ஈரோடு மாவட்ட தி.மு.க. செயலாளரும், முன்னாள் அமைச்சருமான என்.கே.கே.பி.ராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:
ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள மேயர் அறையில் இருந்த முன்னாள் முதல் அமைச்சர் கலைஞர், முன்னாள் துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆகியோரது படங்களை அகற்றி விட்டு முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் படத்தை அ.தி.மு.க.வினர் மாட்டி உள்ளனர். இதன்பிறகு வீரப்பன் சத்திரம் நகராட்சி அலுவலகத்துக்கு சென்ற அ.தி.மு.க.வினர் அங்கு பூட்டப்பட்டு இருந்த தலைவர் அறையை நகராட்சி ஊழியர்களின் உதவியால் திறந்து அங்குள்ள முன்னாள் முதல் அமைச்சர், முன்னாள் துணை முதல்வர் படத்தை அகற்றி விட்டு ஜெயலலிதாவின் படத்தை மாட்டி உள்ளனர். இது போல காசிபாளையம், சூரம்பட்டி நகரசபைகளிலும் நடந்துள்ளது. இந்த செயல்கள் அராஜகமானது. அநாகரீக செயல் ஆகும். 2006 ம் ஆண்டு நடந்த உள்ளாட்சி தேர்தலில் ஈரோடு மாவட்டத்தில் பவானி, கோபி நகரசபை களில் அ.தி.மு.க.வை சேர்ந்தவர்கள் தலைவராக பொறுப்பேற்றனர். அப்போது அவர்களது அறைகளில் அவர்களது கட்சி தலைவர் படம்தான் மாட்டப்பட்டு இருந்தது. அப்போது முதல் அமைச்சராக இருந்த கருணாநிதியின் படம் மாட்டப்படவில்லை. இருப்பினும் அ.தி.மு.க.வினரின் அநாகரீகமான அரசியலை அப்போது தி.மு.க.வினர் எதிர்க்கவில்லை. இதுபோல முன்னாள் முதல் அமைச்சர், முன்னாள் துணை முதல் அமைச்சர் படங்களை அகற்றுவதன் மூலம் மக்கள் மன்றத்தில் இருந்து தி.மு.க.வை அகற்ற முடியாது. அ.தி.மு.க.வினரின் இந்த செயலை கண்டித்து, உள்ளாட்சி அமைப்புகளின் தலைவர்கள் தங்களது அறைகளுக்கு செல்லாமல் அறைக்கு வெளியே டேபிள். நாற்காலி போட்டு அமர்ந்து தங்களது பணிகளை நிறைவேற்றுவார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment