கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Sunday, March 13, 2011

ஊரக வளர்ச்சித் துறையில் திமுக அரசின் சாதனைகள் - முதல்வர் கருணாநிதி அறிக்கை


ஊரக வளர்ச்சித் துறை மூலம் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு சுழல் நிதி வழங்கியதில் திமுக அரசு சாதனை படைத்துள்ளது என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
இதுகுறித்து முதல்வர் 11.03.2011 அன்று வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழ்நாட்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் பயன்பெறுவோரில், 82% பெண்கள். 56% தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடி யினர். ஊரகப் பகுதிகளில் பெண் தொழிலாளர்களுக்கான ஊதியம் கணிசமாக உயர்ந்துள்ளது. இத்திட்டத்தை தமிழ்நாடு சிறப்பாக செயல்படுத்தி வருகிறது என்று உச்ச நீதிமன்றம் பாராட்டியுள்ளதோடு, மற்ற மாநிலங்கள் முன்மாதிரியாகக் கொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளது.
தேசிய அளவில் தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டத்தை மிகச் சிறப்பாக செயல்படுத்திய 22 மாவட்டங்களில் கடலூர், சிவகங்கை மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்கள் இடம்பெற்று 2.2.2009ல் புதுடில்லியில் 2007&08ம் ஆண்டிற்கான விருதைப் பெற்றுள்ளன. நாகப்பட்டினம் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களைப் போன்ற 26 மாவட்டங்கள், தேசிய அளவில் 2008&09ல் விருதுகள் பெற்றுள்ளன.
2009&2010ல் தேசிய விருதினை திருவண்ணாமலை மாவட்டம் பெற்றுள்ளது. இத்திட்டத்தின் செயல்பாட்டிற்கென 5098 புதிய பணியிடங்கள் ஏற்படுத்தப்பட்டு நிரப்பப்பட்டுள்ளன.
சமூக நீதியை மேம்படுத்தவும், சாதி சமயமற்ற சமத்துவ சமுதாயத்தை உருவாக்கவும் மக்கள் ஒற்றுமையுட னும், சகோதரத்துவத்துடனும் வாழ வேண்டும் என்ற பெரியாரின் செய்தியை பரப்பவும், இந்த அரசு 1997&98ல் 145 சமத்துவபுரங்களை அமைத்துள்ளது. மொத்தம் 240 சமத்துவபுரங்களில் இதுவரை 210 சமத்துவபுரங்கள் திறக்கப்பட்டுள்ளன. எஞ்சிய பணிகளும் முன்னேற்றத்தில் உள்ளன.
2006ம் ஆண்டுக்குப் பின் இத்திட்டத்தின் கீழ், 2,337 கோடியே 42 லட்சம் ரூபாய்ச் செலவில் 4 லட்சத்து 26 ஆயிரத்து 527 குடியிருப்புகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. இவற்றோடு, 79 ஆயிரத்து 481 கச்சா வீடுகள் 113 கோடியே 22 லட்சம் ரூபாய்ச் செலவில் கட்டப்பட்டுள்ளன.
2007&2008 முதல் பராமரிப்பின்றி பழுதடைந்த நிலையிலிருந்த ஏறத்தாழ 22,000 ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளிகள் மற்றும் 4,500 நடுநிலைப் பள்ளிகளில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ள அரசு ஆணையிட்டு, 24649 பள்ளிகளில் 353.11 கோடி செலவில் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நமக்கு நாமே திட்டத்தில் கீழ் 7254 பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
2006க்குப் பிறகு பிரதம மந்திரி கிராமச் சாலைகள் திட்டம், நபார்டு ஊரக உள்கட்டமைப்பு வளர்ச்சி நிதி, 12வது நிதிக்குழு மானியம் மற்றும் இதரத் திட்டங்களின்கீழ், 29235 கி.மீ நீளச் சாலைப் பணிகள் முடிக்கப்பட்டு, எஞ்சிய பணிகள் முன்னேற்றத்தில் உள்ளன.
2008&2009ல் ஊரக கட்டமைப்புத் திட்டம் என்ற புதிய திட்டம் 350 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்படி, ஒவ்வொரு ஆண்டும் 380 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பல்வேறு அடிப்படை வசதிகளான சிமென்ட் சாலைகள், தார் சாலைகள், மயான வசதி, தெரு விளக்குகள், கட்டிடப் பணிகள் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 2010&2011ல் 380 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் 47478 பணிகள் நிறைவேற்றப்படுகின்றன.
2010&2011ல் ஊரகப் பகுதிகளில் ஊராட்சி அமைப்புகளுக்குச் சொந்தமான கட்டிடங்களை பழுது பார்க்கவும், பராமரிக்கவும் 100 கோடி ரூபாயினை அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. அதன்படி, 10907 பணிகள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன.
தமிழக சட்டமன்ற உறுப்பினர்கள், தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் 2006க்குப்பின் 1727.25 கோடி செலவில் 1,59,583 பணிகள் எடுத்துக் கொள்ளப்பட்டு 1 லட்சத்து 50 ஆயிரத்து 263 பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.
முழு சுகாதார இயக்கம் தமிழகத்தில் சிறப்பாகச் செயல்படுத்தியதற்காக 2006&2007 முதல் 213 கிராம ஊராட்சிகள் நிர்மல் கிராம் புரஸ்கார் விருதுகளைப் பெற்றன. இத்திட்டத்தைச் சிறப்பாக நிறைவேற்றி 2007&2008ல் தமிழகம் இந்தியாவில் இரண்டாம் இடம் பெற்றது.
உதவி இயக்குனர் முதல் மக்கள் நலப் பணியாளர்கள் வரை இருந்த 17,819 காலிப் பணியிடங்களை நிரப்பிட ஆணைகள் பிறப்பிக்கப்பட்டு, 17,549 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. மீதமுள்ள 270 காலிப் பணி இடங்களை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஊரக வளர்ச்சித் துறையில் தொழில்நுட்பப் பிரிவில் 3380 அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். கிராம ஊராட்சிகளில் பணிபுரியும் முழு நேர ஊராட்சி உதவியாளர்கள், பகுதி நேர ஊராட்சி எழுத்தர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கப்பட்டுள்ளது.
கிராம ஊராட்சி உதவியாளர்கள் நிலை 2 பணியிடங்களை ஊராட்சி உதவியாளர் பணியிடங்களாக உயர்த்தியதால் 11,000 பேர் பயனடைந்துள்ளனர். இத்துறையின் 2,544 விரிவாக்க அலுவலர் பணியிடங்கள், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் நிலைக்கு உயர்த்தப்பட்டுள்ளது. இதுவரை 280 அலுவலக உதவியாளர் பணியிடங்களும், 56 இரவுக் காவலர் பணியிடங்களும் மக்கள் நலப் பணியாளர்களைக் கொண்டு நிரப்பப்பட்டுள்ளன.
கிராம ஊராட்சிகளில் பணிபுரியும் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி, விசைப் பம்பு இயக்குபவர்கள், சுகாதாரப் பணியாளர்கள், மக்கள்நலப் பணியாளர்களுக்கு 1000 ரூபாய் வீதம் போனஸ் வழங்கப்பட்டுள்ளது.
முந்தைய அ.தி.மு.க. ஆட்சியில் டிஸ்மிஸ் செய்யப்பட்ட 12,653 மக்கள் நலப் பணியாளர்களும், 1.6.2006 முதல் மீண்டும் நியமனம் செய்யப்பட்டனர். காலமுறை ஊதியத்தின்கீழ் கொண்டு வரப்பட்டனர். 12,653 பேர் பயன் பெற்றுள்ளனர்.
மகளிர் மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் 31.12.2010 வரை 75 லட்சத்து 66,497 மகளிரை உறுப்பினராகக் கொண்ட 4 லட்சத்து 88,970 சுய உதவிக் குழுக்கள் உருவாக்கப்பட்டு உள்ளன. இவர்களின் மொத்த சேமிப்பு ரூபாய் 2658 கோடி ஆகும். இவற்றுள் 26 லட்சத்து 94,682 மகளிரை உறுப்பினராகக் கொண்ட 1 லட்சத்து 75,493 புதிய சுயஉதவிக் குழுக்கள் 2006க்குப்பின் உருவாக்கப்பட்டன. சுயஉதவிக் குழுக்கள் அமைக்கப்படாத பகுதிகளில் குழுக்கள் அமைப்பதும் சுயஉதவிக் குழுவில் இதுவரை இணைக்கப்படாத மகளிரை குழுக்களில் இணைப்பதும் அரசின் குறிக்கோளாக உள்ளது.
அனைத்துக் கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தில் கிராம ஊராட்சிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு 2006&07 மற்றும் 2007&08ம் ஆண்டுகளில் புதிய சுய உதவிக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனத்தால் 43,304 சுயஉதவிக் குழுக்கள் தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட தொழிலாளர்களைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளன. 23,886 சுயஉதவிக் குழுக்கள் கிராம ஊராட்சிகளிலும், 41,373 சுயஉதவிக் குழுக்கள் நகர்ப்புறத்தில் குடிசைப்பகுதிகளில் வசிப்பவர்களைக் கொண்டும் அமைக்கப்பட்டுள்ளன.
நகர்ப்புற சுயஉதவிக் குழுக்களுக்குச் சுழல் நிதி வழங்கும் திட்டத்தினை அறிமுகப்படுத்தி, 5 ஆண்டுகளில் 96,699 குழுக்களுக்கு ஸீ96.70 கோடி மானியமாக வழங்கப்பட்டது. ஆண்டுதோறும் பொதுவாக 25,000 முதல் 30,000 சுய உதவிக் குழுக்களுக்கு மட்டுமே சுழல்நிதி வழங்கப்பட் டது.
ஆனால், 2008&09ம் ஆண்டில் அதுவரை சுழல்நிதி பெறாத தகுதி வாய்ந்த ஒன்றரை லட்சம் குழுக்களுக்கும் வங்கிக் கடனுடன் 150 கோடி ரூபாய் சுழல்நிதி வழங்கப்பட்டது. 2009&10ல் 69,000 சுயஉதவிக் குழுக்களுக்கு சுழல்நிதி வழங்கப்பட்டது.
2010&11ல் 50,000 ஊரக சுய உதவிக் குழுக்களுக்கும் 20,000 நகர்ப்புற சுய உதவிக் குழுக்களுக்கும், சுழல்நிதி மானியம் வழங்க 70 கோடி ரூபாய் அனுமதிக்கப்பட்டு, இதுவரை, 63,967 சுயஉதவிக் குழுக்களுக்கு சுழல்நிதி வழங்கப்பட்டுள்ளது.
30.9.2010 தேதிய அளவில், சுய உதவிக் குழுக்களுக்கு 1989ம் ஆண்டு முதல் ரூபாய் 9521.37 கோடி வங்கிக்கடனாக வழங்கப்பட்டுள்ளது. இதில் ஜூன் 2006க்குப் பின் ஸீ7756.13 கோடி வழங்கப்பட்டுள்ளது. இது வழங்கப்பட்ட மொத்தக் கடனில் 81 சதவீதமாகும்.
2010&11ல் 62 மாவட்ட பொருட்காட்சிகளும், 134 வட்டார பொருட்காட்சிகளும் நடைபெற்றது. இதில் மொத்த சுய உதவிக் குழுக்களும் தயாரித்த பொருட்களின் விற்பனைத் தொகை ஸீ34.88 லட்சம்.
சென்னை வள்ளூவர் கோட்டம் அருகில் ஸீ15.33 கோடி செலவில் சுய உதவிக்குழுக்களின் பொருட்களை சந்தைப்படுத்துவதற்கு நிரந்தர சந்தை வளாகம் கட்டப்பட்டு அதற்கு அன்னை தெரசா மகளிர் வளாகம் எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. மேலும் இதைப்போல ஒரு மாவட்டத்திற்கு மூன்று என்ற விகிதத்தில் 86 கிராம விற்பனை மையங்கள் ஸீ12.90 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளன.
பயிற்சித்தொகை ரூபாய் 7.50லிருந்து ரூபாய் 45 ஆக உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் ஊக்குநர் மற்றும் பிரதிநிதிகளுக்கான பயிற்சித்தொகை 20ல் இருந்து ரூபாய் 45 ஆக உயர்த்தி வழங்கப்படுகிறது.
சிறப்பாகச் செயலாற்றும் மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு, மாநில மற்றும் மாவட்ட அளவிலான மணிமேகலை விருதுகளை அரசு அறிவித்துள்ளது. மாநில விருதுத் தொகையினை ஒரு லட்சத்திலிருந்து 3 லட்சமாகவும், சிறந்த சுய உதவிக் குழுக்களுக்கான விருதுத் தொகை 50 ஆயிரத்திலிருந்து ஒரு லட்சமாகவும் உயர்த்தியுள்ளது.
மாவட்ட அளவில் சிறந்த ஊராட்சி அளவிலான கூட்டமைப்பிற்கான விருதுத் தொகை 50 ஆயிரத்திலிருந்து ஒரு லட்சம் ஆகவும், சிறந்த சுயஉதவிக் குழுக்களுக்கான விருதுத் தொகை 10 ஆயிரத்திலிருந்து 25 ஆயிரமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
இவ்வாறு முதல்வர் கருணாநிதி அறிக்கையில் கூறியுள்ளார்.

1 comment: