தமிழ் இனத்தை வாழவைக்கக்கூடிய இன உணர்வுக்கழகமாக, தி.மு.க. இருக்கின்ற காரணத்தால், எந்த நெருக்கடியிலும், இந்த இயக்கத்தை மக்கள் காப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு'' என்று சென்னையில் நடைபெற்ற இளைஞர் எழுச்சி விழாவில் முதல் அமைச்சர் கருணாநிதி பேசினார்.
துணை முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலினின் பிறந்த நாளான மார்ச் 1ந் தேதியை, தி.மு.க.வினர், இளைஞர் எழுச்சி நாளாக கொண்டாடுகிறார்கள். அதன்படி, தென் சென்னை மாவட்ட தி.மு.க. சார்பில், சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில், இளைஞர் எழுச்சி நாள் விழா 28.02.2011 அன்று நடைபெற்றது.
விழாவில், 20,000 மகளிருக்கு, 200 வாஷிங் மிஷின், 400 மிக்சி, 400 தையல் எந்திரம், 1200 ரைஸ் குக்கர், 1600 எவர்சில்வர் அண்டா, 1600 எவர்சில்வர் டிபன்கேரியர், 400 கிரைண்டர், மூன்று சக்கர சைக்கிள்கள் 20, 12000 ஹாட்பாக்ஸ் என நலத்திட்ட உதவிகளுக்கான பொருட்கள் விழா மேடையில் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தன.
நலத்திட்ட உதவிகளை முதல் அமைச்சர் கருணாநிதி வழங்கி பேசியதாவது:
தம்பி ஸ்டாலினுடைய பிறந்த நாள் விழா இளைஞர் எழுச்சி நாளாக ஆண்டுதோறும் கொண்டாடப்படுகின்ற வகையில் இன்றைக்கும் நம்முடைய தென் சென்னை மாவட்ட திராவிட முன்னேற்ற கழகத்தால், குறிப்பாக மாவட்ட கழகச் செயலாளர் தம்பி அன்பு முயற்சியால் சீரோடும், சிறப்போடும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.
இந்த விழா நாளில் நானும் கலந்து கொண்டு உங்களுடைய தொகுதியினுடைய செல்வமாக வளர்ந்து உங்களுக்காக அரும்பணிகள் பல ஆற்றி, இன்று தமிழகத்தினுடைய துணை முதல் அமைச்சராகவும் பொறுப்பேற்று தொண்டாற்றிக் கொண்டிருக்கின்ற ஸ்டாலின் அவர்களை நான் மகனாகப் பெற்றிருக்கிறேன் என்பதை விட நீங்கள் எல்லாம் உங்கள் தொகுதியினுடைய பிரதிநிதியாகப் பெற்றிருக்கிறீர்கள் என்பதில் நீங்கள் அடைவது போன்ற மட்டற்ற மகிழ்ச்சியை நானும் அடைகிறேன்.
இந்த நாளில் தென் சென்னை மாவட்ட கழகத்தின் சார்பில் உங்களில் பலருக்கு மகளிருக்கு, ஆடவருக்கு பயன்படக் கூடிய வகையில் ஏறத்தாழ இருபதாயிரம் பரிசுப் பொருள்களை வழங்கியுள்ள இந்த நிகழ்ச்சி என்னை மிக மிக வியப்பிலே மாத்திரமல்ல, மகிழ்ச்சியிலும் ஆழ்த்துகின்ற நிகழ்ச்சியாகும்.
வெயில் கனலை வீசுகின்ற நேரத்திலே கூட இந்த நிகழ்ச்சியில் நான் அமர்ந்திருப்பது எனக்கு மிகவும் குளிர்ச்சியாக இருக்கிறது என்றால், அதற்கு காரணம் உங்களுக்கு வழங்கப்படுகின்ற பரிசுப் பொருள்கள், உங்களுக்குப் பயன்படப் போகும் இந்தப் பொருட்கள் அதைப் பார்த்து நீங்கள் அடைகின்ற அந்த மகிழ்ச்சி இவைதான் அதற்கு காரணம்.
பொதுவாக எல்லோருக்கும் பிறந்த நாள் வருகிறது. ஆனால் சிலருடைய பிறந்த நாள்தான் போற்றப்படுகிறது, புகழப்படுகிறது, பாராட்டப்படுகின்றது. எல்லோராலும் வாழ்த்தப்படுகின்றது. அப்படி வாழ்த்தப்படுகின்ற அந்த வாய்ப்பை எல்லோரும் பெற முடிவதில்லை.
அதனைப் பெற்றுள்ள நம்முடைய கழகத்தினுடைய பொருளாளர் நான் அவரை துணை முதல் அமைச்சர் என்று அழைப்பதை விட அவர் இன்றைக்கு வகிக்கின்ற தி.மு.க. பொருளாளர் என்ற பதவி தான் சிலாக்கியமான பதவி, பாராட்டத்தக்க பதவி என்ற காரணத்தால், பொருளாளர் என்று அழைக்கிறேன். அது மாத்திரமல்ல, நான் பார்த்த பதவி அது.
பேரறிஞர் அண்ணாவின் தலைமையில் தி.மு.க. பொருளாளராக இருந்து, இந்த இயக்கம் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக 67 ம் ஆண்டு நடைபெற்ற பொது தேர்தலுக்கு 11 லட்சம் ரூபாய் தேர்தல் நிதியை அண்ணாவிடம் நான் கொடுத்த போது, அவர் நம்பக்கூட இல்லை, பதினோரு லட்சமா, நமக்கா, நம்முடைய கழகத்திற்கா? இந்த மக்கள் தந்ததா? என்று விழிகளை அகல விரித்துக்கேட்டார்.
ஆனால், இன்றைக்கு தி.மு.க.வை வெற்றி பெறச் செய்ய தி.மு.கழகத்திற்கு இன்னும் பல வெற்றிகளைத் தேடித்தர, சாதாரண மக்கள், பாட்டாளி மக்கள், ஏழை, எளிய மக்கள், தொழிலாளத் தோழர்கள், அன்றாடம் காய்ச்சிகளாக இருந்தாலும் அவர்களும் கூட தங்களால் இயன்றதைத்தந்து, இந்த இயக்கத்தை வளர்ப்பதற்குத் தயாராக இருக்கிறார்கள்.
காரணம் இது அவர்களை வளர்க்கின்ற இயக்கம். அவர்களால் வளர்க்கப்பட்ட இயக்கம். அவர்களை வளர்க்கின்ற இயக்கம் என்ற காரணத்தால், இப்போது மாத்திரமல்ல, எதிர் காலத்திலும் தமிழ் இனத்தை வாழ வைக்கக் கூடிய இன உணர்வுக்கழகமாக இருக்கின்ற இந்த இயக்கத்தை நீங்கள் நிச்சயம் எந்த விதமான நெருக்கடியிலும் காப்பீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. அந்த நம்பிக்கையோடு தான் உங்களை நான் அன்றாடம் சந்தித்துக் கொண்டிருக்கின்றேன். ஒரு முதல் அமைச்சராக அல்ல உங்களை நான் சந்திக்கும் போதெல்லாம், உங்களுடைய தொண்டர்களிலே ஒருவனாகத்தான் நான் என்னைக் கருதிக்கொண்டு உங்களுக்காகப் பாடுபடுகிறேன். உங்களுக்காக உழைக்கிறேன்.
No comments:
Post a Comment