கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Thursday, November 4, 2010

சட்டம் ஒழுங்கு சிறப்பாக பராமரிக்கப்படும் மாநிலம் தமிழ்நாடு - முதல்வர் கருணாநிதி பெருமிதம்


இந்தியாவிலேயே சட்டம், ஒழுங்கு சிறப்பாக பராமரிக்கப்படும் மாநிலங்களில் ஒன்று தமிழ்நாடு என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
முதல்வர் கருணாநிதி 03.11.2010 அன்று வெளியிட்ட அறிக்கை:
இந்தியாவிலேயே மிகச் சிறப்பாகச் சட்டம் ஒழுங்கு பராமரிக்கப்படும் மாநிலங்களில் ஒன்று தமிழகம் என்பதில் நாம் அனைவரும் பெருமை கொள்ளலாம். சாதி, மதப் பூசல்கள் தலையெடுக்காத வண்ணம் தமிழக அரசின் தொடர் கண்காணிப்பில் மிகுந்த விழிப்புணர்ச்சியுடன் காவல் துறை சட்டம் ஒழுங்கைப் பராமரித்து வருகிறது.
30&10&2010ல் ராமநாதபுரம் மாவட்டத்தில் நடந்த பசும்பொன் தேவர் குருபூஜை மிகவும் அமைதியாக நடைபெற்றது. சட்டம் ஒழுங்கை காவல் துறையினரும், மாவட்ட நிர்வாகமும் நன்கு பராமரித்து வருவதற்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. கடந்த சில ஆண்டுகளைப் போலவே இந்த ஆண்டும் விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்கள் அமைதிக்குக் குந்தகமின்றி நடத்தப்பட்டதும், சட்டம் ஒழுங்கு சிறப்பாகப் பராமரித்து வருவதற்கு மேலும் ஒரு எடுத்துக்காட்டு.
எதிர்க்கட்சித் தலைவர் ஜெயலலிதாவுக்கு மிரட்டல் கடிதங்கள் வருவதாகக் கூறி 18&10&2010ல் மதுரையில் திட்டமிட்டபடி அவரது பொதுக் கூட்டத்தை நடத்த விடாமல், தடுத்திட முயற்சிப்பதாகவும், அவரது பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்படும் என்றும் தொடர்ந்து அவரது கட்சியினர் அறிக்கைகள் விடுத்தபோதும் கூட காவல்துறையினரின் சிறப்பான நடவடிக்கைகளினால் 18&10&2010ல் எதிர்கட்சித் தலைவர் எந்தவித அச்சுறுத்தலும் இன்றி மதுரை சென்று கூட்டத்தை நடத்தி பாதுகாப்பாகச் சென்னைக்குத் திரும்பினார் என்பதை நாடே அறிந்துள்ளது.
பொருளாதார, சமூக மாற்றங்களும், தகவல் தொழில்நுட்ப முன்னேற்றங்களும் மிக வேகமாக ஏற்பட்டு வரும் இன்றைய சூழ்நிலையின் காரணமாக; புதிய புதிய முறையில் பல்வேறு குற்ற நிகழ்வுகள் நடக்கின்றன. எனினும், காவல் துறையினரின் தீவிர நடவடிக்கையால் மிகப் பெரும்பாலான குற்றங்களில், குற்றவாளிகள் உடனடியாகக் கண்டுபிடிக்கப்பட்டு தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.
உதாரணத்திற்கு 2009ம் ஆண்டில் நடந்த 1644 கொலைக் குற்றங்களில், 1562 இனங்களில் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். மொத்த குற்ற நிகழ்வுகளை கணக்கில் எடுத்துக் கொண்டால்கூட அ.தி.மு.க. ஆட்சியில் 2004ம் ஆண்டில் மிக உயர்ந்த எண்ணிக்கையில் 8 லட்சத்து 2 ஆயிரத்து 817 குற்றங்கள் நிகழ்ந்துள்ள நிலையில் திமுக ஆட்சியில், கடந்த 2009ம் ஆண்டில் 7 லட்சத்து 17 ஆயிரத்து 957 குற்றங்கள் நிகழ்ந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
மக்கள்தொகை அடிப்படையில் குற்ற நிகழ்வுகள் நடக்கும் விகிதாசாரத்தை எடுத்துக் கொண்டால்கூட பிற மாநிலங்களை விடக் குறைந்த அளவில் குற்றங்கள் நடக்கும் மாநிலமாகத் தமிழகம் உள்ளது. உதாரணமாக, 2008ம் ஆண்டில் கேரள மாநிலத்தில் ஒரு லட்சம் மக்கள்தொகைக்கு 322 குற்றங்கள் நிகழ்ந்தன. டெல்லி மாநிலத்தில் ஒரு லட்சம் மக்கள் தொகைக்கு 286 குற்றங்கள் நிகழ்ந்தன. ஆனால் தமிழகத்தில் ஒரு லட்சம் மக்கள் தொகைக்கு 266 குற்றங்கள் நிகழ்ந்துள்ளன.
2008ம் ஆண்டில் சென்னையில் 11 ஆயிரத்து 829 நிகழ்வுகள் நடந்துள்ளன. அதே நேரத்தில் பெங்களூரில் 29 ஆயிரத்து 664 நிகழ்வுகளும், மும்பையில் 32 ஆயிரத்து 770 நிகழ்வுகளும், கொல்கத்தாவில் 13 ஆயிரத்து 5 நிகழ்வுகளும், டெல்லியில் 49 ஆயிரத்து 350 நிகழ்வுகளும் நடந்துள்ளன.
முக்கிய நகரங்களில் நிகழ்ந்த கொலைக் குற்றங்களைப் பார்ப்போமேயானால், சென்னையில் 2008ம் ஆண்டில் 100 கொலைக் குற்றங்களும், டெல்லியில் 554 கொலைக் குற்றங்களும், பெங்களுரில் 253 கொலைக் குற்றங்களும், மும்பையில் 210 கொலைக் குற்றங்களும் நடந்துள்ளன. மற்ற மாநிலங்களை ஒப்பிட்டுப் பார்க்கும்போது 2009ம் ஆண்டில் தமிழகத்தில் 573 கற்பழிப்புக் குற்றங்கள் நிகழ்ந்த அதே நேரத்தில் ஆந்திர மாநிலத்தில் 1,257 குற்றங்களும், மராட்டிய மாநிலத்தில் 1,558 குற்றங்களும், மேற்கு வங்கத்தில் 2,263 குற்றங்களும் நடந்துள்ளன.
அண்மைக் கால குற்ற நிகழ்வுகளை எடுத்துக்கொண்டால்கூட, குற்றநிகழ்வுகளில் குற்றவாளிகள் உடனடியாகக் காவல்துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர். ஒரு சில நிகழ்வுகளைச் சுட்டிக் காட்டிட விரும்புகிறேன்.
20&11&2008ல் டாமின் நிறுவன முன்னாள் தலைவர் சரவணன் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் கொலை செய்யப்பட்ட வழக்கில் எந்தவிதமான தடயங்களும் உடனடியாகக் கிடைக்காத சூழ்நிலையிலும், குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு, பொருட்கள் மீட்கப்பட்டு, நீதிமன்ற விசாரணை முடிக்கப்பட்டு, 3 ஆயுள் குற்றவாளிகளுக்கும் தலா 3 ஆயுள் தண்டனைகள் பெற்றுத்தந்தது மிகவும் பாராட்டக்கூடியதாகும்.
முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர். உறவினர் விஜயன் 4&6&2008ல் கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகளை 8&9&2008லும் 30&4&2009ல் திண்டுக்கல்லைச் சேர்ந்த மருத்துவர் பாஸ்கரன் என்பவர் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில், 23&8&2009லும் கொலையாளிகளை கைது செய்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
அரியலூர் காங்கிரஸ் சட்டப் பேரவை உறுப்பினரின் தம்பி மீது கொண்ட முன் விரோதம் காரணமாக, அவரது மகன் தர்மதுரை என்ற மாணவனை 11&6&2010ல் கடத்திய இரண்டு குற்றவாளிகளில் ஒருவன் 14&6&2010ல் கைது செய்யப்பட்டு, கடத்தப்பட்ட சிறுவனையும், கடத்தலுக்கு பயன்படுத்தப் பட்ட வாகனத்தையும் காவல் துறை மீட்டது. மற்றொரு குற்றவாளியும் வேறொரு வழக்கில் சென்னையில் கைது செய்யப்பட்டான்.
3&7&2010ல் சென்னை மாம்பலத்தில் துணிக்கடை ஊழியர்களை வழி மறித்து தாக்கி அவர்களிடமிருந்து ரூ.81 லட்சத்து 20 ஆயிரத்தை கொள்ளையடித்துச் சென்ற வழக்கில் 15&7&2010ல் குற்றவாளிகள் 10 பேரைக் கண்டுபிடித்துக் கைது செய்து, அவர்களிடமிருந்து ரூ.39 லட்சத்து 37 ஆயிரத்து 500 மீட்டுள்ளது காவல்துறை.
17&7&2010ல் நடந்த சிறுவன் ஆதித்யா கொலை வழக்கில் குற்றவாளி 4 நாட்களுக்குள் கைது செய்யப்பட்டுள்ளார். 21&8&2010ல் மதுரை மாநகரில், மாணிக்கம் செட்டியார் என்பவரைக் கொலை செய்து, 9 கிலோ தங்கம் மற்றும் 1,274 கிராம் வெள்ளி மற்றும் ரூ. 12 ஆயிரத்தை கொள்ளையடித்துச் சென்ற குற்றவாளிகளை 24&8&2010ல் அதாவது 42 மணி நேரத்திற்குள் கைது செய்து அவர்களிடமிருந்து ரூ. 1 கோடியே 60 லட்சம் மதிப்புடைய களவு போன பொருள்கள் மீட்கப்பட்டன.
25&10&2010ல் விழுப்புரம் மாவட்டத்திலிருந்து சுமார் 11 கிலோ தங்க நகைகளை எடுத்துக்கொண்டு திருவண்ணாமலைக்குச் சென்றபோது வாகனம் வழிமறிக்கப்பட்டு நகைகள் அனைத்தும் கொள்ளையடிக்கப்பட்டது. தமிழகம் முழுவதும் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டதன் காரணமாக 2 மணி நேரத்தில் திண்டிவனத்தில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு உடனடியாக 8 கிலோ தங்க நகைகளும் மீட்கப்பட்டன என்பது காவல்துறையின் துரித நடவடிக்கைக்கு ஒரு எடுத்துக்காட்டாகும்.
கடத்தல், வழிப்பறி, பொருளாதாரக் குற்றங்கள், கட்டப்பஞ்சாயத்து போன்ற பல்வேறு குற்றங்களில் குழுவாக ஈடுபடுபவர்களின் நடவடிக்கைகளைக் கண்காணித்து, இம்மாதிரியான குற்றங்களைத் தடுக்கும் நோக்கத்துடன், காவல்துறையில் தனியாக ஒரு நுண்ணறிவுப் பிரிவு என்ற சிறப்புப் பிரிவு இந்த ஆண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இதன்பயனாக, பல்வேறு பெரும் குற்றங்கள் நிகழாமல் தடுக்கப்பட் டுள்ளன.
சட்டவிரோதச் செயல்கள் மற்றும் குற்றங்களில் ஈடுபடும் கொடும் குற்றவாளிகள் 2009ம் ஆண்டில் 2220 பேரும், 2010ம் ஆண்டில் இதுவரை 1808 பேரும் குண்டர் தடுப்புக்காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஜெயலலிதா தமிழகத்தின் முதலமைச்சராக இருந்தபோது மயிலாடுதுறையில் காங்கிரஸ் தலைவர் குரு ஞானசேகரன் படுகொலை, முன்னாள் அமைச்சர் சுப்புலட்சுமி ஜெகதீசன் சம்பந்திகள் இரண்டு பேர் படுகொலை, வேலூர் நகைக் கடையைக் கொள்ளையடித்து மூன்று பேர் சுட்டுக் கொலை, மயிலாடுதுறை கல்லூரி மாணவி கற்பழித்துக் கொலை, சென்னையில் தலித் மக்கள் முன்னணித் தலைவர் பாலு என்பவர், அவர் மகன் கண்ணெதிரே படுகொலை, செய்யாறில் கதிர்வேலு என்ற தொழிலாளி அடித்துக் கொலை, சசி என்ற சசிகுமார் என்ற சினிமா ஸ்டண்ட் நடிகர் வெட்டிக் கொலை, திண்டுக்கல் நிதி நிறுவன அதிபரின் மனைவி பூங்கோதையும் அவரது மகளும் கழுத்தறுக்கப்பட்டு படுகொலை, அம்பத்தூர் அருகே பிரகாஷ் என்ற வாலிபர் வெட்டிப் படுகொலை, காரப்பாக்கத்தில் கோயிலில் புகுந்து பூசாரி உட்பட இருவர் படுகொலை திருப்பத்தூர் அருகே பெட்ரோல் பங்க் உரிமையாளர் மணி என்ற கழகத் தோழர் சுட்டுப் படுகொலை, திருமுல்லைவாயிலைச் சார்ந்த சப்இன்ஸ்பெக்டர் மகன் விஜி வர்கிஸ் நடுரோட்டில் வெட்டிக் கொலை, அம்பத்தூர் கல்லூரி மாணவர் தாமோதரன் படுகொலை, சென்னை சேத்துப்பட்டில் கூலித் தொழிலாளி வெங்கடபதி குத்திக் கொலை, கொடைக்கானலில் வக்கீல் சுதாகரன் படுகொலை, சூனாம்பேட்டில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த கோவலன் வெட்டிக் கொலை என ஜெயலலிதா ஆட்சியில், 2003ம் ஆண்டு மட்டும், சங்கிலித் தொடர் போன்ற படுகொலை நிகழ்ச்சிகள் நடந்தபோது எதுவும் சொல்லாமல், இப்போது மட்டும் வரிந்து கட்டிக் கொண்டு சொல்ல என்ன காரணம்? நடுநிலையாளர்கள் சிந்தித்துப் பார்க்க மாட்டார்களா?
ஜெயலலிதா ஆட்சியில் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் மேலாளர் சங்கரராமன் 3&9&2004ல் கொலை செய்யப்பட்டு அந்த வழக்கில் ஜெயேந்திரர், விஜயேந்திரர், அவரது சகோதரர் ரகு, மடத்தின் மேலாளர் சுந்தரேச அய்யர், அப்பு, கதிரவன், ரவி சுப்பிரமணியன் உட்பட 25 பேர் கைது செய்யப்பட்ட போதும்; சுந்தரேச அய்யர், அப்பு உட்பட 11 பேர் மீதும் குண்டர் சட்டம் ஏவப்பட்ட போதும்; வேடிக்கை பார்த்துக் கொண்டு தானே இருந்தார்கள்?
இனியாவது நடுநிலை நாளேடுகள் நாட்டு மக்களுக்குத் தேவையான ஆக்கப் பூர்வமான செய்திகளையும், எந்த ஒரு கட்சியையும் சாராமல், விருப்பு வெறுப்பின்றி அரசியல் குறித்த செய்திகளையும், நாகரிக கலாச்சாரக் கேடுகளுக்குத் துணை புரியாத செய்திகளையும், நல்லெண்ணத்தையும், நற்செயல்களையும் ஊக்குவித்து உற்சாகப்படுத்தும் செயல்களையும் வெளியிடுவது குறித்து சிந்திப்பார்கள் என்று நம்புகிறேன்.
இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.

No comments:

Post a Comment