உத்திரமேரூர் தொகுதி திமுக வேட்பாளர் பொன்.குமார், காஞ்சிபுரம் தொகுதி பாமக வேட்பாளர் உலகரட்சகன் ஆகியோரை அறிமுகப்படுத்தி, உத்திரமேரூர் பஸ் நிலையம் அருகே துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் 01.04.2011 அன்று காலை பிரசாரம் செய்தார். கூட்டத்துக்கு தா.மோ.அன்பரசன் தலைமை வகித்தார்.
அப்போது, மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
கடந்த ஐந்து ஆண்டு திமுக ஆட்சியின் சாதனைகளை சொல்லி, உரிமையுடன் ஓட்டு கேட்க வந்திருக்கிறேன். எந்த நேரத்திலும் உங்களோடு இருப்போம்; இருக்கின்றோம் என்ற நம்பிக்கையில் ஓட்டு கேட்கிறோம்.
சில தலைவர்கள் இருக்கிறார்கள்; தேர்தல் வந்தால்தான் அவர்களுக்கு தமிழ்நாடு நினைவுக்கு வரும். இல்லையென்றால் கொடநாடு. கடந்த தேர்தலில் அளித்த அனைத்து வாக்குறுதிகளையும் கருணாநிதி நிறைவேற்றியுள்ளார். தேர்தல் அறிக்கையில் சொல்லாததையும் நிறைவேற்றி தந்திருக்கிறார். உலகத்தில் எங்கும் நடக்காத வகையில் வரலாற்று கடமையாற்றியிருக்கிறோம். கடந்த தேர்தல் அறிக்கையை கதாநாயகன் அறிக்கை என்று மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கூறினார். இந்த தேர்தல் அறிக்கையை ‘கதாநாயகி‘ அறிக்கை என்று கருணாநிதி கூறியுள்ளார். இங்கு, முன்னாள் கதாநாயகி, கதாநாயகன் இருக்கிறார்கள். திமுக தேர்தல் அறிக்கையை அப்படியே காப்பியடித்து வெளியிட்டுள்ளனர்.
ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி தர முடியாது என ஜெயலலிதா கூறினார். ஆனால், ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி வழங்கி, நாட்டின் முதுகெலும்பான விவசாயிகளுக்கு 7000 கோடி கடனை தள்ளுபடி செய்தார், கருணாநிதி. பள்ளி மாணவர்களுக்கான முட்டை வழங்கும் திட்டத்தை ஜெயலலிதா நிறுத்தினார். ஆனால், வாரந்தோறும் முட்டை வழங்கும் திட்டத்தை கருணாநிதி கொண்டு வந்தார்.
எனக்கே திருமணம் நடக்கவில்லை. பிறகு எதற்கு திருமண நிதியுதவி திட்டம் என்று அந்த திட்டத்தை நிறுத்தினார் ஜெயலலிதா. ஆனால், திருமண நிதியுதவி திட்டத்தில் 30 ஆயிரமாகவும் மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு பொருளாதார கடனாக இரண்டரை லட்சத்தில் இருந்து 4 லட்சமாக உயர்த்தி தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளோம். அதில் 2 லட்சம் மானியமாக வழங்கப்படும். மகப்பேறு விடுமுறையை 4 மாதமாக அறிவித்துள்ளோம். கலைஞர் காப்பீடு திட்டம் மூலம் 2 கோடியே 72 ஆயிரத்து 755 பேரும் 108 ஆம்புலன்ஸ் மூலம் 8 லட்சத்து 84 ஆயிரம் பேர் பயன்பெற்றுள்ளனர்.
இரண்டு முறை ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா எந்த திட்டத்தையாவது நிறைவேற்றி இருக்கிறாரா? என்றால் இல்லை. அவருக்கு தெரிந்தது எல்லாம் எஸ்மா, டெஸ்மா சட்டம்தான். 10,000 சாலை பணியாளர்கள், 13,000 மக்கள் நலப் பணியாளர்களை வீட்டுக்கு அனுப்பியவர் ஜெயலலிதா. மீண்டும் மக்களுக்கு பணியாற்ற கருணாநிதி முதல்வராக வரவேண்டும். அப்போதுதான் விடுபட்ட திட்டங்கள் நிறைவேற்றப்படும்.
இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.
விழாவில், சுந்தர் எம்எல்ஏ, திமுக சுகுமார், ஒன்றிய செயலாளர்கள் பி.எம்.குமார், இரா.நாகன், முன்னாள் நகராட்சி தலைவர் சன்பிரான்ட் ஆறுமுகம், பாமக குமாரசாமி, சோழனூர் ஏழுமலை, காங்கிரஸ் சின்னப்பா, விடுதலைச்சிறுத்தை புரட்சி மணி, மல்லிமாறன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
சினிமாவில் கதாநாயகன் அரசியலில் வில்லன் - மு.க.ஸ்டாலின் :
சினிமாவில் கதாநாயகன் அரசியலில் வில்லன் - மு.க.ஸ்டாலின் :
‘சினிமாவில் கதாநாயகன்; அரசியலில் வில்லன்’ என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் பற்றி துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
திருப்போரூர் தொகுதி பாமக வேட்பாளர் திருக்கச்சூர் ஆறுமுகத்தை ஆதரித்து துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் 31.03.2011 அன்று நாவலூர், கேளம்பாக்கம், திருப்போரூர், பையனூர், திருக்கழுக்குன்றம் உள்ளிட்ட இடங்களில் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
அப்போது, மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
தேர்தல் வந்தால் மட்டும் உங்களைத் தேடி வராமல், எப்போதும் உங்களுடன் இருக்கும் ஒரே இயக்கம், திமுக. ஒரு சிலர் தேர்தலின்போது வருவார்கள்; பின்னர் காணாமல் போய் விடுவார்கள்.
தமிழ்நாட்டைப்பற்றி பற்றி எப்போதும் கவலைப்படும் ஒரே இயக்கம் திமுக. ஆனால் ஒரு சிலருக்கு தமிழகத்தைப் பற்றி கவலை இல்லை. கொடநாட்டை பற்றித்தான் ஒரே கவலை.
அதிமுக கூட்டணியில் உள்ள தேமுதிக தலைவர் தனது கட்சி வேட்பாளரையே தாக்குகிறார். அவர் சினிமாவில் கதாநாயகன்; அரசியலில் வில்லன். இனிமேல், அந்த நடிகர் பிரசாரம் செய்யும் இடங்களில் அவரது வேட்பாளர்கள் ஹெல்மெட் அணிந்தபடித்தான் வாக்கு கேட்ட வேண்டும் என்ற நிலை உள்ளது. இவரை போன்றவர்கள் ஆட்சிக்கு வந்தால் நாடு குட்டிச்சுவர் ஆகிவிடும். கடந்த 5 ஆண்டுகளில் செய்த சாதனைகள் தொடர திமுகவை ஆதரிக்க வேண்டும்.
கடந்த தேர்தலில் நாங்கள் கொடுத்த வாக்குறுதிகளை நூறு சதவீதம் நிறைவேற்றியதைப்போல், இந்த தேர்தலிலும் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற உள்ளோம். தமிழக மக்கள், கலைஞர் ஒருவர்தான் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் தலைவர் என்ற உண்மையை புரிந்துள்ளனர். அந்த அளவுக்கு திமுக ஆட்சியின் சாதனைகளும், திட்டங்களும் மக்கள் மனதில் ஆழமாக பதிந்துள்ளது. சென்ற இடங்களில் எல்லாம் மக்கள் எழுச்சியுடன் வரவேற்கின்றனர். திமுகவுக்கு வாக்களிக்க தயாராக உள்ளனர்.
இவ்வாறு அவர் பேசினார்.
திருப்போரூர் பாமக வேட்பாளர் திருக்கச்சூர் ஆறுமுகம், அமைச்சர் தா.மோ.அன்பரசன், திமுக ஒன்றிய செயலாளர் ரோஸ் நாகராஜன், பாமக மாவட்ட செயலாளர் ஏகாம்பரம், திமுக இளைஞர்அணி அமைப்பாளர் இதயவர்மன் ஆகியோர் உடன் இருந்தனர்.
No comments:
Post a Comment