பெட்ரோல் மீது தமிழக அரசு விதித்துள்ள விற்பனை வரி 30 சதவிகிதத்திலிருந்து மூன்று சதவிகிதம் குறைத்து 27 சதவிகிதம் மட்டுமே வசூலிப்பதென்று முடிவு செய்துள்ளது என்றும், பெட்ரோலைப் பயன்படுத்து வோருக்கு லிட்டர் ஒன்றுக்கு இவ்வாறு விற்பனை வரியைக் குறைப்பதின் காரணமாக ரூ. 1.38 காசு குறையும் என்றும் முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், உலக அளவில் கச்சா எண்ணெயின் விலை உயர்ந்து கொண்டே போவதால், எண்ணெய் நிறுவனங்கள் அதற்கேற்ப பெட்ரோலின் விலையினை உயர்த்தி அறிவிக்கின்றன. இதனால் நடுத்தர மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவதை மனதிலே கொண்டு தமிழக அரசு தன்னால் இயன்ற அளவிற்கு அவ்வப்போது அதற்குரிய விற்பனை வரியினை குறைத்து அறிவிப்பதை நாட்டு மக்கள் நன்கறிவார்கள்.
உதாரணமாக 2006ஆம் ஆண்டில் மத்திய அரசு பெட்ரோலியப் பொருள்களின் விலையை உயர்த்தியபோது தமிழகத்திலே டீசலின் மீதான விற்பனை வரியை 25 சதவிகிதத்திலிருந்து 23.43 சதவிகிதமாகக் குறைத்து அறிவித்தோம். அதுபோலவே, 2008ஆம் ஆண்டு மத்திய அரசு டீசல் விலையை உயர்த்திய போது தமிழக அரசு 23.43 சதவிகிதத்திலிருந்து 21.43 சதவிகிதமாக தனது விற்பனை வரியைக் குறைத்துக் கொண்டது. பெட்ரோலிய பொருள்களின் விலையை மத்திய அரசு உயர்த்தும் போது, மாநில அரசுக்கான நிர்வாகச் செலவும் அதிகமாகிறது.
மத்திய அரசு பெட்ரோல் விலையை உயர்த்த வேண்டிய நெருக்கடிக்கு ஆளாகி உயர்த்துவதால், நடுத்தர மக்கள் குறிப்பாக இரு சக்கர வாகனங்களைப் பயன்படுத்துவோர் பெரிதும் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக தமிழக அரசு பெட்ரோல் மூலம் தனக்குக் கிடைக்கக் கூடிய விற்பனை வரியை ஓரளவுக்கு குறைத்துக் கொள்ள வேண்டுமென்பதை மனதிலே கொண்டு தற்போது பெட்ரோல் மீது தமிழக அரசு விதித்துள்ள விற்பனை வரி 30 சதவிகிதத்திலிருந்து மூன்று சதவிகிதம் குறைத்து 27 சதவிகிதம் மட்டுமே வசூலிப்பதென்று முடிவு செய்துள்ளது. இதனால் ஆண்டு ஒன்றுக்கு தமிழக அரசுக்கு 210 கோடி ரூபாய் வரி இழப்பு ஏற்படும்.
இவ்வாறு தமிழக அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 15 திருநங்கையர் தினம்: கலைஞர் ஆணை
அரவாணிகள் நல வாரியம் தோற்றுவிக்கப்பட்ட ஏப்ரல் 15 ஆம் நாள் திருநங்கையர் தினமாக கடைப்பிடிக்கப்படும் என, முதலமைச்சர் கருணாநிதி ஆணையிட்டுள்ளார்.
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
தமிழகத்திலுள்ள அரவாணிகளுக்கு முழுமையான சமூகப் பாதுகாப்பை அளிப்பதற்குத் தேவையான திட்டங்களை வகுத்துச் சிறப்பான முறையில் செயல்படுத்தவதற்காக அரவாணிகள் நல வாரியம் முதலமைச்சர் கருணாநிதியால், 15.4.2008 அன்று ஏற்படுத்தப்பட்டது.
அரவாணிகளைச் சிறப்பிக்கும் வகையில், இந்த ஆணை வெளியிடப்பட்ட ஏப்ரல் திங்கள் 15 ஆம் நாளை திருநங்கையர் தினம் என அறிவிக்க வேண்டுமென தமிழ்நாடு அரவாணிகள் சங்கம் அரசுக்குக் கோரிக்கை விடுத்தது.
இவ்வாறு தமிழக அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கலைஞருக்கு கேரள மீன்வளத்துறை பாராட்டு
நாட்டுப்படகு மீனவர்களுக்கு லிட்டர் ஒன்று ரூ.25 விலைக்கு மண்ணெண்ணெய் வழங்கும் தமிழக அரசின் திட்டத்தையும், முதல் அமைச்சர் கருணாநிதியையும், கேரள மீன்வளத்துறை அமைச்சர் சர்மா பாராட்டினார்.
இதுகுறித்து அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாடு மீன் வளர்ச்சிக் கழகத்தின் தலைவர் அடைக்கலம், திருவனந்தபுரம் சென்று கேரள அரசு தலைமைச் செயலகத்தில் கேரள மீன்வளம் மற்றும் பதிவுத்துறை அமைச்சர் எஸ்.சர்மாவை சந்தித்து, தமிழகத்திலிருந்து கேரளா பகுதிக்கு சென்று மீன் பிடித்து வரும் தமிழக நாட்டுப்படகு மீனவர்களுக்கும், மானிய விலையில் மாதம் 200 லிட்டர் வீதம் மண்ணெண்ணெய் வழங்கிட தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது என்றும், அதற்கு ஒத்துழைப்பு நல்குமாறும், கேரள மீன்வளத்துறை அலுவலர்களுக்கு கருத்துரை வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
அப்போது, நாட்டுப்படகு மீனவர்களுக்கு லிட்டர் ஒன்று ரூ.25 விலைக்கு மண்ணெண்ணெய் வழங்கும் தமிழக அரசின் திட்டத்தையும், முதல் அமைச்சர் கருணாநிதியையும், கேரள மீன்வளத்துறை அமைச்சர் சர்மா வெகுவாக பாராட்டினார். அத்துடன் தமிழக அரசின் திட்டத்தை முன்னோடியாகக் கொண்டு கேரள மாநில நாட்டுப்படகு மீனவர்களுக்கும் மத்திய அரசின் உதவியோடு தமிழகத்தைப் போன்று மண்ணெண்ணெய் வழங்குவதற்கு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது என்று தெரிவித்தார்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment