பொதுவுடைமை இயக்கத்தலைவர் ஜீவாவின் பேத்தியும், ஜீவா மணிக்குமாரின் மகளுமான பத்மா உஷாவுக்கும், தருமபுரி மாவட்டம், கா.மாதனின் மகன் மா.ராமமூர்த்திக்கும் சென்னையில் திருமணம் 07.02.2011 அன்று நடந்தது.
திருமணத்தை முதல்வர் கருணாநிதி தலைமை தாங்கி நடத்திவைத்தார். பின்னர் விழாவில் பேசிய முதல்வர் கலைஞர்,
காலையில் எழும்போதே உடல் நலிவோடு எழுந்து இந்த நிகழ்ச்சிக்கு வரமுடியுமோ என்ற அய்யப்பாட்டோடு மருத்துவர்களை அழைத்து, சிகிச்சை பெற்று, எப்படியும் இந்த மணவிழா நிகழ்ச்சியிலே கலந்து கொண்டே தீர வேண்டுமென்ற அந்த உந்துதலோடு உங்களையெல்லாம் சந்திக்கும் இந்த வாய்ப்பை நான் பெற்றிருக்கிறேன்.
ஜீவாவுக்கும், எனக்கும் உள்ள உறவு, தொடர்பு, நட்பு, நாகரீக பண்பாட்டோடு கூடிய வாக்குவாதங்கள் இவைகள் எல்லாம் என்றைக்கும் அழிக்க முடியாதவை. அவருடைய இல்லத்தில் நடைபெறுகின்ற இந்த மணவிழாவிலே எப்படியும் நான் கலந்து கொள்ள வேண்டுமென்று நான் எண்ணிய காரணத்தால் தான், மிகுந்த நலிவோடு இரவு துநுக்கத்திலே ஆழ்ந்த நான், காலையிலே விழிக்கும்போதும் அதே உணர்வோடு எழுந்து மருத்துவர்களின் உதவியோடு இங்கே வந்திருக்கிறேன்.
நீண்டநேரம் நான் உரையாற்ற முடியாது என்பதை உங்களுக்கு நான் சொல்லத்தேவையில்லை. ஜீவா தமிழகத்திலே உயிர்நாதமாக ஒரு காலத்திலே விளங்கி, இன்றைக்கும் அவர் அன்றைக்கு விதைத்த விதை முளைத்து, செடியாகி, மரமாகி அந்த ஆலமரத்தின் விழுதின் கீழ் எத்தனையோ பேர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அப்படி வாழ்கின்றவர்கள் சிலரை நான் இங்கே காண முடியவில்லை. இருந்தாலும் நான் ஜீவாவுக்கு ஆற்ற வேண்டிய கடமையை இந்த மணவிழாவிற்கு வந்து மணமக்களை வாழ்த்துவதின் மூலம் மணமக்கள் இல்வாழ்க்கையை தொடங்கி வைப்பதின் மூலம் ஆற்றுவதாக நான் கருதுகிறேன்.
இந்தக் குடும்பத்திலே இன்று நேற்றல்ல, நீண்ட நாட்களாக எனக்கு உள்ள பற்றும், இந்தக் குடும்ப விழா பலவற்றில் நான் கலந்து கொண்டதையும் நீங்கள் எல்லாம் நன்றாக அறிவீர்கள். ஏற்கனவே ஒரு திருமண விழாவிலே நான் கலந்து கொள்ளும்போது இந்த குடும்பத்தாருக்கும் எனக்கும் உள்ள உறவுகளையெல்லாம் எனக்கு முன்னால் பேசிய கம்ழூனிஸ்டு கட்சி நண்பர்கள் எல்லாம் எடுத்துச் சொன்னார்கள். நான் உள்ளபடியே வருத்தப்படுகிறேன். ஒரு பெரிய தலைவர் தன்னால் உருவாக்கப்பட்ட பல தளபதிகள் அவருடைய குடும்பத்தை தாங்கிப் பிடிப்பார்கள் என்ற நம்பிக்கையோடு தான் மறைந்து போகிறார்கள்.
ஆனால் அப்படி தாங்கிப் பிடிக்க வேண்டிய கடமையை அந்த குடும்பத்துக்கு செய்ய வேண்டிய உதவியை மறந்து விட்டவர்கள் இன்னும் நாட்டிலே இருக்கத் தான் செய்கிறார்கள். அவர்களை எல்லாம் மறப்போம், மன்னிப்போம் என்று அண்ணா அவர்களுடைய மொழியிலே நான் சொல்ல விரும்புகிறேன். ஜீவாவின் பொதுவுடைமை கருத்துக்களை பொறுத்தவரை எனக்கு அமைந்த ஆசிரியர்களில் ஒருவர். நானும் அவரும் சண்டை போட்டுக் கொண்டே பொதுவுடைமை இயக்கத்தை தமிழ்நாட்டில் பல பகுதிகளில் வளர்த்தவர்கள்.
அவர் எழுத நான் எழுத அவர் பேச நானும் அவருடைய பேச்சை மறுத்துப்பேச இப்படி ஒருவருக்கு ஒருவர் கருத்துக்களை மாறி மாறி மேடைகளில், ஏடுகளில் எடுத்தாண்டவர்கள். அப்படிப்பட்ட ஜீவா, நான் அவரைப்பற்றி எழுதியதையோ, அல்லது அவர் என்னைப்பற்றி எழுதியதையோ பேசுவதைப்பற்றியோ நாங்கள் இருவரும் அதைப்பெரிதாக எடுத்துக்கொள்ளாமல், சொல்லப்பட்ட கருத்துக்களை மாத்திரம் பெரிதாக எடுத்துக்கொண்டு நாங்கள் கொண்ட நட்பை ஆழமான நட்பை என்றைக்கும் அகற்றிக்கொண்டதில்லை. அத்தகைய ஒரு நல்ல குடும்பத்தில் கொள்கைக் குடும்பத்தில் நடைபெறுகின்ற இந்த நிகழ்ச்சியிலே நான் கலந்து கொள்வது என்னைப் பொறுத்தவரையிலே தலையாய சிறப்பு வாய்ந்த ஒரு நிகழ்ச்சி என்பதை நான் சொல்ல விரும்புகிறேன்.
"என்ன தம்பீ, எப்படி இருக்கிறாய்?'' என்று அவர் கேட்கும்போதும், "நல்லா இருக்கண்ணன்'' என்று நான் சொல்லும்போதும் இருவருமே அந்தக்காலத்திலே இழைந்த அந்த அன்பும் உறவும் நட்பும் இன்றைக்குள்ள அரசியல் கட்சிகளிடையே மலர்ந்தால், மணம் வீசினால் அந்த நாகரீகத்தை எல்லோரும் பெற்றால் கட்சித்தகராறுகள் வேறு கொள்கைப்பூசல்கள் வேறு லட்சிய வேறுபாடுகள் வேறு இவைகளையெல்லாம் மறந்துவிட்டு நட்பு வேறு என்ற அந்த அரசியல் நாகரிகத்தை உலகத்திலே (மன்னிக்க வேண்டும்) தமிழ்நாட்டைத் தவிர வேறு எல்லா இடங்களிலும் பெற்றிருக்கிறார்கள்.
தமிழ்நாட்டிலே தான் அந்த உறவு மனப்பான்மை, அந்த நேச மனப்பான்மை, அந்த நாகரிகம் இல்லை. தந்தை பெரியாரும், மூதறிஞர் ராஜாஜியும் கிராமங்களிலே சொல்வார்களே, ஜென்ம விரோதிகள் என்று அது போல இருந்தாலுங் கூட ராஜாஜி மறைந்தபோது, அந்த நிகழ்வுக்காக கண்ணீர் வடித்தவர் எங்கள் தந்தை பெரியார் ஆவார்கள். அப்படி பல தலைவர்கள் தமிழகத்திலே அரசியல் நாகரிகத்தை வளர்த்திருக்கிறார்கள்.
அந்த குடும்பத்துச்செல்வங்கள் அவருடைய மகன் ஆனாலும், பேரன் ஆனாலும், பேத்தி ஆனாலும் இவர்கள் எல்லாம் என்னுடைய குடும்பத்துச் செல்வங்களைப் போல இன்றைக்கும் நான் அவர்களை கருதுகிறேன். அப்படித் தான் அவர்களை நான் பார்க்கிறேன். ஜீவாவின் குடும்பம் வேறு என்னுடைய குடும்பம் வேறு என்று நான் என்றைக்கும் கருதுபவன் அல்ல. அந்தக் குடும்பத்திலே உள்ள அனைவரையும் நீங்கள் கேட்டாலே தெரிந்து கொள்ளலாம். அந்த அளவிற்கு நான் அரசுப் பொறுப்பிலே இருக்கின்ற இந்த காலத்திலும் இல்லாத காலத்திலும் கூட அந்த குடும்பத்தோடு நெருங்கிப் பழகியவன்.
அத்தகைய பெரும் புகழ் வாய்ந்த வீரராக தீரராக தியாக செம்மலாக எதற்கும் கலங்காத அஞ்சா நெஞ்சனாக கொள்கை மட்டுமே பெரிது கோடிகோடியாகக் கொட்டிக் கொடுத்தாலும், எத்தனை வரவேற்புகள் மாளிகைகளில் இருந்து கிடைத்தாலும், அவைகளை யெல்லாம் துச்சமென மதிக்கக்கூடிய அருமைத்தலைவர் ஜீவா ஆவார்.
அப்படிப்பட்ட உணர்வு தான் இன்றைக்கும் மணிக்குமாருடைய வேண்டுகோளை ஆணையாக ஏற்று இந்த விழாவிலே கலந்து கொள்ளக் கூடிய வாய்ப்பை எனக்கு வழங்கியிருக்கிறது என்று கூறி, மணவிழா இன்பம் காணுகின்ற நம்முடைய மணமக்கள் பத்மா உஷாவும், ராமமூர்த்தியும் பெறுவார்கள், பெற வேண்டும், நிச்சயம் பெறுவார்கள் என்ற நம்பிக்கையோடு வாழ்க மணமக்கள், எல்லா வளமும் பெற்று வாழ்க என்று வாழ்த்தி நான் என்னுடைய உரையை நிறைவு செய்கின்றேன் என்றார்.
No comments:
Post a Comment