகியோரும், மனுதாரர்கள் சார்பாக வக்கீல்கள் கே.பாலு, பிரசாத் ஆகியோரும் ஆஜராகினர்.
உயர் நீதிமன்றத்தில் நடந்த விவாதம் வருமாறு:

பெற்றோர் தரப்பில் பிரின்ஸ் கஜேந்திரபாபுவின் வக்கீல் என்.ஜி.ஆர்.பிரசாத் வாதாடியதாவது:
�கடந்த தமிழக அரசு கொண்டு வந்த சமச்சீர் கல்வி சட்டம் செல்லும்� என்று இதே உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு கூறிய பிறகு, அதை எப்படி மாற்றி கூற முடியும். சமச்சீர் கல்வி தரமற்றது என்று அரசு தரப்பில் கூறியதை ஏற்கக் கூடாது. அது முழுவதும் சரியானது இல்லை.
கடந்த 2006ம் ஆண்டு முதல் கடந்த 2009ம் ஆண்டு வரை சமச்சீர் கல்வி பற்றி தீர ஆராய்ந்து பார்த்துதான் சமச்சீர் கல்வி திட்டம் கொண்டு வரப்பட்டது. அப்படிப்பட்ட அறிக்கையை புதிய அரசு பொறுப்பேற்றவுடன், அவசர அவசரமாக சமச்சீர் கல்வியை நிறுத்தி வைப்பதாக அமைச்சரவை கூட்டத்தை கூட்டி அறிவித்துள்ளது சட்டவிரோதமானது. இது அரசியல் உள்நோக்கமுடையது.
முன்னாள் துணைவேந்தர் முத்துக்குமார் கமிட்டி பல்வேறு அம்சங்களை ஆராய்ந்து பார்த்துதான் சமச்சீர் கல்வி கொண்டு வரப்பட்டது. இதுதவிர, மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி விஜயகுமார் மற்ற மாநிலங்களுக்கு சென்று, அங்குள்ள கல்வி திட்டத்தை ஆய்வு செய்து, அதன் பிறகுதான் இந்த சமச்சீர் கல்வி தரமானது என்று இதை கொண்டு வந்தார்.
இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் 4 வாரியத்தின் கீழ் பாடத்திட்டங்கள் உள்ளது எனவே, அதை நீக்க வேண்டும் என்று கருதி மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு சமச்சீர் கல்வி சட்டம் கொண்டு வரப்பட்டது. இதன் மூலம் தமிழகத்தில் எந்த பள்ளியில் படித்த மாணவர்களும், வேறு மாவட்டத்தில் உள்ள பள்ளிக்கு சென்று படிக்கலாம். தனியார் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் அரசு பள்ளிக்கு சென்றும் படிக்கலாம் என்ற நிலை உள்ளது. இதை தனியார் பள்ளிகள் ஏற்கவில்லை.
கடந்த அரசு அமைத்த கமிட்டியில் மாணவர்கள், பெற்றோர்கள், மாநில அரசு, மெட்ரிக்குலேஷன், சி.பி.எஸ்.சி ஆகிய பாடத்தில் அனுபவம் பெற்ற ஆசிரியர்கள் இடம் பெற்று கருத்துகளை கூறினர். இந்த அரசு அமைத்த கமிட்டியில் கல்வியாளர்கள் அல்லாதவர்கள் எல்லாம் கமிட்டியில் உள்ளனர்.
சமச்சீர் கல்வியை இந்த ஆண்டு அமல்படுத்த முடியாது என்று கமிட்டி அறிக்கையில் கூறி இருப்பது, உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானது.
நடப்பு கல்வி ஆண்டில் சமச்சீர் கல்வியை எப்படி அமல்படுத்த வேண்டும் என்று தான் உச்ச நீதிமன்றம் கமிட்டிக்கு உத்தரவிட்டது. ஆனால் கமிட்டி அதை செய்யாமல் உச்ச நீதிமன்ற உத்தரவை மீறி, சமச்சீர் கல்வியை இந்த ஆண்டு அமல்படுத்த முடியாது என்று கூறி இருப்பது சட்டவிரோதமானது. உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானது. கமிட்டி உறுப்பினர்கள் தங்கள் கருத்துக்களை எழுத்துப்பூர்வமாக அல்லது வாய்மொழியாக தெரிவித்தனாரா என்ற விவரம் இந்த அறிக்கையில் இல்லை. தமிழக அரசு அமைத்த கமிட்டியில் மாநில அரசு பாடத்திட்டத்தை சேர்ந்தவர்கள் யாரும் இடம் பெறவில்லை.
கடந்த மாதம் 23ம் தேதி கமிட்டி வரைவு அறிக்கை தயார் செய்தது. கடந்த மாதம் 29ம் தேதி கமிட்டி இறுதி முடிவு எடுத்துள்ளது. 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்கங்கள் கொண்ட சமச்சீர் பாடத்தை இந்த கமிட்டி குறுகிய காலத்தில் எப்படி ஆராய்ந்து பார்த்திருக்க முடியும். இது இயலாத காரியமாகும். தமிழக அரசு விருப்பத்துக்கு ஏற்ப முன்கூட்டியே அறிக்கையை கமிட்டி தயார் செய்துள்ளது.
கமிட்டி இந்த விவகாரத்தை உண்மையான நோக்கத்துடன் அணுகவில்லை. கமிட்டி உறுப்பினர்கள் ஜெயதேவ், திருமதி ஒய்.ஜி.பார்த்தசாரதியை கல்வியாளர்கள் என்றும் கூற முடியாது. அரசின் விருப்பத்தை நிறைவேற்ற இவர்களை கமிட்டி உறுப்பினர்களாக நியமித்துள்ளனர்.
உச்ச நீதிமன்றத்தின் நோக்கத்தை தோற்கடிக்கும் வகையில் இந்த அறிக்கை உள்ளது. எந்த கல்வியாண்டும் இல்லாமல் நடப்பு கல்வியாண்டில் கடந்த ஒரு மாத காலத்தில் மாணவர்களுக்கு பாடம் நடத்த முடியாத நிலை உள்ளது. இதற்கு அவசர கோலத்தில் அரசு எடுத்த முடிவு தான் காரணம். தனியார் பள்ளிகள் லாபம் சம்பாதிக்க வேண்டும் என்று நோக்கத்தில்தான் சமச்சீர் கல்விக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். இதை ஏற்கக் கூடாது.
உயர் நீதிமன்ற டிவிஷன் பெஞ்சு கடந்த ஆண்டு அளித்த தீர்ப்பை தொடர்ந்து, சமச்சீர் கல்வியை எப்படி அமல்படுத்த வேண்டும் என்று தீர ஆராய்ந்து பார்த்து தான் கடந்த அரசு சமச்சீர் கல்வி புத்தகங்களை அச்சடித்துள்ளது. இந்த அரசு இதை தடுப்பது பொதுமக்கள் பணம் வீணாகிறது. சமச்சீர் பாடப்புத்தகத்தில் கருப்பு, சிவப்பு நிறத்தில் ஒரு படம் இருந்தாலும், சூரியன் படம் இருந்தாலும் இது திமுகவுடையது என்று அரசு கூறுவது தவறானது.
இவ்வாறு வக்கீல் என்.ஜி.ஆர்.பிரசாத் வாதாடினார்.

மூத்த வக்கீல் பி.பி.ராவ்:
சமச்சீர் கல்வி தொடர்பாக கடந்த ஆண்டு சட்டம் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டம் தவறானது. மத்திய அரசின் கட்டாய கல்வி சட்டத்துக்கு எதிரானது. மத்திய அரசின் கட்டாயக் கல்வி சட்டம்தான் மூலச்சட்டம். இந்த சட்டத்துக்கு விரோதமாக சமச்சீர் கல்வி சட்டம் உள்ளது. இந்த மூலச்சட்டத்தை கவனத்தில் கொள்ளாமல், கடந்த அரசு சமச்சீர் கல்வி சட்டத்தை கொண்டு வந்தது.
தேசிய பாடத்திட்டம் வடிவமைப்பு விதி 2005ன்படி சமச்சீர் கல்வி தரமற்றது. இதுதவிர, சமச்சீர் கல்வியில் பல குறைபாடுகள் உள்ளது என்று கல்விக்கான தேசிய கவுன்சில் தமிழக அரசுக்கு கடந்த 2009ம் ஆண்டு நவம்பர் 24ம் தேதி கடிதம் எழுதியது. அதை கடந்த அரசு ஏற்கவில்லை.
இதுதவிர, கடந்த ஆண்டு சமச்சீர் கல்வி வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற டிவிஷன் பெஞ்ச் அரசுக்கு பல பரிந்துரைகள் செய்தது. அதாவது, சமச்சீர் கல்வி புத்தகம் தொடர்பாக ஆய்வு செய்ய புதிய கமிட்டி அமைக்க வேண்டும். அந்த கமிட்டி அங்கீகரிக்கப்பட்ட புத்தகங்கள் பட்டியலை வெளியிட வேண்டும் என்ற பரிந்துரையை கடந்த அரசு அமல்படுத்தவில்லை. இதற்காக, மே மாதம் 15ம் தேதி கெடு விதித்தது. அதை கடந்த அரசு மீறியுள்ளது. புத்தகத்தை தேர்ந்தெடுக்கும் உரிமை, தனியார் பள்ளிகளுக்கு உள்ளது என்று மத்திய அரசின் மூலச்சட்டம் கூறுகிறது. இதை கடந்த அரசு மீறி செயல்பட்டுள்ளது. மூலச்சட்டத்தின் விதிமுறைகளை நடைமுறைப்படுத்தாமல் சமச்சீர் கல்வி சட்டத்தை அமல்படுத்த முடியாது.
சமச்சீர் கல்வி வழக்கு தொடர்பாக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த மேல்முறையீடு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், சமச்சீர் கல்வி தொடர்பாக ஆய்வு செய்ய ஒரு கமிட்டி அமைக்க வேண்டும் என்றும், அந்த கமிட்டி 3 வாரத்தில் உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டது. அதன்படி, தமிழக அரசு கமிட்டியை அமைத்தது.
இந்த கமிட்டி இரவு, பகலாக சமச்சீர் கல்வியை ஆய்வு செய்து அறிக்கையை தாக்கல் செய்தது; இதை ஏற்க வேண்டும்.
சமச்சீர் கல்வி என்பது மாணவர்களுக்கு உதவுவதாக இருக்க வேண்டும். தற்போதுள்ள சமச்சீர் கல்வி மாணவர்கள் வளர்ச்சிக்கு தரமானதாக இல்லை. சமூக நீதி என்ற பெயரில் மனுதாரர்போல சிலர் தரமில்லாத பாடதிட்டத்தை மாணவர்களுக்கு திணிக்கிறார்கள். இது தவறானது. சமச்சீர் கல்வியை நாங்கள் முழுவதுமாக ரத்து செய்யவில்லை. அதை நிறுத்தி வைக்கத்தான் சட்டத்திருத்தம் செய்துள்ளோம். அதை எப்போது வேண்டுமானாலும் அமல்படுத்தலாம்.
முன்னாள் துணைவேந்தர் முத்துக்குமார் கமிட்டி, ஐ.ஏ.எஸ். அதிகாரி விஜயகுமார் கமிட்டி, ஒரு நிலைக்குழுவை ஏற்படுத்த வேண்டும என்று கூறியுள்ளது. ஆனால், கடந்த அரசு எந்த குழுவையும் அமைக்கவில்லை. அந்த நிலைக்கு விதிமுறைகளை வகுக்க வேண்டும் என்று கமிட்டி பரிந்துரை செய்தும் கடந்த அரசு அதை அமல்படுத்தவில்லை.
தமிழக அரசின் சட்டத்திருத்தம் அவசர முடிவு அல்ல. தீர ஆராய்ந்து பார்த்து எடுத்த முடிவுதான். மாணவர்கள் நலன் கருதி நிதானமாக எடுத்த முடிவுதான். சமச்சீர் கல்வி சட்டம் இந்திய அரசியல் சட்டம் பிரிவு 14 மற்றும் 15க்கு எதிரானது. மத்திய அரசின் மூலச்சட்டத்துக்கு விரோதமாக சமச்சீர் கல்வி இருப்பதால் 1 கோடியே 35 லட்சம் மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள். 200 கோடி ரூபாய் வீண் செலவு என குற்றச்சாட்டு மிகைப்படுத்தப்பட்டுள்ளது. எனவே, இந்த வழக்குகளை தள்ளுபடி செய்ய வேண்டும்.
பள்ளிகள் தரப்பு வக்கீல்கள் சிலம்பண்ணன், ஆர்.கிருஷ்ணமூர்த்தி:
பழைய பாடத்திட்டப்படி புத்தகங்கள் அரசு வெளியிடுவது நியாயமானது தான். இதை ரத்து செய்யக்கூடாது.
தலைமை நீதிபதி:
இன்று வெளிவந்த ஒரு ஆங்கில பத்திரிகையில், பழைய பாடதிட்டத்தின்படி புத்தகங்கள் அச்சடிக்கப்படுவதாக செய்தி வெளிவந்துள்ளது. இந்த வழக்கில் தீர்ப்பு வரவில்லை. அப்படி இருக்கும்போது எப்படி புத்தகங்கள் அச்சடிப்பீர்கள். இது நீதிமன்ற அவமதிப்பு செயலாகாதா? தமிழக அரசு ஏன் இந்த நிலை எடுத்துள்ளது? இது வருந்தத்தக்கது.
வக்கீல் பி.பி.ராவ்:
இதுபற்றி எனக்கு தெரியாது.
தலைமை நீதிபதி:
தமிழக அரசு பற்றி உங்களுக்கு தெரியாது. தமிழக அரசின் இந்த நிலை நீதிமன்றத்தை கேலிகூத்தாக்குவதாக உள்ளது. இது கண்டனத்துக்கு உரியது.
வக்கீல் பி.பி.ராவ்:
மாணவர்கள் நலனுக்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புத்தகங்களை அச்சடித்து இருக்கலாம்.
தலைமை நீதிபதி:
புத்தகங்கள் அச்சடிப்பதை ஒப்பு கொள்கிறீர்கள். இதை பதிவு செய்து கொள்கிறோம். இவ்வாறு விவாதம் நடந்தது.
அடுத்த கட்ட விசாரணையை வரும் 11ம் தேதிக்கு தலைமை நீதிபதி இக்பால், நீதிபதி சிவஞானம் ஆகியோர் தள்ளிவைத்தனர்.

No comments:

Post a Comment