தனது ஆட்சி காலத்தில் அரசு ஊழியர்கள் 2 லட்சம் பேரை வீட்டுக்கு அனுப்பியவர் ஜெயலலிதா என துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் 31.03.2011 அன்று விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம், திருவில்லிபுத்தூர், சிவகாசி தொகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டார். சிவகாசியில் திமுக வேட்பாளர் வனராஜாவை ஆதரித்து, ஹவுசிங் போர்டு காலனி, பஸ் ஸ்டாண்ட், செங்கமலநாச்சியார்புரம், திருத்தங்கல் தேவர் சிலை, அண்ணா சிலை, அம்பேத்கர் சிலை, ரத்தினவிலாஸ் பஸ் ஸ்டாப் உள்ளிட்ட இடங்களில் பிரசாரம் செய்தார்.
பிரசாரத்தின் போது, மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
தேர்தலுக்காக மட்டும் பொதுமக்களை தேடிவரவில்லை. எல்லா நேரங்களிலும் உங்களுடன் இருந்து பணியாற்றி வருகிறோம். கடந்த தேர்தலின் போது முதல்வர் கருணாநிதி அறிவித்த தேர்தல் உறுதிமொழிகள் அனைத்தையும் 100 சதவீதம் நிறைவேற்றியுள்ளார். ஒரு கிலோ அரிசி, கலர் டிவி, திருமண உதவித்தொகை, ஆரம்ப பள்ளிகளில் பெண் ஆசிரியர்கள் என பல்வேறு நலத்திட்டங்களை நிறைவேற்றினார்.
கலைஞர் மருத்துவ காப்பீட்டு திட்டம், 108 ஆம்புலன்ஸ் சேவை, கலைஞர் வீட்டுவசதி திட்டம் உள்ளிட்ட சொல்லாத திட்டங்களையும் நிறைவேற்றினார். இந்த திட்டங்கள் தொடரவும், தலைவர் 6வது முறையாக முதல்வராகவும் வாய்ப்பு கேட்டு வந்துள்ளேன். இந்த தேர்தலிலும் முதல்வர் பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளார். வீடுதோறும் கிரைண்டர் அல்லது மிக்சி, மாணவர்களுக்கு லேப்டாப் கம்ப்யூட்டர், முதியோருக்கு இலவச பஸ் பாஸ் உள்ளிட்ட திட்டங்களை அறிவித்துள்ளார். இம்முறை திமுக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையை யார் பார்த்தார்களோ இல்லையோ, ஜெயலலிதா பார்த்து விட்டார். அப்படியே காப்பியடித்து வாசித்து விட்டார்.
ஐந்தாண்டு கால ஆட்சியில் முதல்வர் கருணாநிதி செய்துள்ள அடுக்கடுக்கான சாதனைகளை சொல்லி வாக்கு கேட்கிறார். ஜெயலலிதாவும் இருமுறை முதல்வராக இருந்திருக்கிறார். நாங்கள் வரிசைப்படுத்தியதை போல, அவரால் தனது ஆட்சிக்கால சாதனைகளை சொல்லி வாக்குக் கேட்க முடியுமா? ஒரே கையெழுத்தில் 2 லட்சம் அரசு ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பியது, 10 ஆயிரம் சாலை பணியாளர்களை வேலை நீக்கம் செய்தது, 13 ஆயிரம் மக்கள் நலப்பணியாளர்களை விரட்டியது என இவைதான் அவர் செய்த சாதனை. தனது ஆட்சி காலத்தில் திருமண உதவித்திட்டத்தை நிறுத்தி வைத்தார். திருமணம் என்றால் அவருக்கு பிடிக்காது.
எதிர்கட்சி கூட்டணியில் வேட்பாளரை பிரசாரத்தின் போது ஒரு தலைவரே தாக்குகிறார். இதனை நீங்கள் டிவியில் பாத்திருப்பீர்கள். வேட்பாளர்களுக்கே இந்த நிலை என்றால் பொதுமக்களின் நிலை என்ன என்பதனை யோசிக்க வேண்டும். இதனால்தான் அதிமுக தலைவர் ஜெயலலிதா தனியாக பிரசாரம் செய்கிறார். எதிர்கட்சி வேட்பாளர்கள் அந்த தலைவருடன் பிரசாரத்திற்கு செல்லும் போது ஹெல்மெட் அணிந்து செல்லும்படி கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.
இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.
ராஜபாளையத்தில் திமுக வேட்பாளர் தங்கபாண்டியனை ஆதரித்து டிஎஸ்கே நகர், பொன்நகரம், ஸ்ரீரெங்கபாளையம், ஜவகர் மைதானம், பழைய பஸ் ஸ்டாண்ட், பஞ்சு மார்க்கெட் பகுதிகளில் அவர் பிரசாரம் செய்தார். திருவில்லிபுத்தூரில் வேட்பாளர் துரையை ஆதரித்து பஸ் ஸ்டாண்ட், சர்ச் பாயின்ட் உள்ளிட்ட பகுதிகளில் அவர் பிரசாரம் மேற்கொண்டார்.
No comments:
Post a Comment