இலங்கையைச் சேர்ந்த மூத்தத் தமிழறிஞரும், இலக்கிய விமர்சகருமான கார்த்திகேசு சிவதம்பி கொழும்பில் உள்ள அவரது இல்லத்தில் மாரடைப்பால் 06.07.2011 அன்று காலமானார். அவருக்கு வயது 79.
1932ம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் உள்ள கரவெட்டி என்னும் ஊரில் பிறந்த அவர், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றினார். அவருக்கு மனைவி ரூபாவதியும், மூன்று மகள்களும் உள்ளனர்.
இவர் சங்க இலக்கியம் முதல் இப்போதைய தமிழ் சினிமா வரை பல்வேறு துறைகளில் ஆய்வுகளை மேற்கொண்டுள்ளார். தமிழின் மிகச்சிறந்த இலக்கிய விமர்சகர்களில் ஒருவராகப் போற்றப்பட்டவர்.
இங்கிலாந்தில் பர்மிங்ஹாம் பல்கலைக்கழகத்தில் "பண்டைத் தமிழகத்தில் நாடகம்' என்ற தலைப்பில் முனைவர் பட்ட ஆய்வை மேற்கொண்டார். "தமிழ்ச் சமூகம் ஒரு புரிதலை நோக்கி', "பண்டைத் தமிழ்ச் சமூகத்தில் நாடகம்', "மதமும் மானுடமும்' "தமிழ்ச் சிறுகதைகள் தோற்றமும் வளர்ச்சியும்', "இலங்கைத் தமிழர் யார், எவர்', "தொல்காப்பியமும், கவிதையும்' "தமிழ்ப் பண்பாட்டில் சினிமா' உள்ளிட்ட 70க்கும் மேற்பட்ட புத்தகங்களை அவர் எழுதியுள்ளார்.
உலகத் தமிழ் மாநாடு உள்பட பல்வேறு மாநாடுகளில் 200 க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்ப்பித்துள்ளார். தஞ்சை உலகத் தமிழ் மாநாட்டில் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர் என்று திருப்பி அனுப்பப்பட்டார். கோவையில் நடைபெற்ற உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் ஆய்வரங்கத்தின் தலைவராக இருந்தார். இந்த மாநாட்டின் மிகப்பெரிய விளம்பரமாக அவரது பங்கேற்பை அப்போதைய தமிழக அரசு செய்தது.
பேராசிரியர் கார்த்திகேசு சிவதம்பியின் மறைவு செய்தி அதிர்ச்சியை தந்தது. 79 வயதான பேராசிரியர் சிவதம்பி கடந்த சில நாட்களாகவே உடல் நலிவுற்றிருந்து நேற்றிரவு மறைந்திருக்கிறார். பேராசிரியர் கா.சிவதம்பி தமிழ்மொழி, இலக்கியத்தில் ஆழ்ந்த புலமை கொண்டவர். திறனாய்வாளர், சமூக வியலாளர், அரசியல் சிந்தனையாளர், பல்துறை புலமை கொண்டவர். இங்கிலாந்து, பின்லாந்து, ஜெர்மனி என்று பல நாடுகளிலும் பணியாற்றி பெருமை சேர்த்தவர். எட்டாவது தஞ்சை உலகத் தமிழ் மாநாட்டில் கலந்து கொள்ள வந்த பேராசிரியர் சிவதம்பி திருப்பி அனுப்பப்பட்டார் என்ற அநீதிக்கு பரிகாரமாக 2000 ம் ஆண்டில் தி.மு.க. அரசு அவருக்கு திரு.வி.க. விருது வழங்கியது. அண்மையில் கோவையில் நடந்த உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் ஆய்வரங்க குழுவிற்கு தலைமை பொறுப்பு வழங்கி தி.மு.க. அரசு அவரை சிறப்பித்தது. செம்மொழி மாநாட்டில் கலந்து கொள்ள தனது உடல் நிலையையும் பொருட்படுத்தாமல் இலங்கையில் இருந்து பெங்களூர் வரை விமானத்தில் வந்து அங்கிருந்து கோவைக்கு காரிலேயே வந்து சென்றார். மாநாடு முடிந்து அவர் விடைபெறும் முன் என் அறைக்கு தேடி வந்து கைகளைப் பிடித்து கண்ணீர் மல்க நன்றி சொன்னார். 70க்கும் மேற்பட்ட நூல்களையும், 200க்கும் மேற்பட்ட கட்டுரைகளையும் எழுதி உலக அறிஞர்களால் போற்றப்பட்ட பேராசிரியர் சிவதம்பியின் மறைவு தமிழ் உலகிற்கு ஈடுசெய்ய முடியாத இழப்பாகும். அவரை பிரிந்து வருந்தும் அவரது துணைவியார் ரூபாவதி சிவதம்பிக்கும், அவரது மகள்களுக்கும் குடும்பத்தாருக்கும் எனது ஆறுதலையும், இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு கலைஞர் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment