
அதிமுக கூட்டணி கட்சியினரிடம் கருத்து ஒற்றுமை கிடையாது என நடிகர் கே.பாக்யராஜ் தெரிவித்தார்.
உசிலம்பட்டி தொகுதி திமுக வேட்பாளர் எஸ்.ஒ.ராமசாமியை ஆதரித்து திரைப்பட நடிகரும், இயக்குநருமான கே.பாக்யராஜ் பிரசாரம் மேற்கொண்டார். உசிலம்பட்டியில் தேவர் சிலை அருகே திறந்த வேனில் பிரசாரம் செய்த அவர் பேசியதாவது:
கடந்த 5 ஆண்டுகளில், திமுக தலைவர் கருணாநிதி, சொன்னதையும், சொல்லாததையும் செய்துள்ளார். ஆனால் அதிமுக திட்டங்களே இல்லாமல் உள்ளது. மக்களுக்கு என்னென்ன நன்மைகள் செய்ய வேண்டும் என, தீர ஆராய்ந்து இந்த தேர்தலில் முதல்வர் கருணாநிதி, வாக்குறுதி அளித்தார். அந்த வாக்குறுதியில் மிக்ஸ், கிரைண்டர், 35 கிலோ இலவச அரிசி உள்ளிட்ட திட்டங்களை அறிவித்தார். ஆனால் அதிமுகவில், கூட்டணியில் ஏற்பட்ட குழப்பங்களை சரிசெய்ய முடியாமல், திண்டாடி கொண்டிருந்தனர். இந்நிலையில் முதல்வர் கருணாநிதி அறிவித்த வாக்குறுதிகளில், ஒருசில மாற்றங்களை செய்து தேர்தல் அறிக்கையாக ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
அதிமுக கூட்டணி சந்தர்ப்பவாத கூட்டணி. கொள்கை இல்லாத கூட்டணி. இதற்கு எடுத்துக்காட்டு, ஜெயலலிதா அறிவித்த திட்டங்கள் குறித்து , மார்ச்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரிடம் கேட்டபோது, எங்களுக்கு ஒன்றும் தெரியாது என்று கூறுகின்றனர்.
இந்திய கம்யூ. மாநில செயலர் தா.பாண்டியனிடம் கேட்டபோது, இலவச திட்டங்களில் ஈடுபாடு இல்லை என தெரிவித்துள்ளார். ஆகையால் அதிமுக கூட்டணியில் ஒற்றுமை இல்லை. எனவே கருணாநிதியின் ஆதரவு பெற்ற வேட்பாளர் ராமசாமியை அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இவ்வாறு அவர் பேசினார்.
உசிலம்பட்டி ஒன்றிய குழு தலைவர் தங்கப்பாண்டியன், நகர் செயலர் தங்கமலைப்பாண்டி, ஒன்றிய செயலர் அன்புமாறன், கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர்.
இதை தொடர்ந்து திருமங்கலம் தொகுதி திமுக வேட்பாளர் மணிமாறனை ஆதரித்து திருமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் அவர் தேர்தல் பிரசாரம் செய்தார். இதில் வேட்பாளர் மணிமாறன், லதா அதியமான் எம்எல்ஏ, நகர செயலர் நாகராஜன், ஒன்றிய செயலர்கள் தனபாண்டியன், ஆதிமூலம் மற்றும் கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment