ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசிலிருந்து விலகுவதென்ற கலைஞரின் துணிச்சலான முடிவை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வரவேற்கிறது என்று அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் பாராட்டு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
திராவிட முன்னேற்றக் கழகத்தின் உயர்நிலை செயல்திட்டக் குழு சனிக்கிழமை ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசிலிருந்து விலகுவதென எடுத்த முடிவை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வரவேற்கிறது. இந்த துணிச்சலான முடிவால் அரசியல் அரங்கில் முதல்வர் கலைஞர் இமயமாய் உயர்ந்து நிற்கிறார்.
இந்த முடிவு திமுக கூட்டணிக்கு எந்த வகையிலும் நட்டத்தை ஏற்படுத்தாது. கூட்டணி கட்சியின் மனம் நோகாத வகையில் மிகுந்த பொறுமையோடும், சகிப்புத் தன்மையோடும் தாராளமாக விட்டுக்கொடுத்து அரவணைத்துச் செல்லும் நயத்தக்க நாகரிக அணுகுமுறைகளைக் கொண்டவர் கலைஞர்.
அந்த வகையில் தற்போதைய நெருக்கடி நிலையிலும்கூட பிரச்சினைகளின் அடிப்படையில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு வெளியிலிருந்து ஆதரவு நல்குவோம் என கலைஞர் முடிவெடுத்திருப்பது அவரது அரசியல் நாகரிகத்தை உறுதிப்படுத்துகிறது.
இந்த முடிவால் திமுக தொண்டர்கள் மட்டுமல்ல கூட்டணிக் கட்சியினரும் இரு மடங்கு வீரியத்தோடு தேர்தல் பணியாற்றுகின்ற உந்துதலைப் பெற்றுள்ளனர்.
எனவே திமுக எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலல் மகத்தான வெற்றிபெறும். கலைஞர் மீண்டும் முதல்வர் ஆவார். நாடாளுமன்றத்தில் விடுதலைச் சிறுத்தைகளும் திமுகவோடு இணைந்து செயலாற்றும்.
இவ்வாறு தொல்.திருமாவளவன் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment