துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி, திராவிடர் கழகத் தலைவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்,
திமுக பொருளளரும், துணை முதல் அமைச்சருமான ஆற்றல்மிகு அரிமா சகோதரர் மு.க.ஸ்டாலினின் 59வது பிறந்த நாள் விழா இன்று. இந்த 59 ஆண்டுகளுக்குள்ளேயே 40 ஆண்டுப் பொது வாழ்க்கை கண்ட தொண்டறச் செம்மல் இவர்.
அவர் பதவிகளை நோக்கி சென்றதில்லை என்றாலும், மேயர் பதவி முதல் துணை முதல்வர், கட்சியின் பொருளாளர் போன்ற பல்வேறு பதவிகள் அவரை நோக்கிச் சென்று பெருமை பெறுகின்றன.
சுறுசுறுப்பில் தந்தையை மிஞ்சும் தனயராக உள்ளார். பண்பாட்டில் பலரும் பாராட்டத்தக்க மாமனிதராகவே காட்சியளிக்கின்றார்.
கட்டுப்பாடு காப்பதில், தனது தந்தையாரைக்கூட கட்சியின் தலைவராகவே எப்போதும் கருதி மரியாதை காட்டத் தவறாத மாண்பாளர்.
தொண்டர்நாதனாக தோழர்களின் வற்றாத அன்பைப் பெற்று நாளும் வளரும் நம்பிக்கையின் ஊற்று அவர்.
சூறாவளிச் சுற்றுப்பயணமும் சுயமரியாதைத் கொள்கை உணர்வும் அவரது இயல்புகளாகவே ஆகிவிட்டன. பெரியார் சமத்துவபுரங்களில் என்றும் வாழுபவர் அவர்.
மாற்றாரும் வேற்றாரும் மதித்து மரியாதை காட்டும் மகத்தான தலைவரான அவர்கள், பல்லாண்டு வாழ்ந்து, கலைஞர் தம் பொற்கால ஆட்சி மீண்டும் பூத்திட தன்னை ஒரு போர்த் தளபதியாக மாற்றிக்கொண்டு, வியூகங்களை வகுத்து வெற்றி பெறும் இந்திர ஜித்தாக - மேகநாதனாக - உலாவரும் அவர் வெற்றி வாகை சூடுவார் - வரும் 2011 பொதுத் தேர்தலிலும் என்பது உறுதி. அவரது உழைப்பின் அறுவடையாக மலரப் போவது மீண்டும் திமுக ஆட்சியே. திமுகவின் விலை மதிப்பற்ற கொள்கைச் சொத்து அவர்.
தியாகத் தீயில் புடம் போட்ட லட்சியத் தங்கமும்கூட.
பல்லாண்டுப் பல்லாண்டு வாழ்ந்து தொண்டின் இமயமாய் உயர்ந்திட வாழ்த்தும் கோடானு கோடி இதயங்களுடன் தாய்க் கழகமும் இணைந்து வாழ்த்துக்கிறது. வாழ்க தளபதி. வளர்க, அவர்தம் வெற்றிகள்.
இவ்வாறு கி.வீரமணி தனது அறிக்கையில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment