முதல்வர் கருணாநிதி மீது பொய்யான குற்றச்சாட்டை சுமத்தி கண்ணியக் குறைவாக தனிநபர் விமர்சனம் செய்து பேசிவரும் ஜெயலலிதா, விஜயகாந்த் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கோரி, திமுக தேர்தல் பணிக்குழு உறுப்பினர்கள் பொன்.முத்துராமலிங்கம், கே.எஸ்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமாரை சந்தித்து புகார் மனு கொடுத்தனர்.
மனுவில் கூறியிருப்பதாவது:
அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா, தனது தேர்தல் பிரசாரத்தில் முதல்வர் கருணாநிதி மற்றும் அவரது குடும்பத்தினர் மீது தனிப்பட்ட முறையில் பொய்யான குற்றச்சாட்டை கூறி தனி நபர் விமர்சனம் செய்து பேசி வருகிறார். சட்ட விரோதமாக சொத்துக்களை வாங்கியதாகவும், தவறான செய்திகளை ஆதாரமற்ற முறையில் பேசி வருகிறார். ஜெயலலிதாவின் இந்த பேச்சு பொதுமக்கள் மத்தியில் தமிழக முதல்வருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் இருக்கும் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் உள்ளது.
இதே போல், தேமுதிக தலைவர் விஜயகாந்தும், ஏற்றுக்கொள்ள முடியாத, நாகரிகமற்ற முறையில் முதல்வர் மீது பொய் குற்றச்சாட்டுக்களை கூறி வருகிறார். இவர்களின் இந்த பேச்சு ஜெயா டிவி, ஜெயா ப்ளஸ் சேனல்களில் பிரசார மேடை என்ற நிகழ்ச்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. தேர்தல் விதிமுறைகளுக்கு முரண்பாடாக, பொய்யான, உள்நோக்கம் உள்ள குற்றச்சாட்டுக்களை கூறிவரும் ஜெயலலிதா, விஜயகாந்த் பேச்சுகள் பொதுமக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி வருகிறது.
எனவே, ஜெயலலிதா மற்றும் விஜயகாந்த் பிரசாரங்களை ஜெயா டிவி, ஜெயா ப்ளஸ் மற்றும் கேப்டன் டிவிகளில் ஒளிபரப்ப உடனடியாக தடை விதிக்க வேண்டும். மேலும், தேர்தல் விதிமுறைகளுக்கு முரணாக பேசி வரும் ஜெயலலிதா, விஜயகாந்த் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜெயா டிவி, ஜெயா ப்ளஸ் மற்றும் கேப்டன் டிவிகளில் ஜெயலலிதா, விஜயகாந்த் பிரசாரங்களை கண்காணிக்க தேர்தல் பார்வையாளர்களுக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
பின்னர் வெளியே வந்த பொன்.முத்துராமலிங்கம் கூறியதாவது:
தேர்தல் விதிமுறைகளுக்கு முரணாக திமுக தலைவரை ஜெயலலிதாவும், விஜயகாந்தும் தனிப்பட்ட முறையில் தனி நபர் விமர்சனம் செய்து பேசி வருகிறார்கள். எந்த விதமான ஆதாரங்களும் இல்லாமல் பொய்யான குற்றச்சாட்டுகளைக் கூறி முரட்டுத்தனமான முறையில் அவர்கள் பிரசாரம் செய்து வருகிறார்கள்.
முதல்வரையும் அவரது குடும்பத்தினரையும் கண்ணியக் குறைவாகவும் பேசி வருகிறார்கள். எனவே, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியும், ஜெயா, ஜெயா பிளஸ், கேப்டன் டிவிகளில் அந்த பிரசாரங்களை ஒளிபரப்ப தடை விதிக்க வேண்டும் என்று தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் மனு கொடுத்தோம். அவர் இது குறித்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.
மேலும், மத்திய அமைச்சர் அழகிரிக்கு தரப்பட்ட பாதுகாப்பை திடீரென்று வாபஸ் பெற்றதையும் தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் தெரிவித்தோம். சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு பொன்.முத்துராமலிங்கம் கூறினார்.
No comments:
Post a Comment