கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Wednesday, March 2, 2011

மகிழ்ச்சிக்குரிய பட்ஜெட்: கலைஞர்


தமிழக அரசின் நெடுநாளைய கோரிக்கையான சாதிவாரி கணக்கெடுப்பை வரும் ஜுன் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை நடத்த இருப்பதாக அறிவித்துள்ளது மகிழ்ச்சிக்குரியது என்று மத்திய பட்ஜெட் பற்றி முதல் அமைச்சர் கருணாநிதி கருத்து தெரிவித்துள்ளார்.


இதுகுறித்து முதல் அமைச்சர் கருணாநிதி 28.02.2011 அன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:


மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி இந்தியாவின் ஒட்டுமொத்த சமூகப் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் 2011 2012 ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை வகுத்துள்ளார். பலதரப்பு மக்களும் பயன்படத்தக்க வகையில் தீட்டப்பட்டுள்ள இந்த வரவு செலவுத் திட்டத்தை வகுக்க அவருக்கு வழிகாட்டியுள்ள பிரதமர் மன்மோகன் சிங்கையும், ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவர் சோனியாகாந்தியையும் பாராட்டுகிறேன்.


உலகஅளவிலான பொருளாதார தேக்க நிலையின் பாதிப்பு இந்திய பொருளாதாரத்தை அதிக அளவில் தாக்காதவண்ணம் பல சிறப்பான நடவடிக்கைகளை எடுத்து, நாட்டின் பொருளாதார வளர்ச்சியை மீண்டும் ஒரு சீரான வளர்ச்சிப்பாதையில் கொண்டு செல்லக்கூடியதாக இந்த வரவு செலவுத் திட்டம் அமைந்துள்ளது.


விவசாயத் துறைக்கு முக்கியத்துவம்

முதன்மைத் துறைகளில் முக்கியமான துறையான விவசாயத் துறையின் உற்பத்தியை ஊக்குவிக்கவும், விளைப் பொருட்களின் சேதாரத்தைக் குறைக்கவும், உணவுப் பதப்படுத்துவதை ஊக்குவிக்கவும், விவசாயப் பணிகளுக்கு கடனுதவி தடையின்றி கிடைக்கவும் பல்வேறு சிறப்பான திட்டங்கள் இந்த நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளன.


தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டத்திற்கான ஒதுக்கீட்டினை ரூ.6,755 கோடியிலிருந்து ரூ.7,860 கோடியாக உயர்த்தியும், 60 ஆயிரம் கிராமங்களில் பருப்பு வகைகள் பயிரிடுவதை ஊக்குவிக்க ரூ.300 கோடி நிதி ஒதுக்கீடு செய்தும், ரூ.300 கோடி செலவில் 60 ஆயிரம் ஹெக்டேர் நிலத்தில் எண்ணெய் பனைப் பயிர்களை பயிரிடுவதற்கான திட்டத்தினை அறிவித்துள்ளதும், காய்கறிகள் உற்பத்தியை ஊக்குவிக்க ரூ.300 கோடி ஒதுக்கீடு செய்தும், வறட்சிப் பகுதிகளில் விவசாயத்தை மேம்படுத்த, கம்பு, சோளம், கேழ்வரகு போன்ற பயிர்களின் உற்பத்தியை ஊக்கப்படுத்த ரூ.300 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது போன்ற பல்வேறு திட்டங்களை மத்திய அரசு அறிவித்துள்ளது வரவேற்கத்தக்கது. இருந்தாலும் ஒதுக்கீடு செய்துள்ள தொகை இந்திய நாட்டின் அளவில் போதாது என்பதால், இந்தத் தொகை மேலும் உயர்த்தப்படலாம் என்று எண்ணுகிறேன்.


விலையைக் கட்டுப்படுத்த உதவும்


விவசாயப் பொருட்களின் விலையேற்றம் உள்ள இந்த நேரத்தில், இந்தத் திட்டங்களால் உற்பத்திப் பெருக்கம் ஏற்பட்டு உணவுப் பொருட்களின் விலையைக் கட்டுப்படுத்துவதற்கு உதவியாக இருக்கும். மேலும் விவசாயிகளுக்கான பயிர்க் கடன் ரூ.3.75 லட்சம் கோடியிலிருந்து ரூ.4.75 லட்சம் கோடியாக உயர்த்தியுள்ளதும் முறையாக கடனை திருப்பிச் செலுத்துபவர்களுக்கு ஏற்கனவே இருந்து வந்த வட்டிச் சலுகையை 2 சதவீதத்திலிருந்து 3 சதவீதமாக உயர்த்தியுள்ளதும் பாராட்டத்தக்க அம்சங்களாகும்.


தமிழக அரசு முறையாகக் கடனைத் திருப்பிச் செலுத்தும் விவசாயிகளுக்கு வட்டியில்லா பயிர்க் கடனை வழங்கி வந்தாலும் மத்திய அரசின் பயிர் கடனுக்கான இச்சலுகையை வரவேற்கிறேன்.


நெசவாளர்களுக்கு விடிவு காலம்


கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களுக்கு நபார்டு வங்கியின் மூலம் ரூ.3 ஆயிரம் கோடி நிதி உதவி வழங்குவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இச்சலுகையினால் கடனைத் திரும்பச் செலுத்த இயலாத கைத்தறி நெசவாளர்களுக்கு ஒரு விடிவு காலம் ஏற்படும்.


மேலும், நபார்டு வங்கியின் மூலம் வழங்கப்படும் ஊரக அடிப்படை வசதி கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்திற்கான ஒதுக்கீடு ரூ.16 ஆயிரம் கோடியிலிருந்து ரூ.18 ஆயிரம் கோடியாக உயர்த்தி, சேமிப்புக் கிட்டங்கி வசதியை மேம்படுத்துவதற்காக இந்தக் கூடுதல் நிதி வழங்கியுள்ளது, விவசாயப் பொருட்கள் முறையாக சேமிக்கப்பட்டு விலையைக் கட்டுப்படுத்துவதற்கு ஒரு வாய்ப்பாக அமையும்.


முதலீட்டை அதிகரிக்கும்


மேலும் 15 பெரிய அளவிலான உணவைப் பதப்படுத்தும் பூங்காக்கள், குளிர்சாதன வசதிக்கான திட்டங்கள் போன்ற பல்வேறு திட்டங்கள் மற்றும் தீவனப் பயிர்கள் உற்பத்தியைப் பெருக்குவதற்கான திட்டங்கள் போன்றவை முதன்மைத் துறையான விவசாய, கால்நடைத் துறைகளின் வளர்ச்சிக்கு குறிப்பாக கிராமப்புற வளர்ச்சிக்கு பெரிதும் உதவும்.


தொழிற்சாலைகளின் கட்டமைப்பை மேம்படுத்துவதற்கு சென்ற ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு நிதி ஒதுக்கீடு 23.3 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது பாராட்டத்தக்க ஒன்றாகும். தனியார் நிறுவனங்களுடன் இணைந்து உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு மத்திய அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் பாராட்டத்தக்கது ஆகும். மேலும், உள்கட்டமைப்பு வசதிகளின் முதலீட்டை அதிகரிக்க ரூ. 30 ஆயிரம் கோடி அளவிற்கு வரிச்சலுகை பெற்ற கடன் பத்திரங்கள் அரசு வழங்க உள்ளதாக தெரிவித்திருப்பது இத்துறையில் முதலீட்டை அதிகரிக்க உதவும்.


சமூக நலத் திட்டங்களுக்காக...


நகர்ப்புறத்தில் உள்ள ஏழை எளிய மக்களின் வீட்டுவசதி மேம்பாட்டினை தமிழக அரசு ஒரு முக்கிய நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. தற்போது மத்திய அரசு அறிவித்துள்ள ஒரு சதவீதம் வட்டிச் சலுகை மற்றும் ராஜீவ் நினைவுக் குடியிருப்புத் திட்டத்தின் கீழ் உருவாக்கப்படும் அடமான மீட்பு நிதி போன்றவற்றால் ஏழைகள் பயன்பெறும் நகர்ப்புற வீட்டு வசதித் திட்டங்களை மாநில அரசுகள் விரைவாகச் செயல்படுத்த இயலும்.

சமூக நலத் திட்டங்களுக்காக மத்திய அரசின் ஒதுக்கீடு இந்த ஆண்டு 17 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதற்காக 36.4 சதவீதம் மொத்த திட்ட ஒதுக்கீட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது பாராட்டத்தக்கது ஆகும்.


கல்வி வளர்ச்சி


அங்கன்வாடி பணியாளர்களுக்கும், உதவியாளர்களுக்கும் சம்பளம் இரட்டிப்பாக உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல் ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவர்களுக்கும் முதன்முறையாக ஒன்பதாம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்புகளுக்கு கல்வி உதவித் தொகை இந்த ஆண்டு முதல்முறையாக வழங்கப்பட உள்ளது போன்றவை வரவேற்கத்தக்கது. கல்வித் திட்டங்களுக்காக குறிப்பாக சர்வ சிக்ஷா அபயன் திட்டத்திற்காக சென்ற ஆண்டைக் காட்டிலும் 40 சதவீதம் கூடுதலாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது, கல்வி வளர்ச்சிக் குறியீடுகளை மாநிலங்கள் விரைவாக எட்டுவதற்கு மிக உதவியாக இருக்கும்.


மக்கள் நலத் திட்டங்களுக்கான ஒதுக்கீடு 20 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. முதியோர் உதவித் தொகை பெறுவதற்கான வயதுத் தகுதி 65 ல் இருந்து 60 ஆக குறைக்கப்பட்டுள்ளதும், 80 வயதிற்கு மேற்பட்டுள்ளவர்களுக்கு உதவித் தொகை ரூ.200 ல் இருந்து ரூ. 500 ஆக உயர்த்தப்பட்டுள்ளதையும் வரவேற்கிறேன்.


சாதி வாரி கணக்கெடுப்பு


வரிச் சலுகையைப் பொறுத்தவரை தனிநபர் வருமான வரிவிலக்கு உச்சவரம்பு ஒரு லட்சத்து 60 ஆயிரத்தில் இருந்து ஒரு லட்சத்து 80 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. வயது முதிர்ந்தோருக்கான சலுகை பெறும் அதிகபட்ச வயது 65 லிருந்து 60 ஆக குறைக்கப்பட்டுள்ளதும், அவர்களுக்கான வருமான உச்சவரம்பு ரூ.21/2 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளதும், தனிநபர்களுக்கு ஓரளவுக்கு நிவாரணம் கிடைக்கும் என நம்புகிறேன்.

மேலும் 80 வயதைக் கடந்த முதியோருக்காக ஒரு புதிய வகுப்பு உருவாக்கப்பட்டு அவர்களுக்கான வருமான உச்சவரம்பு ரூ.5 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. தமிழக அரசின் நெடுநாளைய கோரிக்கையான சாதிவாரி கணக்கெடுப்பை வரும் ஜுன் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை நடத்த இருப்பதாக அறிவித்துள்ளது மகிழ்ச்சிக்குரியது. இதற்காக எனது நன்றியினை மத்திய அரசுக்குத் தெரிவிக்கக் கடமைப்பட்டுள்ளேன். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment