வாக்காளர்களை பீதியூட்டும் வகையில், ‘தமிழகத்தில் 234 தொகுதிகளும் பதற்றமானவை’ என்று அறிவித்த டிஜிபி போலாநாத் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக கூட்டணி தலைவர்கள் தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் புகார் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து, ஜனநாயக முற்போக்கு கூட்டணி சார்பில் பொன்.முத்துராமலிங்கம், கே.எஸ்.ராதாகிருஷ்ணன் (திமுக), சதாசிவ லிங்கம் (காங்கிரஸ்), கே.பாலு (பாமக), வன்னிஅரசு (விடுதலை சிறுத்தைகள்), காயல் மகபூப் (இந்திய யூனியன் முஸ்லீம் லீக்) ஆகியோர் கையெழுத்திட்டு 29.03.2011 அன்று, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமாரிடம் புகார் கடிதம் கொடுத்து உள்ளனர்.
அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது:
தமிழக போலீஸ் டிஜிபி போலாநாத் கடந்த 27ம் தேதி எலக்ட்ரானிக் மீடியாவில் பேசும்போது, 234 தொகுதிகளும் பதற்றமானவை.
அதற்கேற்ப துணை ராணுவப்படை வீரர்கள் பாதுகாப்புக்கு நிறுத்தப்படுவார்கள் என்று அறிவித்துள்ளார். இந்த செய்தி, அனைத்து ஆங்கிலம் மற்றும் உள்ளூர் நாளிதழ்களிலும் 28ம் தேதி வெளிவந்துள்ளது.
சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பாகவே, 234 தொகுதிகளும் பதற்றமானது என்பது வழக்கத்துக்கு மாறானது.
தமிழகத்தில் இதுபோன்ற முன்நிகழ்வுகள் ஏதுமில்லை.
234 தொகுதிகளும் பதற்றமானவை என்று சொல்வதற்கான சூழ்நிலையும் இல்லை.
சட்டப்பேரவை தேர்தல் நடப்பதற்கு முன்பாகவே, போலீஸ் டிஜிபியின் இதுபோன்ற திகிலூட்டும் அறிவிப்பு, வாக்காளர் மத்தியில் நிச்சயமாக பீதியை ஏற்படுத்தும். மேலும், அச்சத்தின் காரணமாகவும், மனரீதியாகவும் வாக்காளர்கள் வாக்களிக்காமல் தடுத்து நிறுத்தக்கூடிய நிலை உருவாகும்.
போலீஸ் டிஜிபியின் இந்த அறிவிப்பால் சுதந்திரமாகவும், நியாயமாகவும் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்ற அரசியல் சாசனத்தின் நோக்கம் செயலிழக்க செய்துவிடும்.
மேலும், தமிழகம் பிரச்னைக்குரிய பகுதியாக இருக்கிறது என்று தமிழகத்துக்கு வெளியே வசிக்கும் வாக்காளர்கள் யூகிக்கும் நிலையும் ஏற்படும்.
இதன்காரணமாக, தவறான அறிவிப்பை வெளியிட்ட தமிழக போலீஸ் டிஜிபி மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாங்கள் கேட்டுக் கொள்கிறோம்.
இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment