ஒரு ரூபாய் அரிசியால் தமிழகத்தில் பட்டினி சாவு இல்லை என்று நிதி அமைச்சர் அன்பழகன் பேசினார்.
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டப்பேரவை தொகுதியில் திமுக வேட்பாளர் கே.சி.பழனிச்சாமியை ஆதரித்து, புங்கம்பாடி கார்னரில் நிதியமைச்சர் அன்பழகன் பேசியதாவது:
முதல்வர் கருணாநிதி ஆட்சியில் தமிழகம் பல்வேறு வகையில் வழிகாட்டியாக உள்ளது. பல்வேறு சாதனைகளுக்கு இஸ்லாமியர்கள் உறுதுணையாக உள்ளனர். இந்த அரசு சிறுபான்மை மக்களை மதிப்பதாகவும், அவர்களுக்கு பாதுகாப்பாகவும் உள்ளது. முதல்வர் அமைத்துள்ள கூட்டணி பலமான கூட்டணி.
வறுமையில் உள்ள ஏழைகளுக்கு கிலோ ஒரு ரூபாய் அரிசி மிகவும் பயனுள்ளதாக உள்ளது. இதனால்தான் மற்ற மாநிலங்களில் உள்ளது போல பஞ்சம், பசியால் தமிழகத்தில் தற்கொலை இல்லை. முன்பெல்லாம் இரவு பிச்சை என்று பல பேர் வருவார்கள். ஆனால், இன்று இரவு பிச்சை என்பதே இல்லை. விவசாயிகள் வேதனை தீரும் வகையில் ஸீ7,000 கோடிக்கு கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. இதனால் உணவு பஞ்சம் வராது.
நஞ்சை, புஞ்சை நிலங்களுக்கு வரி குறைக்கப்பட்டுள்ளது. பெண்களுக்கு திருமண நிதியுதவித் திட்டம் ஏழை மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது. இதனால் முதல்வர் கருணாநிதியின் நல்லாட்சிக்கு சான்றாக, சிறப்பான நிர்வாகம், உள்ளாட்சியில் சிறப்பான வளர்ச்சி, நியாய விலை கடைகளில் அத்தியாவசிய பொருட்கள் வழங்குதல், கல்வி வளர்ச்சி என தமிழகத்துக்கு 4 விருது கிடைத்துள்ளது.
தமிழகத்தில் அதிக பாலங்கள், சாலைகள் போடப்பட்டுள்ளது. இந்தியாவில் தமிழகத்தில்தான் அதிக தொழில் வளர்ச்சி பெற்றுள்ளது. மற்றவர்கள் ஆட்சிக்கு வந்தால் அமைதி, ஒழுக்கம், கட்டுப்பாடு தவறி விடும். நாட்டுக்கு பாதிப்பு ஏற்படும்.
இவ்வாறு அன்பழகன் பேசினார்.
No comments:
Post a Comment